புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 58, 59, 60 )
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் [ தி. வே. கோபாலையரின் வாழ்வும் பணியும் ]
பா. ஜெய்கணேஷ்

தமிழ் இலக்கண இலக்கியங்களை எழுதுதல் என்பதன் வழி அடையாளம் பெற்ற மரபிலிருந்து அவற்றைப் பதிப்பித்தல் என்ற வேறொரு தளத்தினாலான அடையாளத்தைப் பெறுதல் என்ற மரபு 19-ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றி நிலைபெற்றது. மூல நூலாசிரியர்களான தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர் ஆகியோர் படைத்த படைப்புகளைப் பதிப்பித்தலின் வழி அவர்கள் பெற்ற மதிப்பீடுகளுக்கு நிகரானதொரு இடத்தினைப் பெற்றவர்கள் இக்காலப் பதிப்பாசிரியர்கள். இவர்களுள் மூத்த நிலையிலும் தமிழுலகம் என்றென்றும் போற்றும் வகையிலும் சிறந்த பதிப்பாசிரியர்களாக, நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களாக, அறிஞர்களாக, விளங்கிய பெருமக்களுள் சி.வை.தா, உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத் தக்கோராவர். இம்மரபின் எச்சமாய் நம் சமகால சமூகத்தின் உச்சமாய் வாழ்ந்து இன்று நம் கண்முன் மறைந்தவர் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர். கல்வியாளர், பதிப்பாளர், பலமொழி கற்றவர், சிறந்த ஆசிரியர், சிறந்த மனிதர் என எல்லா நிலையிலும் தன்னையும், தன் ஆளுமையையும் வெளிப்படுத்திய அவரின் செயல்பாடுகள் குறித்த சில விதைகளைத் தூவ இங்கு எண்ணுகின்றேன்.

22-1-1925 -ஆம் ஆண்டு வேங்கடராம ஐயர், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் உடன் பிறந்தோர் தம்பியர் நால்வர், தங்கையர் இருவர். 1940-ஆம் ஆண்டு S.S.L.C, 1945 வித்துவான், 1951 B.O.L, 1953 பண்டிதம், 1958 B.O.L. (Hons.) என முறையே கல்விப்புலம் சார்ந்து படிப்பை நிறைவுசெய்ததோடு அவையனைத்திலும் முதல் தகுதியினையும் (முதல் தகுதிக்கான பரிசும் பட்டமும்: 1000 ரூபாய் பரிசு, இலாசரசு பதக்கம், 100 ரூ. பரிசு, அரங்கையா செட்டி பரிசு.) பெற்றார்.

படிப்பு முடிந்தவுடன் 15 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளியிலும் 15 ஆண்டுகள் தமிழ்க் கல்லூரியிலும் பாடம் கற்பித்த இவருக்கு இவருடைய சொந்தக் குழந்தைகள் தவிர (மகள் ஒருத்தி, மகன் ஒருவர்) இவரிடம் பாடம் கேட்ட அனைவரும் இவரின் அன்புப்பிள்ளைகளாயினர். பள்ளி ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் என்று வாழ்ந்த இவரை 1979-ஆம் ஆண்டு முதல் புதுவை பிரெஞ்சுக் கலை நிறுவனம் முழுநேர ஆய்வாளராகத் தத்தெடுத்துக்கொண்டது. பல்வேறு நூல்களை அச்சிடல், வெளிநாட்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல் போன்ற சீரிய பணிகளில் தொடர்ச்சியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பதிப்புச் செயல்பாடுகள்

தமிழ், வடமொழி என்ற இருமரபிலும் உள்ள இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றதோடு அவற்றில் ஆழங்கால்பட்டவராகவும் விளங்கியவர் தி. வே. கோ. இலக்கண இலக்கியங்களின் மூலம் மட்டுமல்லாமல் அவற்றின் உரைகளையும் ஆழ்ந்து கற்றதோடு அவற்றை எப்போது யார் கேட்டாலும் தன்நினைவாற்றலிலிருந்து உதிர்த்து வியக்கச்செய்யும் தன்மை கொண்டவர். ‘திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.’1 என்ற உதயை மு. வீரையன் கூற்றையும், ‘தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒரு சமயம் இல்லாமற் போய்விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர்”2 என்ற பார்த்தசாரதி கூற்றையும் இங்கு நினைவுகூர்வதன் மூலம் கோபாலையரின் கல்வியறிவு, நினைவாற்றல், பாடம் சொல்லும் திறன் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும். இந்த வாசிப்பு, நினைவுப் பின்புலத்தில் 1970-களில் பதிப்புச் செயல்பாட்டைத் தொடங்கிய இவர் இறுதிக்காலம் வரை (2007) அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார்.

 தமிழ்ச்சமூகத்தின் மூத்த பதிப்பாசிரியர்களான ஆறுமுகநாவலர், சி. வை. தா., உ. வே. சா., ச. வையாபுரிப் பிள்ளை ஆகியோரின் மரபைப் பின்பற்றுபவராகவும் அதே சமயம் அவர்களுக்கு மேலான சில பதிப்பு நுணுக்கங்களைக் கையாண்டவராகவும் கோபாலையர் திகழ்கிறார்.

1970-74 காலப்பகுதியில் தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடாக இவர் இலக்கண விளக்கத்தைப் பல்வேறு தொகுதிகளாகப் பகுத்துத் தொகுத்துப் பதிப்பித்தார். இங்குத் தொடங்கிய இவரது பதிப்புச் செயல்பாடு பல்வேறு இலக்கண இலக்கியங்களைப் பதிப்பிக்க உறுதுணை புரிந்தது. இலக்கணக் கொத்து - 1973, பிரயோக விவேகம் - 1973, தொல்காப்பியம் முழுவதும் (2003), வீரசோழியம் - 2005, மாறன்அலங்காரம் - 2006, மாறனகப்பொருளும் திருப்பதிக்கோவையும் - 2006 முதலான இலக்கண நூல்களும் அதன் உரைகளும் இவர் கைகளில் தவழ்ந்து செம்பதிப்புகளாக நிலைபெற்றன.

இலக்கியங்களில் பக்தி இலக்கியத்தின் மீது மாளாக் காதல் கொண்ட இவர் அவற்றுள் தேவாரத்தைப் பலநிலைகளில் நின்று பதிப்பித்துள்ளார். அவை: திருஞானசம்பந்தர் தேவாரம் - 1984, திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரமும் - 1985, தேவாரம் ஆய்வுத்துணை - தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் - 1991. இலக்கியங்களைவிட இலக்கணங்களுக்கே அதிக முக்கியத்துவம் தந்து பதிப்பித்த இவர் பாடவேறுபாடு தருதலை மரபாகக் கொள்ளவில்லை. தனக்குமுன் பதிப்பிக்கப்பட்டு அச்சில் வெளிவந்தவற்றை அப்படியே பின்பற்றி நகலெடுத்துப் பதிப்பிக்கும் பழக்கம் இவருக்கில்லை. ஒவ்வொரு பிரதியைப் பதிப்பிக்கத் தொடங்குமுன் அதற்குள்ள அச்சுப் படிகளை, ஓலைச் சுவடிகளை ஒப்புநோக்கி அதில் இவர்கொண்ட பாடத்தையே மூலமாக முன்வைக்கிறார்.

பாடவேறுபாடுகளை இவர் தராமல் போனாலும் மூத்த பதிப்பாசிரியர்களின் பதிப்புகளில் இல்லாத பல்வேறு அடைவுகளை முகவுரையிலும், பிற்சேர்க்கையிலும் இணைப்பதன் மூலம் இவரின் பதிப்புகள் ஆய்வுலகத்திற்கும் மாணவர்களுக்கும் நெருக்கம் உடையதாகவும், விருப்பமானதாகவும் விளங்குகின்றன.

சான்றுக்காகத் தஞ்சை சரசுவதி மகால் மூலம் இவர் பதிப்பித்த பிரயோக விவேகத்தை இங்குச் சுட்டலாம். 1973-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இப்பதிப்பானது மொத்தம் 678 பக்கங்களைக் கொண்டது. இதில் இவர் விளக்கவுரையும் சேர்த்து 348 பக்கங்களில் அமைந்த நூலுக்கு 330 பக்கங்களில் எளிமையாக நூலை அணுகுவதற்கு வேண்டிய தரவுகளைத் தொகுத்துத் தருகிறார்.

330 பக்கங்களில் 203 பக்கங்கள் முகவுரையாகவும் 127 பக்கங்கள் பிற்சேர்க்கையாகவும் இப்பதிப்பில் அமைகின்றன. முகவுரையில் நூலாசிரியர் வரலாறு, மூலம், உரைநூற்பாக்கள், நூலமைப்பு மற்றும் நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் பிரயோக விவேகத்தை அதன் உரையில் எடுத்தாளப்படும் தொல்காப்பியம், சேனாவரையம், நச்சினார்க்கினியம், நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், இலக்கணக்கொத்து ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அரிய பல செய்திகளைத் தருகிறார்.

பிற்சேர்க்கையில் காரிகை, உரைநூற்பா, எடுத்துக்காட்டு நூற்பா, எடுத்துக்காட்டுப் பாடல்கள் ஆகியவற்றின் முதற்குறிப்புகளும் எடுத்துக்காட்டுச் சொற்கள், தொகைகள், இருமொழித்தொடர்கள், பன்மொழித்தொடர்கள், தமிழ் இலக்கண மரபு சொற்கள், வடமொழி இலக்கணச் செய்திகள், வடமொழி ஆசிரியரும் நூல்களும் வடசொல் எடுத்துக்காட்டுகள், வடமொழி இலக்கண மரபுச்சொற்கள் ஆகியவற்றை அடைவு செய்கிறார்.

ஒரு களஞ்சியத்திற்குச் செய்யவேண்டிய அரும்பணியை ஒரு இலக்கணப்பதிப்புக்காகச் செய்த கோபாலையரின் பதிப்புத் திறத்தை நாம் எந்தவிலை கொடுத்து ஈடுகொள்வது. ஒரு பானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல இவரின் எல்லாப் பதிப்புகளும் இத்தன்மையிலே அமைந்து காணப்படுகின்றது. ‘ஒரு நூலைத் தமது பதிப்பின் மூலம் ஆவணப்படுத்துவதில் தேர்ந்த அறிஞர்களாகச் சி. வை. தா., உ. வே. சா., ச. வையாபுரிப் பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடுவர். இவ்வகையில் கோபாலையரும் தம் இலக்கணப் பதிப்புகளைச் சிறந்த ஆவணங்களாக ஆக்கியிருக்கிறார்.’3 என்ற நா. அருள்முருகனின் கூற்றை இங்குப் பொருத்திப்பார்ப்பதன் வழி கோபாலையரின் ஒட்டுமொத்தமான பதிப்புச் செயல்பாட்டினை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

எழுத்துச் செயல்பாடுகள்

பதிப்பாசிரியர் என்ற ஒருமுகம் காட்டாது ஆய்வாளர், கட்டுரையாளர் என்ற பன்முகங்களோடு இச்சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியவர். அவ்வப்போது இவரின் சிந்தனையிலிருந்து உதிர்ந்த சில கருத்தாடல்கள் சிறுசிறு நூல்களாக அச்சேறின. அதில் கம்பராமாயணத்தில் இவர்கொண்ட ஆழ்ந்தகன்ற வாசிப்பு கம்பனைப் பலதன்மைகளில் விவாதிக்க வழிவகை செய்தது. அவை: கம்பராமாயணத்தில் முனிவர்கள் - 1994, கம்ப ராமாயணத்தில் தம்பிமார்கள், கம்பராமாயண படலச் சுருக்கம் (பாலகாண்டம் - 199, அயோத்தியா காண்டம் - 1999, சுந்தர காண்டம் - 1999, உயுத்த காண்டம் - 2000) முதலியன. இவை தவிர தொல்காப்பியச் சேனாவரையம் - வினா விடை விளக்கம், சீவகசிந்தாமணி - காப்பிய நலன், சீவகசிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் - 2002, முதலியன இவரின் ஆய்வுத் தளத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த மாறனகப் பொருளும் திருப்பதிக்கோவையும் என்னும் இலக்கண நூலைப் பதிப்பித்ததோடு அதற்குச் சிறந்ததொரு உரையும் வரைந்துள்ளார். பழைய உரை இல்லாத இந்த இலக்கணப் பிரதியைப் புரிந்துகொள்ள கோபாலையரின் உரை மிகுந்த உறுதுணைபுரிகின்றது.

நெடுங்காலம் இலக்கணங்களில் தோய்ந்தும் ஆய்ந்தும் இவர் செயல்பட்டதன் விளைவால் உருவானதுதான் தமிழ் இலக்கணப் பேரகராதி (2005) ஆகும். தமிழ் இலக்கணத்தின் மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றுக்கும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ள இப்பேரகராதியை உருவாக்கிய கோபாலையரின் வாழ்நாள் பணியாக, சாதனையாக நாம் கொள்ளலாம். இப்பேரகராதி மொத்தம் 17 தொகுதிகள் கொண்டது. அவை: எழுத்து - 2, சொல் - 4, பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1).

இப்பேரகராதியை ஆய்வாளர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் பொக்கிஷமாய்ப் பாதுகாக்க வேண்டும்.

மொழிபெயர்ப்புச் செயல்பாடுகள்

தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழிப் புலமை கொண்ட இவர் மொழிபெயர்ப்பிற்குச் சிறந்த பங்காற்றியுள்ளார். 2006-ஆம் ஆண்டு திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையினை எளிமையான பதங்களைக் கொண்டு தமிழாக்கம் செய்தவர் கோபாலையர். தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை வழியாக இரு தொகுதிகளாக வெளியிடப்பட்ட இம்மொழிபெயர்ப்பு பக்தி இலக்கியங்களில் குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பாகச் சுட்டிச் சொல்லலாம்.

மொழிபெயர்ப்பை இவர் செய்ததோடு மொழிபெயர்ப்பு செய்ய முனைகிற இவருடைய மேலைநாட்டு மாணவர்களுக்குத் துணையாகவும் தூணாகவும் நின்றிருக்கிறார்.

அவ்வகையில் இவரின் துணைகொண்டு சிலர் உருவாக்கிய மொழி பெயர்ப்புகள்:- 1. S.R. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர்காலக் கலைப்பணி - தமிழாக்கம், 2. ஆலன் டேனியலுவின் - மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்பு, 3. ஜூன்லுக் செவில்லியாடுவின் சேனாவரையம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு போன்றவை ஆகும்.

ஒட்டுமொத்தமாகத் தி. வே. கோபாலையரின் பணிகளைத் தொகுத்து நோக்கும் போது அவை ‘குன்றமுருண்டால் குன்றி வழியடை ஆகாதவாறு போலவும், யானை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லாது போலவும், கடல் வெதும்பின் வளாவும் நீரில்லாது போலவு’ மாகவே நம்முன் பெரும்வியப்பாய்க் காட்சியளிக்கிறது.

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினுந்
தான்றற் புகழ்தல் தகுதி யன்றே      (பாயிரம் - 52)

என்ற நன்னூலாரின் வாக்கிற்கிணங்க தன்னிடம் எத்துணை பெரிய அறிவு இருந்த போதிலும் அது குறித்துக் கர்வம் கொள்ளாமல் எளிமையுடனும் நேர்மையுடனும் அயராத உழைப்புடனும் நம்முன் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ( 2007.04.01 ). யானை வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் என்ற பெரியோர் வாக்கிற்கிணங்க இவர் வாழ்ந்த காலத்திலும் இவரால் பயனடைந்தவர்கள் பலர். இவர் இப்போது வீழ்ந்திருந்தாலும் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டின் வழி எதிர்காலச் சமூகமும் பயனடையும்.

பல வேடிக்கை மனிதர்களைப் போல
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

என்ற பாரதியின் அடிகள் அவ்வப்போது இவர்போன்ற சான்றோர்களால் தொடர்ந்து மெய்ப்பிக்கப்பட்டே வருகின்றன.

அடிக்குறிப்புகள் :

1. ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது, வீரையன், உதயை, மு. தினமணி, 7, ஏப்ரல், 2007.
2. ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், பார்த்தசாரதி, தமிழ் இலக்கணப் பேரகராதி (எழுத்து - 1), சென்னை: தமிழ்மண் பதிப்பகம், 2005.
3. தி.வே. கோபாலையரின் இலக்கணப் பதிப்புகள் முழக்கமும் உழைப்பும் அருள்முருகன், நா., காலச்சுவடு, இதழ் 85, ஜனவரி 2007, ப. 93.

தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen