புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 16, 17, 18 )
திருக்குறள் மூல நூலைச் சிதைப்பது கொடுமை
தமிழண்ணல்
தமிழியற் புல முதன்மையர் (ஓய்வு) மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

திருக்குறள் மூலத்தைச் சிதைக்கும் முயற்சி, காட்டுத் தீப்போலப் பரவி வருகிறது. இதேநிலை நீடித்தால் திருவள்ளுவர் எழுதிய மூலத் திருக்குறள் மறைய நேரும்.

திருக்குறளை ஆராயலாம்; விமரிசனம் செய்யலாம்; குறட் கருத்துகள் சில இக்காலத்திற்கு ஏற்புடையன அல்ல என எழுதலாம்; பெண்ணியம் பேசுவோர் சில குறட்பாக்களை மறுக்கலாம்; பகுத்தறிவாளர் தமக்கு ஒவ்வாதன எனச் சில குறள்களை எடுத்துரைக்கலாம்.

மேலும் திருக்குறளுக்கு இதுவரை, கிடைத்துள்ள பழைய உரைகள் பத்துத் தவிர, புதிய உரைகள் பல நூற்றுக்கணக்கில் தோன்றுகின்றன; தோன்றிக் கொண்டே இருக்கின்றன. திருவள்ளுவர் ‘தேடல்’ உத்திக்கு வழிவகுத்துள்ளார். இன்னும் உரைகள் தோன்றும். திருக்குறளை ஆழ்ந்து படிப்பவனுக்கு, தானும் ஓர் உரையெழுதத் தோன்றுகிறது. சிலர் உரைகளால் புதிய ஒளிவீச்சுக் கிடைக்கிறது என்பதும் உண்மையே.

ஆனால் திருக்குறள் மூலத்தைத் தத்தம் விருப்பத்திற்கு ஏற்பத் திருத்த இடம் தரக் கூடாது. திருக்குறள் தமிழ் மறை; தமிழர்களின் வேதம். அதில் கைவைத்தல் கடுங்குற்றம்.

மறைமலையடிகள், பாவாணார், பெருஞ்சித்திரனார், முத்தமிழ்க் காவலர் போல்வார் இன்றில்லை. இன்று திருக்குறட் செல்வர் பலர் இதையும் ஆதரித்து, திருக்குறள் மூலம் சிதைக்கப்படுவதை வரவேற்று, முகத்தாட்சணியத்திற்கு ஒருத்தி, சூலான கதையாக யாவும் நடக்கின்றன.

முத்தமிழறிஞர் கலைஞர் தாம் எழுதிய உரையில் மூலத்தைச் சிதைக்கவில்லை. தம் கருத்தை, வள்ளுவர் கருத்தாகக் திணிக்கத் தாம் துணியவில்லை என்றே குறிப்பிடுகிறார்.

முற்காலத்திலேயே திருக்குறளில் சிற்சில பாடவேறுபாடுகள், குறள்வரிசை வேறுபாடுகள் தோன்றவில்லையா என்று கேட்கின்றனர். மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை தோன்றிய பழைய உரைகளில் இவ்வாறு பாடவேறுபாடுகள் உள. இரண்டாயிரம் ஆண்டுகளாக வாயால் உரைக்கப்பட்டும், செவி வழியாகக் கேட்கப்பட்டும் நினைவில் வைத்தே கடந்த காலங்கள் பல. பிறகு ஏடுகளில் பலரால் பல நிலைகளில் படியெடுக்கப்பட்ட காலங்களும் பல.

இத்தகைய நீண்டநெடிய காலத்தையும் தாண்டி, இன்றும் முழுக் கட்டமைப்போடு திருக்குறள் மூலம் கிடைத்துள்ளது. சிறுசிறு பாடவேறுபாடுகள் தோன்றியிருப்பது, உடம்பில் அழுக்குப் படிவது போன்றது; உடையில் தூசி படிவது போன்றது. இவை களையப்பட்டு, உண்மையான மூலத்தைக் கண்டறிவதும் அதனை இன்றைய அச்சுக்கலை, கணினிக்கலை வடிவில் காப்பதும் எளிது. ஆயினும் இன்று சிலர் செய்வன, உடம்பை வெட்டி ஒட்டுவது போன்றன. காலை வெட்டிக் கையிருக்க வேண்டிய இடத்தில் வைப்பதும் கைகளை வெட்டிச் சிதைப்பதும் போலும் செயல்கள் இவை.

