புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 10, 11, 12, 13, 14, 15 )
காலங்காலமாக வரும் கற்பனை நாடுகளும், வள்ளுவர் காட்டும் வையத்துச் சுவர்க்கமும்
வா. செ. குழந்தைசாமி
முன்னைத் துணைவேந்தர், இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

 ‘உட்டோப்பியா’ (utopia) என்பது கிரேக்க மூலத்தைக் கொண்டது. அதற்கு nowhere ‘எங்கும் இல்லாதது’ என்பது பொருள். நமது முன்னோர்களின் “இல்லது, இனியது, நல்லது”, அதாவது இல்லாத ஒன்று; அது இருந்தால் நல்லதாகும் என்ற தத்துவம் ஏறத்தாழ Utopia என்பதன் தமிழ்ப் பதிப்பாகும். மனிதர்கள் தம்மினும் தம் உலகினும் உயர்ந்த நிலையைப்பற்றி எப்பொழுதும் சிந்தித்திருக்கிறார்கள். அவற்றை நம்பியும் இருக்கிறார்கள். மனிதரின் உயர்ந்தவர் - தேவர்; உலகின் சிறந்த இடம் - தேவலோகம் (சுவர்க்கம்) என்பன அத்தகு சிந்தனையின் விளைவே.

துறக்கம் என்பதேன் சுவர்க்கம் என்பதேன்
இறக்கும் நாள் வரை இன்னல் ஏன் புவி     
நமக்கின்றுள்ளது நாம் அதை மாண்புற
அமைப்பதல்லவோ அறிவின் பாலது

 இருக்கின்ற உலகைத் தேவர் உலகு ஒப்ப அமைப்பதே முறை என்று நம்பியவர்கள் கற்பனை நாடுகளைச் சித்திரித்தனர். சற்றுப் பரவலாக அறிஞர்கள் மன்றத்தில் அடையாளம் காணப்பட்ட கற்பனை நாடுகள் வருமாறு:

  • பிளேட்டோ [Plato 427?BC - 347BC] The Republic.
  • தாமஸ் மோர் [Sir Thomas More 1478 - 1535] Utopia.
  • பிரான்சிஸ் பேகன் [Francis Bacon 1561 - 1626] - New Atlantis [புது அட்லான்டிஸ்].
  • தோமாஸோ கேம்ப்பநெல்லா [Tommaso Campanella 1568 - 1639] - City of the Sun [ஞாயிறு நகர்].
  • ஜொஹான் வேலன்டைன் ஆந்த்ரியே [Johann Valentin Andreae]; கிறிஸ்ட்டியானோபோலிஸ் [Christianopolis] 1619.
  • வள்ளுவர் குறள் கி.மு. முதல் நூற்றாண்டு.

 இக் கற்பனை நாடு ஒவ்வொன்று குறித்தும் அடிப்படைக் குறிப்புகளை இப்போது காணலாம்.

பிளேட்டோவின் குடியரசு

  • ஒரு நகரை மட்டும் அவர் கருதுகிறார். ஏறத்தாழ, 5000 மக்கள் தொகை கொண்டது. ஒருவர் பேசினால் ஒலிபெருக்கி இல்லாது அனைவரும் கேட்க வேண்டும். முக்கிய உறுப்புகள்: 
    1. ஆட்சி செய்பவர்கள் [Guardians, Rulers]
    2. போர் வீரர்கள் [Warriors]
    3. வினைஞர்கள் [Workers]
  • நகரம்; நகரைச் சுற்றி விளைநிலம்; அவர் கருதுவது வேளாண்மை நாகரிகம்.
  • அவரவர் தகுதிக்கேற்ற இடம், தகுதிக்கேற்ற பணி என்பதுதான் நீதி.
  • இன்பம் செயலில்: சோம்பல் வாழ்வில் இல்லை.
  • அவர் விரும்பியது Democracy அல்லது Aristocracy எனலாம்.
  • ஆள்பவர்கள் காவலர்களிலிருந்து வரும் தத்துவ அறிஞர்கள்.
  • காவலர்கள் வாழும் இடம் பொது; மனைவிகளும் பொதுவானவர்கள்.
  • குழந்தைகள் செவிலியர்களால் வளர்க்கப் படுவார்கள்; பெற்றோரை அவர்களுக்கு அடையாளம் தெரியாது.
  • ஊனர்கள், தீராத நோயாளிகள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் ஊனமாகப் பிறந்த குழந்தைகளும் புறக்கணிக்கப்படுவார்கள்.
  • மக்கள் பிறப்பிலேயே தங்கம் அல்லது வெள்ளி அல்லது பித்தளை அல்லது இரும்பு போன்றவர்கள். பித்தளை அல்லது இரும்பு போன்றவர்கள் உடலுழைப்பை மேற்கொள்வார்கள். தங்கம் போன்றவர்கள் ஆள்பவர்கள்.
  • அறிவிலும் உடல் அமைப்பிலும் சிறந்த ஆண்களும் பெண்களும் கூடுவதற்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் கல்வியின் மூலமும் சிறந்த மக்கள் இனத்தை உருவாக்கலாம்.
  • கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், ஓவியர்கள் போன்றோரை அனுமதிக்கவில்லை. பிளேட்டோ உணர்ச்சிவழியான அணுகுமுறையைத் தவிர்த்தார். 

தாமஸ் மோர் ( Thomas More ) Utopia

  • உட்டோப்பியா என்பது 200 மைல் அகலமுள்ள பிறை வடிவம் கொண்ட தீவு. 54 நகரங்கள் இதில் உள்ளன. ஒரு நகரத்தின் அதிகார எல்லை 24 மைல்.
  • வேளாண்மைப் பொருளாதாரம்; கோழிப் பண்ணை. வேளாண்மைத் தொழில் பொது; 2 ஆண்டு பண்ணை வாழ்வு கட்டாயம்; அவரவர் தொழில் தச்சு வேலை, நெசவு நெய்தல் போன்றன; எல்லாத் தொழிலும் சமம்.
  • 6 மணி நேரம் பணி; 8 மணி நேரம் உறக்கம்.
  • மக்கள் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.அவர்கள் ஓர் இளவரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.அவர் வாழ்நாள் முழுவதும் ஆள்கிறார். நகருக்கு ஓர் ஆட்சிப் பேரவை.
  • இது எல்லோர்க்கும் எல்லாம் என்று இருக்கும் பொதுவுடைமை நாடு. எதற்கும் விலை இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நகரில் சந்தைப் பகுதியில் கொண்டுவந்து குவிக்கப்படுகிறது. அவரவர்கட்கு வேண்டிய பொருள்களை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்.
  • தாழ்ந்த தொழில்கட்கு அடிமைகள் உள்ளனர்.
  • விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. மறுமணம் அனுமதிக்கப்படுவதில்லை. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்கள் அம்மண நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • உட்டோப்பியாவாசிகளின் குறிக்கோள்: இந்த உலகில் இயற்கையொடு இணைந்ததான, உண்மையானதான இன்பவாழ்க்கை.
  • உடல் தொடர்பான இன்பம்: ஆரோக்கியமான வாழ்வு, நல்ல உணவு, நல்ல இசை, இனப் பெருக்கத்திற்கான பால் உறவு.
  • மனம் தொடர்பான இன்பம்: கல்வி அறிவு, உண்மை தேடுதல், ஆழ்ந்த சிந்தனை, மகிழ்ச்சியான நினைவுகள்.
  • உறவுக்கு முக்கியமான இடம்.
  • எல்லாத் தொழிலும் சமம்; உயர்வு தாழ்வு இல்லை என வலியுறுத்துகிறார். என்றாலும், அடிமைகள் உண்டு.
  • போர் வீரர்களாகக் கீழ்மக்கள், அடிமைகள் பயன்படுத்தப்படுவர்.

பிரான்ஸிஸ் பேகன்: புது அட்லான்ட்டிஸ்

  • இது ஒரு தீவு; சலோமனா (Salomana) என்ற அரசரால் உருவாக்கப்பட்டது. Salomana இல்லம் அல்லது College என்று அழைக்கப்படுகிறது. College ஓர் ஆய்வாளர் கூடம்.
  • 12 ஆண்டுகட்கு ஒரு முறை ஆய்வுகட்காக இரு கப்பல் பயணம்; பேகன் பொதுவாகக் கலைகள், அறிவியல்கள், உற்பத்திகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
  • Inductive Logic, Investigation அவர் பங்களிப்பு.
  • அடுத்து ஒரு குடும்பத்தில் மூத்தவருக்கு மிக உயர்ந்த இடம்;ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மூன்று வயதுக்கு மேற்பட்டவராக முப்பது சந்ததியினர் இருப்பின் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
  • மன்னரின் தூதுவர் வந்து அவருக்கு எடுக்கப்படும் விழாவில் மரியாதை செய்கிறார்.
  • பலதார மணம் இல்லை; வைப்பாட்டிகள் இல்லை;கற்பு நெறியிலிருந்து விலகினால் கடுமையான தண்டனை. பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம்.
  • அறிவியல் ஆய்வுகள் பெரிய அளவில் நடைபெறுகின்றன. Dethrones deductive logic. Devalues Aristotle.
  • மருத்துவம்,பல வகையான செடிகொடிகளை உருவாக்கும் வேளாண்மை;காகிதம், பட்டு போன்ற பொருள்கள் தயாரிப்பு; ஒளிகளில் சோதனை; தொலைநோக்கிக் கண்ணாடி போன்றவை உள்ளன.
  • விதைகளின்றிச் செடிகள்; வேகமான வளர்ச்சி; கணித நிபுணர்கள் உளர். எதிர்கால அறிவியலுக்கு முன்னோடி.
  • பல அறிஞர்கள் வெளிநாடு சென்று புதிய கண்டுபிடிப்புகளை,சோதனைகள் பற்றிய செய்திகளைச் சேகரித்து வருகிறார்கள். பின்னர் அவற்றைச் செயல்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.
  • தொழிற்சாலைகள், சோதனைச் சாலைகள் உள்ளன.
  • கண்டுபிடிப்பாளர்கட்குச் சிலை வைக்கப்படுகின்றன.
  • நாள்தோறும் எல்லோரும் பாடல்களைப் பாடிப் பிரார்த்தனை செய்கிறார்கள்.
  • அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்கள்:மற்ற முக்கிய நகரங்களுக்குச் சென்று தமது கண்டுபிடிப்புகளையும் சொல்கிறார்கள்.

கேம்ப்ப நெல்லாவின் ( Tommaso Campanella ) ஞாயிறு நகர் ( City of the Sun ) 1619 

  • மலையின் மீது கட்டப்பட்ட வட்டமான நகரம்;ஏழு வட்டங்கள்;முதல் வட்டம் இரண்டு மைல்களுக்கு மேலான விட்டமுடையது. ஒவ்வொரு வட்டத்திற்கும் உயர்ந்த சுவர்கள் உள்ளன; சுவர்களில் படங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • மலை உச்சியில் கோயில்.
  • இந்த நகரம் ஹோ (Hoh) என்று அழைக்கப்படும் ஒரு மத குருவால் ஆளப்படுகிறது.
  • அவருக்குக்கீழ் இளவரசர்கள் மூவர் உள்ளனர்.
  • அவர்களுடைய பொறுப்பின் பெயர், அதிகாரம் (Power), ஞானம் (wisdom), அன்பு (Love) என்பன.
  • இங்கு இருக்கும் மக்கள் இனப்பெருக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்.சிறந்த குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படுகிறார்கள்.
  • பெண்கள் கோவில்களில் குழந்தைகட்கு இரண்டு ஆண்டுகட்கு பால் கொடுக்கிறார்கள்; பின்னர் செவிலியரிடம் குழந்தைகள் வளர்வர்.
  • தம் மனைவிகள், தம் குழந்தைகள், தம் சொத்து என்ற உரிமையோ, பாசமோ இல்லை. சோதிடத்துக்கு முக்கிய இடம் உண்டு.
  • தனிப்பட்டவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை ; மனைவிகள் பொதுவானவர்கள்; சொத்து பொதுவானது. குடியிருப்பு, உறங்கும் இடம் போன்றவை பொதுவானவை.
  • குடியிருப்பு ஆறு மாதங்கட்கு ஒருமுறை இடம் மாற்றப்படுகிறது.
  • நல்ல உணவு ; நல்ல உடற்பயிற்சி.
  • அனைவரும் குழுமி ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம் உணவு உண்கிறார்கள்.
  • ஆண்களுக்குக் கடின உழைப்பும் பெண்களுக்கு மென்மையான பணிகளும் வகுக்கப்படுகின்றன.
  • அறிவுத்திறனில் குறைந்தவர்கட்கு வேளாண் பணி.
  • திறமைக்கேற்ப அதிகாரம், பொறுப்பு.
  • இசை பெண்களுக்கு மட்டுமே உரியது; ஊதுகொம்பு, தப்பட்டை போன்றவை ஆண்களுக்கு உரியன.
  • பெண்கள் சமைக்கிறார்கள்; பரிமாறுகிறார்கள்; இளைஞர்கள் உபசரிக்கிறார்கள்.
  • ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறை நிபுணர்களே அதிகாரிகளாக உள்ளனர்.
  • ஒவ்வொரு பணியும் கௌளரவமானதாகக் கருதப்படுகிறது.
  • எல்லோருடைய நன்மைக்குமே ஆட்சி.
  • ஞாயிறு நகரில் நான்கு மணி நேரம் மட்டுமே பணி.மற்ற நேரத்தில் நிகழ்வன:படிப்பது,கற்பது,வாதம் புரிவது, உடற்பயிற்சி, விளையாட்டு.
  • நல்ல வண்ணம், நல்ல உடல் வலிமை மதிக்கப்படுகிறது.
  • பெண்களின் அழகு உயரத்திலும், வலிமையிலும் உள்ளது.
  • முகத்தில் வண்ணம் பூசிக்கொள்பவர்கள், உயரமான குதிகால் கொண்ட செருப்பு அணிபவர்கள் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
  • வேளாண்மை மிகவும் விரும்பப்படும் தொழில்;உழவுப் பருவத்தில் பண்ணைக்குக் கொட்டுமுழக்கு மேளதாளத்தோடு புறப்படுகிறார்கள்.
  • இரகசியமான எருவைப் பயன்படுத்துகிறார்கள்; விரைவான வளர்ச்சி காண்கிறார்கள்.
  • கடல் பயணத்தில் ஆர்வம்: விந்தையான கருவிமூலம் கப்பல் செலுத்துகிறார்கள்.
  • 100 ஆண்டுகள் வாழ்கிறார்கள். பலர் 200 ஆண்டுகள் எட்டுகிறார்கள்.
  • புலால் உண்பதைத் தவிர்த்தார்கள்; பின்னர் ஏற்றுக்கொண்டார்கள்.
  • திராட்சைப் பானத்தில் குளிக்கிறார்கள்.
  • 20 வயதுக்கு மேற்பட்ட எல்லோரையும் கொண்டது சட்டசபை.
  • ஒவ்வொரு தொழிலிலும் அதன் தலைமகன் நீதிபதி ஆகிறார்.
  • பெரிய குற்றங்களுக்குக் கடுந்தண்டனை உண்டு.
  • பாவம் செய்தவர்கள் மத குருவிடம் தங்கள் பாவங்களைச் சொல்லி மன்னிப்புப் பெறுகிறார்கள்.
  • யாருக்கும் உயிருடன் இருக்கும்பொழுது சிலை வைப்பதில்லை.
  • அவர்கள் கிறித்தவர்கள்; ஆன்மா அமரத்துவம் கொண்டது என நம்புகிறார்கள். ஆன்மாவிற்கு அமரத்துவம் உண்டு என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என நம்புகிறார்கள். அவர்கள் சாவுக்கு அஞ்சுவதில்லை. ஆன்மா பிரிந்தபின் தரத்திற்கேற்ப நல்ல ஆவிகளுடனோ கெட்ட ஆவிகளுடனோ இணைந்து உலவுகின்றன என்பது அவர்தம் நம்பிக்கை. அதாவது, ஆன்மா தகுதிக்கு எற்ப நல்ல தேவதையையோ, கெட்ட தேவதையையோ சேருகிறது.
  • உலகம் கடவுகளால் உருவாக்கப்பட்டது என நம்புகிறார்கள்; ஞாயிறு கடவுளின் சின்னம்.

ஜொஹான் வேலன்டைன் ஆந்த்ரே ( Johann Valentin Andreae ) படைத்த கிறிஸ்ட்டியானோபோலிஸ் ( Christianopolis ) எனும் கற்பனை நகரம் ( 1619 ) 

  • கிறிஸ்டியானோபோலிஸ் என்பது 700 அடி பக்கமுள்ள சதுரமான நகரம்; 400 குடிமக்கள் வாழ்கிறார்கள். சமய நம்பிக்கை உடையவர்கள்.
  • நகரைச் சுற்றிய தீவின் பகுதி வேளாண்மைக்கும், தொழிற்சாலைகட்கும் பயன்படுகிறது.
  • இது தொழிலாளர்கள் குடியரசு: எல்லோரும் சமத்துவம். பணத்தின் ஆதிக்கம் அறவே இல்லை.
  • நகரம் பயன்பாட்டிற்கேற்ப, பகுதி (Zone) பிரிக்கப்பட்டுள்ளது. முற்போக்கான கருத்து.
  • அறிவுவழித் தொழிலும் உடலுழைப்பும் முரணல்ல; இது அவர்கள் தத்துவம். அன்று புரட்சிகரமான கருத்து.
  • சிந்தனையும் உடல் உழைப்பும் சேர்ந்த வாழ்க்கை முறை போற்றப்படுகிறது.
  • வேலை நேரம் எட்டு மணி.
  • தொழில் வளர ஆய்வு தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
  • வேண்டிய பொருட்கள் அனைத்தையும் நகரில் ஒரு மையமான இடத்தில் பெற்றுக்கொள்கிறார்கள்.
  • யாரிடமும் பணம் இல்லை.
  • அவரவர் திறமைதான் செல்வம்.
  • திருமணம் கிறித்தவச் சடங்குடன் நிகழ்கிறது; ஆண் வயது 24; பெண் வயது 18; பெற்றோர் அனுமதி தேவை.
  • ஒழுக்கம், பக்தி உயர்ந்தவை.
  • குடும்பம் என்பது கணவன், மனைவி ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
  • ஆறு வயதுக்குப்பின் குழந்தைகள் பெற்றோரிடம் இல்லை.அவர்களைக் கவனிக்கும் சமுதாய அமைப்புக்கு அனுப்பப்படுகிறார்கள்.
  • குழந்தைகளைப் பெற்றோர்கள் பார்க்கலாம்.
  • கல்வி : 12 துறைகள்
  • ஆசிரியர்கள் ஆட்சியின் உயர்ந்த நிலையினருடன் தொடர்புகொள்ளும் தகுதி பெற்றவர்கள்.
  • அறிவியல், கலைகள் கற்பிக்கப்படுகின்றன.
  • புகழ் வாய்ந்தவர்கட்கு சிலைகள் உள்ளன; அவை இளைய தலைமுறைக்கு உந்துசக்தி.
  • இசை முதலிய கலைகட்கும் கோயில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆட்சி : இது தொழிலாளர் குடியரசு. தொழிலாளர் சங்கங்கள் அடிப்படை.
  • பிரதிநிதிகள் 24 பேர்; அவர்களில் மூவர் பொறுப்பிலிருப்பவர்கள் (Aristocracy).  
  • வழக்கறிஞர்கள் இல்லை. மரண தண்டனை இல்லை.
  • கல்வி, அறிவியல், சமயம், இசை, கலை, அரசு, சமுதாயத் தொடர்புகள் வலியுறுத்தப்படுகின்றன.

வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம் 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்     

என்பது வள்ளுவப் பிரகடனம். வள்ளுவர் தாம் காணும் வையத்தையும் வாழ்வாங்கு வாழ நெறிமுறைகளையும் முன்வைக்கிறார். அவர் அமைக்கும் முதல் அடிப்படை :

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்     

இது எவ்வளவு புரட்சிகரமான கருத்து என்பது அன்றைய நிலையை எண்ணினால் விளங்கும்.

  • மனுதர்மம்: பிறப்பில் நால்வருணம்; உயர்வு தாழ்வு மாற்ற முடியா அமைப்பு.
  • பிளேட்டோ: பிறப்பிலேயே மக்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு போன்றவர்கள்; கடைசி இரு வகுப்பார் உடல் உழைப்புக்கு மட்டும் தகுதி படைத்தவர்கள்.
  • அரிஸ்டாட்டில்: பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் அடிமைகள்.
  • ஒவ்வுதல்: இசைதல், ஒத்திருத்தல், பொருந்திவருதல்.
  • சிறப்பு: பெருமை, திருவிழா, செல்வம், அன்பளிப்பு, மதிப்பு, தலைமை, பகட்டு.

மதச்சார்பின்மைக்கு வழி வகுத்தவர் (Seculars State)

குறளில் எந்தச் சமயக் கொள்கையும் முதன்மை பெறவில்லை. பொதுவான வாழ்வியல் நூல், வள்ளுவர் சமயமே அறியத்தக்கதாக இல்லை. ஆயின் அறிஞர் பலர் வள்ளுவரின் சமயம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

  •  சமணர் - திரு.வி.க., வையாபுரிப் பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி போன்ற பலர்.
  • சைவர் - மறைமலை அடிகளார், வச்சிரவேலு முதலியார் போன்றோர்.
  • இந்து மதத்தினர் - எஸ். எம். டயஸ்
  • பௌளத்தர் - அயோத்தி தாஸ்
  • வைணவர் - புருஷோத்தம நாயுடு

இவ்வேறுபாடே அவர் மதச்சார்பின்மைக்கு ஆதாரம் எனலாம்.

உழைப்பின் உயர்வு - Dignity of Labour

உழைப்பைப் பொதுவாக இருவகையாகப் பகுக்கலாம்: 1. அறிவுழைப்பு (Knowledge Work), 2. உடலுழைப்பு (Manual Work). இவற்றில் இரண்டாவது குறைத்தே மதிப்பிடப்படுகிறது.

  • மனு : சூத்திரர்கட்கு உரியன வேளாண்மை, உடல் உழைப்பு.
  • பிளேட்டோ : இரும்புத் தரத்திரனருக்கு உரியது வேளாண்மை.
  • கேம்ப்ப நெல்லா : அறிவுத் திறன் குறைந்தவருக்கு உரியது உழவு.

இன்றும் உடலுழைப்பு உயர்ந்த இடம் பெறவில்லை. ஆனால் வள்ளுவரோ உழவை உயர்த்திப் பிடிக்கிறார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்     

இது வள்ளுவரின் கம்பீரமான பிரகடனம். உடல் உழைப்பை அந்தக் காலத்திலேயே உயர்த்திப் பிடித்தவர் அவர்.

ஆட்சிமுறை பற்றி வள்ளுவர்

  • மன்னர் ஆட்சி, மக்கள் ஆட்சி, சமதர்மக் குடியாட்சி, சர்வாதிகாரம் போன்றவற்றின் நன்மை, தீமைகளை ஆராய வள்ளுவர் முற்படவில்லை. எதையும் அவர் பரிந்துரைக்கவில்லை. எதுவும் நிரந்தரமில்லை. தொடர்ந்து மாறக்கூடியது என்பது அவரது கொள்கை. எனவே எல்லா ஆட்சிகட்கும் பொதுவான உறுப்புகளின் பண்புகளை விளக்குகிறார்.
  • ஆட்சி எதுவானாலும் ஒரு தலைமை; அத்தலைமைக்குத் துணைபுரிய ஆலோசகர், வல்லுநர், படை போன்றவை வேண்டும். இவை போன்றவற்றின் குணாதிசயங்களை மட்டும் வள்ளுவர் பேசுகிறார். எந்த முறையையும் அவர் முன்வைக்கவில்லை. முன்வைப்பது நிற்காது என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை எனலாம்.

அறிவியல் பார்வை - அறிவியல் அணுகுமுறை

பண்டிதர் நேரு அறிவியல் பார்வை, அறிவியல் அணுகுமுறையை வாழ்நாள் முழுவதும் மக்களுக்குப் போதித்தார். அறிவியல், தொழில்நுட்பம் செய்த பெரிய நன்மை அவற்றால் உற்பத்தியான பொருள்களைவிட அறிவியல் அணுகுமுறையைத் தந்ததுதான்.

வள்ளுவரின் இரண்டு குறள்கள் அறிவியல் உலகில், அறிவு சார்ந்த நடைமுறை உலகில் பொன் எழுத்துகளில் பொறிக்கத்தக்கவை. அவை அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணம் போன்றவை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • சொல்பவர் யாராயினும், சொன்னது எதைப் பற்றியாயினும் நாம் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பது ஒரு கருத்து.
  • மற்றொரு கருத்து, முடிவு செய்யும் உரிமை நமக்கு இருப்பது போலவே ஒருவருக்கு அவரது கருத்தைச் சொல்லும் உரிமையும் வேண்டும் என்பது.

உண்மையைச் சொல்ல அச்சம் நிலவிய சூழலில் உண்மைக்காகத் தியாகம் செய்தோர்

  1. காப்பர் நிக்கஸ் Copenicus (1473 - 1543) 
  2. புருனோ Bruno (1548 - 1600) 
  3. கலிலியோ Galileo (1564 -1642) 
  4. டார்வின் Darwin (1809 - 1882) 
  5. மற்றோர்

ஊழ் விதி போன்ற பிரச்சினைகள்

  • விதி, இறைவன், முற்பிறப்பு, அடுத்த பிறவி போன்றவற்றில் தீர்வு காண முடியாது. வாதங்கள் பயனில என்பதை உணர்ந்தவர் வள்ளுவர். அன்றும் சரி, இன்றும் சரி, நாத்திகர் தவிர அனைவருமே விதியை நம்புகிறார்கள். இப்பிரச்சினைகளில் நடைமுறைக்கு ஏற்ற வழியை திருவள்ளுவர் முன்வைக்கிறார். விதி இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்று ஊழின் வலிமை பேசுகிறார்.

ஊழ் என்பது இல்லையேல் பிரச்சினை இல்லை; வள்ளுவரின் திட்டத்தின்கீழ் அது இருந்தாலும் பரவாயில்லை: ஏனெனில்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர் 

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

என்று வலிமை வாய்ந்த ஊழை உறுதியான உழைப்பு வெல்லும், என மனித முயற்சியை உயர்த்திப் பிடிக்கிறார். வள்ளுவர் போல மனித முயற்சியைப் போற்றியவர் யாருமில்லை. இதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை.

இலட்சியப் பாதையில் தடைவந்தால் குறிக்கோளுக்கு மாற்று வழி காண்பவர்

கருமம் சிதையாத கண்ணோட்டம் குறித்துத் திருவள்ளுவர் பேசுகிறார். கண்ணோட்டம் என்பதனை உடம் பயின்றார் கூறியமை மறுக்க மாட்டாமை எனப் பரிமேலழகர் வரையறுக்கிறார்.

மண்ணோடியைந்த மரத்தனையர்
கண்ணோ டியைந்து கண்ணோடா தவர்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போ லமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க் கணி

இக்குறள்கள் தமக்குள் சற்று முரணான கடமைகளை முன்வைப்பது போன்று தோன்றலாம். முரண்களுக்கு வள்ளுவர் எப்பொழுதும் தீர்வு காண்கிறார். அதுவே வள்ளுவத்தின் வலிமை.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு

இது எவ்வாறு முடியும்? இயன்றதை இயன்ற வழியில் செய்ய முயல வேண்டும். பின்வரும் சான்றால் இதனைத் தெளியலாம்.

அமெரிக்காவில் உள்ளது மின்சக்தி மின்னணு பொறியாளர் கழகம் ( Institution of Electrical and Electronic Engineers ). இதன் ஒழுக்க விதிகள் ( Code of Ethics : III Millennium ) எல்லா இடங்களிலும் கடைப்பிடிப்பது எளிதாக இல்லை. எனவே ஒழுக்க விதிகளை இக்கழகத்தினர் இரண்டாகப் பிரித்தார்கள்:

  1. Principle Ethics தத்துவ ஒழுக்கம் 
  2. Applied Ethics நடைமுறை ஒழுக்கம்

நடைமுறை ஒழுக்கமானது தத்துவ ஒழுக்கத்திலிருந்து விலகிச் செல்ல அனுமதிக்கிறது. IEEE : Applied Ethics allows for deviation from principle ethics when it is for the legitimate benefit of others.

நாம் பேசும் உண்மையினால் ஏற்படும் விளைவிற்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். உண்மையைச் சொன்னால் அதன் பக்க விளைவுகளில் நமக்குப் பொறுப்புண்டு. நாம் உண்மை சொல்வதன் மூலம் வேறு சிலருக்குப் பெருந்தீங்கு நேரலாம். அப்பொழுது உண்மை சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். IEEE கொடுக்கும் உதாரணம்: An extreme example would be the permissibility of telling a lie to protect refugees from an authoritarian military regime.

இங்கு வள்ளுவர் கொடுத்திருக்கும் தீர்வைப் பார்ப்போம்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கும் எனின்

என்று கூறியவர், யாரும் கூறாத வகையில் வாய்மைக்கு ஒரு இலக்கணம் வகுக்கிறார்: புரைதீர்ந்த நன்மை என்பதற்கு என்ன அளவுகோல். இதற்கு IEEE Ethics Code கூறுவது: In those cases, the engineer is advised to do what his conscience suggests. இப்படிப்பட்ட சமயங்களில் தன்னுடைய முடிவு மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதினால் தன் மனச்சான்றின் படி முடிவு செய்யலாம்.

இங்கு வள்ளுவர் கூற்று:

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

எனவே மூன்றாவது Millennium IEEE ஒழுக்க விதிகட்கு 2000 ஆண்டுகட்கு முன்பே வள்ளுவர் வழிவகுத்திருக்கிறார் எனத் துணியலாம்.

தமிழ் வாழ்க்கையில் புகழ்

  • தமிழர்கள் புகழைப் போற்றியவர்கள்; புகழ் நிறைந்த தனி மனிதர்களால்தாம் உலக முன்னேற்றம் நிகழ்கிறது என்பது அவர்களது நம்பிக்கை.
  • புகழொடு வாழ்வது தனிமனிதர் கடமை. தோன்றின் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவம்.
  • புகழ் மிக்கவர்களை உருவாக்குவது சமுதாயக் கடமை.

வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்த நிலம்

என்பது வள்ளுவம். ஒரு சமுதாயம் எதைப் போற்றுகிறதோ, எதை ஆதரிக்கிறதோ அது உருவாகும்; வளரும். மகாகவிகளைப் போற்றும் நாட்டில் மகாகவிகள் தோன்றுவார்கள்.

கல்வி யுகம்

அறிவுடையார் எல்லாம் உடையார்
அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்

  • செல்வங்களெல்லாம் அறிவால் படைக்கவும் காக்கவும்படும்; செல்வம் அழிந்தால் அதைப் படைக்கும் கருவியை உருவாக்கக் கூடியவர் அறிவுடையார் என்று பரிமேலழகர் விளக்கம் கூறுவார். இன்றைய கல்வியுகத்தில் அது வள்ளுவர் காலத்தைவிட முக்கியமான உண்மையாக இருக்கிறது.

அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது கல்வி யுகத்தின் முழக்கம்.

[ மேலே இடம்பெற்றவை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் திருமதி சொர்ணம்மாள் அறக்கட்டளையின் சார்பில் மார்ச்சு 22, 2007இல் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கக் குறிப்புகள் ].

தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen