நூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி
Encyclopaedic Dictionary of Library & Information Science
By Arulanantham Srikanthaluxmy ©
சொற்றொகுதி : அகராதி
Dictionary

ஒரு மொழியில் வழங்குகின்ற சொற்களை அகரவரிசையில் நிறுத்தி அவற்றிற்கு பொருள் கூறும் நூல். ஒருமொழியின் சொல் வளம், அதன் பொருள் நயம், அவை பயன்படுத்தப்படும் விதம், அவற்றின் இலக்கணக் கூறுகள், அவற்றின் வரலாற்று மூலம் முதலிய இன்னோரன்ன அம்சங்களை அகரவரிசையில் தந்து நிற்பது அகராதி (அகத்தியலிங்கம்). அகராதி பொதுவாக மொழி அகராதி பொருள் அகராதி என  இரு வகைப்படும். மொழி அகராதியானது, வரலாற்று அகராதி, தற்கால விளக்க அகராதி  என மேலும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றது. வரலாற்று அகராதியானது ஒப்பியல் அகராதி, சொற்பிறப்பியல் அகராதி, வரலாற்று முறைப்பொருள் அகராதி  என மூவகைப்படும். தற்கால விளக்க அகராதியானது பொது அகராதி, சிறப்பு அகராதி என இருவகைப்படும். பொது அகராதியானது நிலை மொழி அகராதி, பெருவிளக்க அகராதி எனவும், சிறப்பு அகராதியானது வரைவில் சேர்க்கை அகராதி, மரபுச்சேர்க்கை அகராதி எனவும்  மேலும் இருவகைப்படும். வரைவில் சேர்க்கை அகராதி *கிளைமொழி அகராதி, *கலைச்சொற்றொகுதி, *நூல் அகராதி, *சொல்லடைவு *சொற்பொருட்குறிப்பு அகராதி (சொல்லிசைவுத்தொகுதி) *குறுக்க விளக்க அகராதி என மேலும் பல வகைப்படும்.

சொற்களின் அல்லது சொற்றொடர்களின் பொருளைக் கண்டுபிடிக்க உதவுதல், ஒரு சொல்லின் எழுத்தாக்கம், அசையொலிப்பு (syllabication) ஒலிப்பின் அசையிடையே நிகழும் இடைத்தயக்கநிலை (hyphenation) போன்றவற்றைச் சரிபார்ப்பதற்கு உதவுதல், ஒரு சொல்லின் உச்சரிப்பைச் சரிபார்ப்பதற்கு உதவுதல், ஒரு சொல்லின் மூலம், அது பெறப்பட்ட முறை போன்ற விவரங்கள் உட்பட்ட வரலாற்றை அறிவதற்கு உதவுதல், தொன்மை வாய்ந்த சொற்கள், வழக்கற்றுப்போன சொற்கள், அரிய சொற்கள், கொச்சைச் சொற்கள், புதிய சொற்கள் போன்றவற்றின் பயன்பாட்டைத் தீர்மானிக்க உதவுதல், பேச்சு வழக்குச் சொற்களைச் சுட்டுவதற்கு உதவுதல், ஒத்தசொல், எதிர்ச்சொல், ஒரு பொருள் பல சொல் போன்றவற்றை அறிவதற்கு உதவுதல், ஒரு சொல்லின் குறுக்க விளக்கம், தலைப்பெழுத்துச் சொற்கள், குறியீடுகள், அடையாளங்கள் போன்றவற்றை அறிவதற்கு உதவுதல், ஆறு, மலை, நகரம் போன்ற பிரதான இடப்பெயர்களைச் சுட்டுவதற்கு உதவுதல், பிரதான நபர்களின் வரலாற்றை அறிய உதவுதல், அந்நிய மொழிப் பதங்களை அறிய உதவுதல், மேற்கோள்களை வழங்குதல்  போன்ற பலதரப்பட்ட பயன்பாடுகளை இது கொண்டிருக்கிறது.

அகரவரிசைமுறை வழிமுறை
Index
அகராதிச் சொற்பொருளியல்
முற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333