முன்பு குறையில்லையா என்று கேட்பவர்களுக்கு ஒன்று கூறலாம். குறை கண்டால் அதைத் திருத்திச் செம்மைப்படுத்த வேண்டுமே தவிர, மேலும் மேலும் குறைகளைப் பெருக்குவது முறையாகுமா? பழைய உரைகள் பத்தினையும் ஒப்பிட்டு, ஏடுகளின் அடிப்படையில் தமிழறிஞர் குழு ஒன்று கூடிச் செம்மைப்படுத்தலே அறநெறி; சிதைப்பதற்குக் காரணம்காட்டுவது கொடிய பிழைநெறி. மூலத்தைச் சிதைப்பது, குறள்களை இடம் மாற்றுவது, இயல்களை இடம் பெயர்ப்பது, அதிகாரங்களை மாற்றுவது, அதிகாரப் பெயர்களை மாற்றுவது, இன்னோரன்ன கொடுஞ்செயல்களைச் செய்பவர்கள் கொலைக் குற்றவாளிகள்; இவர்களை ஆதரிப்பவர்கள் கொலைக்கு உடந்தையானவர்கள்; மேலும் பலர் கொலை செய்யத் தூண்டுபவர்கள். இவர்களைப் பற்றித் திருவள்ளுவர் தீர்ப்பு இது.

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனொடு நேர்                   ( 550 )

உண்மையிலேயே திருக்குறளைத் தமிழ்மறை என நம்புபவர்கள் இதில் கருத்து வேறுபட மாட்டார்கள். இவர்கள் என்ன மணக்குடவரைவிட மேலானவர்களா? பரிமேலழகரைவிடப் புத்திசாலிகளா?

ஆயிரம் உரை வேறுபாடு காட்டி எழுதுங்கள்; ஆயிரம் விதத்தில் விமரிசனம் செய்யுங்கள்; தடையில்லை. திருக்குறளைப் பல கோணத்தில் மறுத்து ஆராய்ந்து எழுதுங்கள். மூலத்தில் கைவைக்க நீங்கள் யார்? திருக்குறள் மூலத்தையே மாற்றுமளவு நீங்கள் அறிவாளிகளா?

வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
 உடையம் யாம் என்னும் செருக்கு                ( 844 )

தான் மட்டுமே அறிவாளி என எண்ணும் ஆணவம் உடையவனே முட்டாள்களுள் சிறந்த முட்டாள் என்பதுதான், உண்மையான ‘திருவள்ளுவம்.’

ஆண்டாள் நாச்சியார் தமது திருப்பாவையில் ‘தீக்குறளை சென்றோதோம்’ என்று பாடியது, திருக்குறளைப் படிக்காதீர் என மறுத்துப் பாடியதுதானாம். திருக்குறளை ஆண்டாள் ‘தீக்குறள்’ என்று கூறி விட்டாராம். முன்னைய காஞ்சிமடத்துப் பெரியவருக்கும் இதுவே கருத்தாம். ‘தீக்குறளைச் சென்றோதோம்’ என வரும் ஆண்டாள் பாவைப் பாடல் இங்கே சுட்டத்தக்கது. ‘தீக்குறள் என ஆண்டாளால் குறிக்கப்படுவது திருக்குறளைத்தான் என்பது காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்து. அதுவே சரி.’ இவ்வாறு எழுதும் தமிழறிஞருக்குத் தமிழ் இலக்கண அறிவு இல்லை என்று கூறமுடியாது. முன்பு சங்கராச்சாரியார் சொன்னபோது, என் மாணவப் பருவத்தில் நாடெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. போராட்டத்தில் ஈடுபட்ட அன்றைய என் உள்ளம், மீண்டும் ‘பூதம்’ புறப்படக் கண்டு திடுக்கிடுகிறது. இன்று எதிர்ப்பவர் இலர் என்பதோடு, பாராட்டு அல்லவா குவிகிறது?

மர்ரே பதிப்பில் ‘தீக்குறளை சென்றோதோம்’ என்றே காணப்படுகிறது. அனைத்துப் பதிப்பிலும் ‘ச்’ ஒற்று இடையில் இல்லை. இரண்டாம் வேற்றுமை உருபு விரிந்ததானால், தீக்குறளைச் சென்று ஓதோம் – என ‘ச்’ ஒற்று வரும். இங்கு, குறளை என்பது ஒரு சொல். அதன் பொருள் பொய், புறங்கூறல் என்பது. மற்றவரைப்பற்றிக் ‘கோள்‘ கூறி, பொய் சொல்லி வாழமாட்டோம் என்பதே பொருள். அதனால் தான் ‘ச்’ ஒற்று இடப்படவில்லை.

ஆழ்வார்களுக்கோ ஆண்டாளுக்கோ திருக்குறள் மறுப்புச் சிந்தனை எங்குமே இல்லை. மேலும்,

நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்

என வரும் பாடலின் கருத்துச் சூழல் (Context) படி இங்குப் பொய் கூறோம் எனும் நோன்பு மட்டுமே பேசப்படுகிறது. இதனைச் சான்றோர் பேரவையோ, திருக்குறட் பேரவையோ, திருக்குறட் கழகங்களோ மறுக்க வேண்டாமா?

மருந்தோ மற்று ஊனோன்பும் வாழ்க்கை?

என வினவுகிறது, திருவள்ளுவம்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் (1019) என்பதும், தீயவனேயன்றி, அவன் சுற்றமும் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (166) என்பதும், பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து (603) என்பதும் இவை போல்வனவும் ஒருவனது தீய பண்பாலும் செயலாலும் மன்பதை சமுதாயம் கெடும் என்பதை விளக்குவன. அத்தீயவனே அன்றி, அவன் குலமும் குடியும், சுற்றமும் ஏன் அழிய வேண்டும்? இக்கொடியவர்களால் ஒரு மன்பதையே கெடுதலால், அத்தீயவனின் சுற்றம், குலம் அனைத்தும் அழிந்து ஒழியும் என்று ‘சாபம்’ விடுக்கின்றதுபோல் கடிகின்றது, ‘திருவள்ளுவம்.’ இத்தகைய திருக்குறளையே ஒடித்தும், சிதைத்தும், மடித்தும் பதிப்பித்து வெளியிட்டுப் பணம் சேர்ப்பதும், ஒரு ‘சமுதாயக் குற்றமே’ எனில் மறுப்பாருண்டோ?

வ.உ.சி.யே சில பாட வேறுபாடுகளைப் புகுத்தவில்லையா என்று கேட்கின்றனர். அவரைச் ‘செக்கிழுத்த செம்மல்’, ‘விடுதலைப் போராட்ட மறவர்’ எனப் போற்றிய உலகம், அவர் செய்த குறட்குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.

இரசிகமணி டி.கே.சி. கம்பனின் இராமாயணத்தில் பல திருத்தங்கள் செய்து, கம்பனே இப்படித்தான் பாடினான் எனத் தம் விருப்பத்திற்கேற்பப் புதிய டி.கே.சி. இராமாயணம் வெளியிட்டார். பலர் அதனை ஏற்கவில்லை. எனினும் தமிழின் அழிவையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறவர்கள் அவரை ஆதரித்தனர்; கண்டிக்க முன்வரவில்லை.

பாவேந்தர் பாரதிதாசன் தமது தமிழியக்கத்தில் இதனைக் கொடிய செயல் எனக் கண்டித்தார். இவ்வளவிற்கும் அன்று கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று போராடிய காலம்; கதையை வைத்துக் கொண்டு கதைப்பவர்களைத் தாக்குவதற்குத் தயங்காத காலம்; பேரறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ என எழுதிய காலம். இந்தச் சூழ்நிலையில்தான், ஒரு தமிழ்ப் பெருங் காப்பியத்தை, அறிஞர் எனப் பலரால் மதிக்கப்பட்ட ஒருவர் திருத்தியதைப் பாவேந்தரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இன்று திருக்குறள் மூலத்தைச் சிதைத்து அலங்கோலப்படுத்துபவர்களைக் கண்டிக்க அல்லது தண்டிக்க ஒரு குரல்கூடக் கேட்கவில்லை.

இன்றைய தமிழறிஞர்கள் ‘காக்கை’ பிடிப்பவர்களாக மாறிவிட்டனர். எந்த நேரமும் யாருக்குப் பின்பாட்டுப் பாடினால், என்ன கிடைக்கும் என்பதிலேயே நாட்டம் மிக உடையவர்களாகத் தமிழறிஞர் பலர் தரம் தாழ்ந்து போயினர். சங்கப் புலவர்களிடம் பொன்னும், பட்டமும், பரிசும் தேடி வந்தன. வறுமையில் வாடியபோதும் அவர்கள், வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் என்றனர். அரசர்களுக்கு இடித்துரை கூறி, அறிவுறுத்தி, நன்னெறிப்படுத்தும் ஆளுமையுடன் திகழ்ந்தனர். ஆனால் இன்றைய புலவர்களோ தமக்குத்தாமே சக்கரவர்த்திகள், மாமன்னர்கள் எனப் பட்டம் சூட்டிக்கொள்கின்றனர். தங்கள் வாழ்நாளில் கிடைக்கும் சில நன்மைகளுக்காகத் தமிழைக் கைவிட்டு விடுகின்றனர். அன்று இத்தகைய தீய செயல்களைச் செய்தவர்களைக் கடிந்ததோடு, அவற்றை எதிர்க்காத புலவர்களையே கூடுதலாகச் சாடினார் பாவேந்தர். அவர்கள் முகத்தில் அறைவதுபோல் பாடினார்.

கம்பனார் பதினோரா யிரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள் இவைதாம் கம்பன் செய்யுள் என அச்சிட்டு
வெம்புமாறு அளிக்கையிலும் மேவாத செயலிதனைச் செய்ய இந்தக்
கொம்பன்யார் எனக்கேட்க ஆளில்லையா புலவர் கூட்டந்தன்னில்

 என்று கேட்டார் பாவேந்தர். இன்று திருக்குறள் மூலத்தைச் சிதைப்பவர்களை, இந்தக் ‘கொம்பன் யார்’ எனக் கேட்க முன்வராதது மட்டுமன்றிப் பாராட்டவும் துணிகின்றனரே?

திருவள்ளுவர் புகழ் என்ற அதிகாரத்தைப் பாடியது தப்பாகப் போயிற்று என்பது பேரறிஞர் மு.வ. அவர்கள் கருத்து. இன்று முற்றும் துறந்தவர்களே ‘புகழ்’ போதையில் மிதக்கத் தொடங்கி விட்டனரே? பாவேந்தர் இன்று இருந்தால், நெளிவு சுளிவு கருதி, அந்தந்த இடத்திற்குத் தகுந்தவாறு பேசி வாழும் தமிழறிஞர்கள் என்போரை, என்ன சொல்லிப் பாடுவாரோ, யாம் அறியோம்.

திருக்குறளை ஓர் ஆங்கிலேயன் திருத்திக் கொண்டுவந்து, தமிழ்ப் பெருங்கோமகன் பாண்டியத்துரைத் தேவரிடம் நான்காம் சங்கம் கண்ட ஆளுமை மிக்க நமது தலைமகனிடம், தான் செய்த ‘அற்புதமான’ செயலை விவரித்தான். தேவர் கோமான் வேறு எதுவும் பேசவில்லை ‘எத்தனைபடிகள் அச்சிட்டீர்’ என்றுதான் கேட்டார். அவன் கூறியபடி, அத்தனைப்படிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டார். ஒரு குழி தோண்டச் சொல்லி, அத்தனை படிகளையும் அப்படியே போட்டு எரித்தார். பிறகு அந்த ஆங்கிலேயனிடம், ‘இவ்வாறு திருக்குறளைத் திருத்துவது கூடாது’ என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

அன்று வள்ளல்களிடம் இருந்த மான உணர்வுகூட, இன்று புலவர்களிடம் காணப்படாது போயினமை நமது தீயூழேயாகும். தமிழறிஞன் என்பவன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். உண்மையை அஞ்சாது சொல்ல வேண்டும். இடத்திற்கு தகுந்தவாறு பேசும் நழுவலும் வழுவலும் தவிர்க்கப்பட வேண்டும். நமக்குப் பட்டமும் பரிசும் கிடைக்காதே என்று பின்வாங்கக் கூடாது. அறிவுரை கூறுமிடத்தில் இருக்க வேண்டும். திருக்குறள் மூலபாடம் சிதைக்கப்படுவதைக் கண்டு தமிழறிஞர்கள் வாளாவிருத்தலாகாது; இவ்வாறு மூலம் சிதைக்கப்படுவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen