புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 19, 20, 21, 22 )
செம்மொழியும் இரட்டைத்தமிழும்
இ. அண்ணாமலை
பேராசிரியர் - யேல் பல்கலைக்கழகம்

மொழி வெளிப்பாட்டின் வடிவ அடிப்படையில் இயல், இசை, நாடகம் என்று தமிழின் மூன்று வகை வடிவங்களை முத்தமிழ் என்று சுட்டும் மரபைப் போல், மொழியின் தன்மையின், பயன்பாட்டின் அடிப்படையில் தமிழைச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இரண்டு வகைப்படுத்தும் மரபும் காலத்தால் பழமையானது. தமிழின் இரண்டு பிரிவுக்கு இரு தமிழ் அல்லது இரட்டைத் தமிழ் என்று பெயரிடும் மரபுதான் இல்லை. இதற்குக் காரணம், கொடுந்தமிழ் தமிழின் ஒரு வகை அல்ல; அது தமிழர்கள் ஒதுக்கிவைக்க வேண்டிய மொழித் திரிபு என்ற கருத்தாகும். இலக்கணமற்ற வழக்கு, இழிசனர் வழக்கு என்ற முத்திரை அதன்மீது குத்தப்பட்டு, அதை ஒதுக்கிவைப்பதற்குச் சமாதானம் கற்பிக்கப்பட்டது. எந்த மொழி வடிவத்துக்கும் ஒரு இலக்கணம் – ஒரு விதிமுறை – உண்டு. விதிமுறை இல்லாமல், விதிமுறை அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளாமல், இரண்டு பேர் சொல்லாட முடியாது. சொல்லாடல் கால்பந்து போல் ஒரு விளையாட்டை ஆடுவது போன்றது. விதிமுறை இல்லாமல், விதிமுறையைப் பற்றிய அறிவு ஆடுபவர்களுக்கு இல்லாமல், எந்த விளையாட்டும் விளையாட முடியாது. கொடுந்தமிழ் இலக்கணத்திலிருந்து பிறழ்ந்த தன்மை கொண்டது என்று ஒருவர் சொன்னால், மொழி வழக்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகச் சமூகத்தின் மேல்மட்டத்தினர் பள்ளிகள் மூலம் நிலைநாட்டும் இலக்கணத்தையே அவர் குறிக்கிறார்; சாதாரண மக்களின் மொழியின் அடிப்படையாக இருக்கும் விதிமுறைகளை – இலக்கணத்தை – அல்ல. கொடுந்தமிழின் இலக்கணத்தை எழுத்தில் எழுத வீரமாமுனிவர் வர வேண்டியிருந்தது. பிரெஞ்சு முதலான ஐரோப்பிய மொழிகள் கொடுமொழிகள் (patios) என்ற நிலையிலிருந்து உயர்ந்து, தனித்தியங்கும் மொழிகள் ஆன வரலாற்றை அவர் அறிந்தவர்.

தமிழ் மொழி பற்றிய சமூக மதிப்பீடும் பார்வையும் செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற சொற்களின் பொருளில் ஏறி, அவற்றை மொழிப் பயன்பாட்டின் விவரணைப் பெயர்களாக (descriptive terms) அல்லாமல் மதிப்பீடு சார்ந்த பெயர்களாக (evaluative terms) மாற்றிவிட்டன. செந்தமிழ் என்ற சொல் செங்குத்தான தமிழ் – நிமிர்ந்த தமிழ் – [Standard (for literature) Tamil] என்ற அதன் வேர்ச் சொல்லின் பொருளிலிருந்து விலகி, இலக்கண விதிகளால் நிமிர்க்கப்பட்ட, வார்க்கப்பட்ட தமிழ் (Cultivated Tamil) என்ற பொருளைப் பெற்றது. பொருள் நீட்டத்தின் அடுத்தபடியாக, இந்தச் சொல் செம்மையான தமிழ் – உயர்வான தமிழ் – என்ற பொருளைப் பெற்றது; உயர்ந்தோர் தமிழ் என்ற முத்திரையைப் பெற்றது. மேலைநாடு என்ற சொல் மேற்கு நாடு என்ற அதன் வேர்ப் பொருளிலிருந்து விலகி, உயர்ந்த நாடு என்ற பொருளைப் பெற்றிருப்பது போன்றது இந்தப் பொருள் மாற்றம். கொடுந்தமிழ் என்ற சொல் அதன் வேர்ச் சொல்லின் அடிப்படையில், வளையும் தமிழ் என்று பொருள்படும். கொடுவாள் போன்று பயன்படுத்த லாவகமாக உள்ள தமிழ் என்ற பொருளை ஏற்கும். போர்வீரனுடைய நிமிர்ந்த, நெடிய வாளின் சுழற்சிக்குப் பயிற்சி தேவைப்படுவது போல் அல்லாமல், உழவர் பயன்படுத்தும் கொடுவாளுக்கு – அரிவாளுக்கு – தனிப் பயிற்சி தேவை இல்லை. செய்யும் வேலையிலிருந்து அதைக் கைப்படுத்தும் திறன் வருகிறது. பேச்சு மொழிக்குப் பள்ளிப் பயிற்சி தேவை இல்லை. வளையும் தமிழ் என்ற பொருளிலிருந்து கொடுந்தமிழ் என்ற சொல் விலகி, கொடுமையான தமிழ், கீழான தமிழ் என்ற பொருளைப் பெற்றது. கீழ்மக்களது மொழி என்ற முத்திரையைப் பெற்றது.

செந்தமிழ் புலவர்களின் வார்ப்பு மொழி, கொடுந்தமிழ் மக்களிடம் வாழும் மொழி என்று இரட்டைத் தமிழைப் புரிந்துகொண்டு, வாழும் மொழி இலக்கியத்துக்கும் கல்விக்கும் ஏற்ற மொழி என்று ஏற்றுக்கொள்வதை இந்தப் பொருள் மாற்றம் தடுத்தது. செந்தமிழே இலக்கிய ஆசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும் கையாள வேண்டிய மொழி, கொடுந்தமிழ் வீட்டிலும் தெருவிலுமே நிற்க வேண்டிய மொழி என்ற இரட்டைப் பாகுபாட்டைச் சமூகம் ஏற்றுக் கடைப்பிடித்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் இந்தப் பாகுபாட்டின் இறுக்கத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்த, பக்தி இலக்கியத்திலிருந்து பாரதி இலக்கியம் வரை முயற்சிசெய்யப்பட்டு ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது. அச்சு வந்து, மொழியைக் கட்டுப்படுத்தும் இலக்கிய மரபு, கல்வி மரபு போன்ற, சமூகத்தின் மேல்மட்டத்தினர் உருவாக்கிய மரபுகளின் ஆதிக்கம் குறைந்த நவீன காலத்தில் வார்ப்புத் தமிழில் நெகிழ்ச்சி அதிகமாகியது. இருந்தாலும், இரட்டைத் தமிழ் என்ற பாகுபாடு தொடர்ந்து இருந்தே வருகிறது.

இரட்டைத் தமிழ் வழக்கில் இந்தக் காலத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம் குறிப்பிடத் தக்கது. பள்ளிக்கல்வியின் சமூகத் தளம் விரிவடைந்து, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் சமூகப் பின்னணியும் ரசனையும் பலதரப்பட்டதாக விரிய, படைப்பிலக்கியம் அதன் கருப்பொருளிலும் மொழிநடையிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன்பின் செந்தமிழ்ப் பண்டிதர்கள் வலியுறுத்தம் மொழியாகக் குறுகிவிட்டது. நவீனப் படைப்பிலக்கியத்தின் நெகிழ்ந்த தமிழுக்குச் செந்தமிழ் என்ற பெயர் பொருந்தாமல் போயிற்று. இந்தத் தமிழைப் பேச்சு மொழியிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, எழுத்து மொழி என்ற பெயர் தோன்றியது. இந்தப் பெயர் தமிழ் மரபில் ஊன்றவில்லை என்றாலும், எழுத்துத்தமிழ் – பேச்சுத்தமிழ் என்று இரட்டைத் தமிழ் தொடர்ந்தது. செந்தமிழைவிட எழுத்துத்தமிழுக்குப் பயன்பாட்டுப் பரப்பு அதிகம். இது செய்யுள் இலக்கியத்துக்கு வெளியே உள்ள எல்லா ஆக்கங்களையும் உள்ளடக்கும். கொடுந்தமிழ் என்ற பெயர் வழக்கிலிருந்து போய்விட்டது. வேறுவேறு வட்டாரங்களையும் சாதிகளையும் சார்ந்த தமிழர்கள் தங்களுக்குள் பொதுவாகப் பேசப் பயன்படுத்தும் பொதுப் பேச்சுமொழி, வட்டாரம் மற்றும் சாதி சார்ந்த வட்டாரப் பேச்சு என்ற இரண்டு பொருளையும் உள்ளடக்கியது கொடுந்தமிழுக்குப் பதிலாக வந்துள்ள பேச்சுத்தமிழ் என்ற சொல்.

சமத்துவத்தைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய சமூகத்தில் மேல், கீழ் என்னும் சமூக மதிப்பீடு கேள்விக்குரியதாயிற்று. இது மொழியைப் பற்றிய பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய இரட்டைத் தமிழ் உயர்ந்தோர் வழக்கு, இழிசனர் வழக்கு என்று விளக்கம் கொடுக்க முடியாமல் போயிற்று. பள்ளிகளில் சமூகம் முழுவதும் தன் இலக்கியப் பண்பாட்டின் மூலம் அது என்று ஏற்றுக்கொள்ளவும், தமிழ்ச் சமூகத்தைப் பிரிதிநிதிப் படுத்தும் அடையாளமாக அதைக் காட்டவும் செம்மொழி என்ற கருத்தாக்கம் துணைசெய்கிறது. செம்மொழி என்ற பெயரில் செந்தமிழ் உயிர்ப்பிக்கப்படுகிறது. செந்தமிழ் – கொடுந்தமிழ், எழுத்துத்தமிழ் – பேச்சுத்தமிழ் போன்று செம்மொழிக்குத் தனியே ஒரு எதிர் இணை இல்லாமல் போக, அது செந்தமிழுடன் அடையாளம் காணப்படுவதால் இது சாத்தியமாகிறது.

செந்தமிழின் பழைய பொருளில் அதற்குப் பொருத்தமான எதிர் இணை நவீனத் தமிழே. செந்தமிழ் பழைய இரட்டைத் தமிழில் இலக்கியம் படைக்கும் மொழி வகையைக் குறித்தது. இன்று இலக்கியம் படைக்கும் நவீன மொழியில், எழுத்துத்தமிழும் பேச்சுத்தமிழும் அடங்கும். செந்தமிழ், படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை வழக்கிறந்த மொழி ஆகிவிட்டது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு எதிர்வினையாகச் செம்மொழி என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டு, அது கால வரையறை இல்லாத ஒன்று, எதிர் இணை இல்லாத ஒன்று என்ற எண்ணம் கட்டமைக்கப்படுகிறது. அதாவது, செந்தமிழுக்கு நவீன மொழியை எதிர் இணையாக ஏற்று, அதன் விளைவாக, செந்தமிழ் காலத்தால் முற்பட்டது; இன்று வழக்கிறந்தது என்ற கருத்துத் தோன்றுவது தடுக்கப்படுகிறது. செந்தமிழைச் செம்மொழியோடு அடையாளப்படுத்தி அது கால வரையறை இல்லாத மொழி வகை என்று சொல்ல வழி வகுப்பது நவீன மொழியின் இருப்பை மறுப்பதற்குத் துணைசெய்கிறது. இந்த மறுப்பின் தேவைக்குச் சில சமூகக் காரணங்கள் இருக்கின்றன.

தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் பெரிதும் மாறவில்லை, ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புறக்கணிக்கத் தக்கன என்ற சமூகக் கருத்து ஒரு காரணம். நவீனத் தமிழ் என்ற ஒன்று இல்லை என்ற கருத்தைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், செம்மொழிக்கு எதிர் இணை தேடும் தேவை இல்லாமல் போகிறது. இந்தக் கொள்கை பேச்சுத்தமிழின் பயன்பாட்டுப் பரப்பு, முக்கியமாக அதன் இலக்கியப் பயன்பாடு, விரிந்து வருவதையும், அது நவீனத் தமிழுக்கு நெகிழ்ச்சி கொடுத்துத் தமிழின் தன்மையை மாற்றுவதையும் புறக்கணிக்க வகைசெய்கிறது. இன்று எழுத்துத்தமிழில் ஏற்பட்டு வரும் நெகிழ்ச்சி, எழுத்துத்தமிழ் – பேச்சுத்தமிழ் என்ற இரட்டைத் தமிழின் இடைவெளியைக் குறைக்கிறது. இடைவெளி முற்றிலும் குறைந்து ஒற்றைத் தமிழாகி இலக்கியம் உட்பட எல்லாப் பயன்பாட்டிலும் ஒரே வகைத் தமிழ் வழங்கும் வாய்ப்பு வளரும் இந்த நேரத்தில் செம்மொழி என்ற கருத்தாக்கம் தமிழுக்கு வருகிறது. செந்தமிழை நவீன இலக்கிய மொழி ஆக்க அரசாலும் அரசின் கையிலுள்ள பள்ளிகளாலும் முடியாது என்ற நிலையில், செந்தமிழின் இயலாத தன்மைக்கு மாற்றாக, தமிழ் பேசும் எல்லாருக்கும் பாரம்பரியப் பெருமை தரும் மொழியாகச் செம்மொழி வருகிறது.

இந்த நிகழ்வில் செந்தமிழின் பயன்பாட்டில் ஆர்வமில்லாதவர்களும் – இதில் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும் அடக்கம் – செம்மொழி என்ற தமிழின் அந்தஸ்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படிப் பார்க்கும்போது, இரட்டைத் தமிழ் புதிய அர்த்தம் பெறுகிறது. செந்தமிழ் – கொடுந்தமிழ் என்ற பாகுபாட்டைக் கொண்டிருந்த இரட்டைத் தமிழ், எழுத்துத்தமிழ் – பேச்சுத்தமிழ் என்ற புதிய வடிவம் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், செம்மொழி இதற்கு அப்பாற்பட்ட ஒன்றாக, இன்றைய முறையாகக் கற்பிக்கப்படும் எழுத்துமொழியிலிருந்து மாறுபட்டு, வீட்டில் இயல்பாகக் கற்கும் தமிழ் பேச்சுமொழி என்று புரிந்துகொள்ள வழி ஏற்பட்டது.

மேலே சொன்ன சமூக மாற்றத்தால் இயல்பான பேச்சுத்தமிழை இலக்கிய வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை இன்றைய புதினங்களிலும் சிறுகதைகளிலும் சிறு அளவில் கவிதையிலும் பார்க்கிறோம். இதனால் இலக்கியத்துக்கு உரிய மொழி செந்தமிழ்தான் என்ற எண்ணம் வலுவிழந்து போகிறது. கொடுந்தமிழ் என்ற கருத்தாக்கம் வழக்கிலிருந்து போய்ப் பேச்சுத்தமிழ் என்ற கருத்தாக்கம் வந்தது போல், இலக்கியத்துக்கு உரிய மொழி என்ற தகுதி போகும்போது செந்தமிழ் என்ற கருத்தாக்கம் வலுவிழந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுகிறது. செந்தமிழ் மூலம் தங்களைத் தனித்து உயர்த்திக் காட்டிக்கொள்பவர்களுக்கு இந்த அச்சம் சமூகத்தில் தங்கள் ஆதிக்கநிலை பற்றிய கேள்வியாகத் தோன்றுகிறது.

அண்மையில் தமிழ் செம்மொழி என்ற ஒரு புதிய பாகுபாட்டுப் பெயரைப் பெற்றிருக்கிறது. தமிழ் மரபுக்கு இந்தப் பெயர் புதிது. இந்தப் பொருளில் பெயரடை சேர்ந்து செம்மைத்தமிழ் என்பது போன்ற ஒரு தொகைச்சொல் இல்லை. Classical language என்ற ஐரோப்பியக் கருத்தாக்கத்தின் பெயர்ப்பான செம்மொழி என்ற சொல்லின் அடிச்சொல் செந்தமிழ் என்ற சொல்லின் அடிச்சொல்லே. ஐரோப்பாவின் இடைக் காலத்தில், பேச்சுமொழிகளாக இருந்து, புதிதாக இலக்கியம் படைத்து, சமூக அந்தஸ்து பெற்று, Romance languages எனப்படும் மொழிகள் தனி மொழிகளாக ஆன பிறகு, அவற்றுக்கு வரலாற்று மூலமாக இருந்து பொது மக்கள் வழக்கிலிருந்து மறைந்த இலத்தீன், செம்மொழி என்ற நிலையைப் பெற்றது. பழைய கிரேக்கத்திலிருந்து புதிய கிரேக்கம் வேறுபட்டபோது முன்னது செம்மொழி எனப்பட்டது. மேலைநாட்டு வரலாற்றுமொழியியலாளர்கள் சமஸ்கிருதத்தை ஆராய்ந்தபோது, பாணினி இலக்கணம் எழுதிய, அவர் காலத்துப் பேச்சு வழக்கிலிருந்து மாறுபட்ட சமஸ்கிருத்திற்குச் செம்மொழிச் சமஸ்கிருதம் ( Classical Sanskrit ) என்று பெயர் கொடுத்தனர். (சமஸ்கிருதம் என்ற சொல்லாக்கம் செந்தமிழ் என்ற சொல்லாக்கத்தை ஒத்தது). ஒரு மொழியின் ஒரு காலகட்டத்தைச் செம்மொழி என்று வகைப்படுத்தும்போது அது அந்த மொழியின் மற்ற காலகட்டங்களிலிருந்து, வகைகளிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது. செம்மொழி மொழியின் மற்ற வகைகளுக்கு எதிர் இணையாக ( Polar pair ) கருதப்படுகிறது. செம்மொழி என்ற புதிய பெயரைத் தமிழ் மரபோடு ஒட்டிப்பார்க்கும்போது அது தமிழின் எந்த வகைக்கு எதிர் இணை என்ற கேள்வி எழுகிறது. அதைப் பேச்சுத்தமிழின் எதிர் இணை என்று சொல்ல முடியாது; பேச்சுத்தமிழின் எதிர் இணை எழுத்துத்தமிழ். எழுத்துத்தமிழே செம்மொழி என்று சொல்ல முடியாது. அதன் நெகிழ்ச்சித் தன்மையாலும், இக்காலத் தன்மையாலும் இன்றைய எழுத்துத்தமிழ் செம்மொழி ஆகாது. மொழித் தன்மையில் செம்மொழி செந்தமிழுக்குப் பக்கத்தில் வருகிறது எனலாம்.

செந்தமிழே செம்மொழி என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால், செம்மொழியின் இடம் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் சுருங்கிவிடும். ஏனென்றால், மேலே சொன்னபடி, செந்தமிழ் இப்போது பண்டிதர்களின் தமிழைக் குறிக்கும் சொல்லாகக் குறுகிவிட்டது. செந்தமிழ் வந்தடைந்துள்ள குறுகிய வட்டத்திலிருந்து அதை மீட்டெடுத்து, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியலுக்குத் தேவையான ஒன்றாக, உயர்ந்த இடத்தில் அமர்கிறது. செம்மொழியின் இந்தப் புதிய இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்வது தமிழின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். தமிழ்ச் சமூகத்தில் செம்மொழியின் புதிய இடம், இரட்டைத் தமிழின் பழைய பாகுபாடான 'செந்தமிழ் செவ்விலக்கிய மொழி; பேச்சுத்தமிழ் நாட்டார் இலக்கிய மொழி' என்ற கருத்துக்கு இடம் தருவதாக அமையக் கூடாது. நவீனத் தமிழிலும்செவ்விலக்கியம் பிறக்கும். இலக்கியப் பயன்பாட்டு அடிப்படையிலான பழைய மொழிவகைப்பாகுபாட்டை உறுதிப்படுத்துவது போன்ற பிரமையைச் செம்மொழி என்ற கருத்தாக்கம் உருவாக்காது பார்த்துக்கொள்வது அவசியம். தமிழ் உயிர்ப்புள்ள மொழியாகத் தொடர்ந்து வளர்வதற்கு இது மிகவும் முக்கியம். இதற்கு அரசின், அறிவுலகத்தின் ஆதரவு பழைய பாரம்பரியத்தைப் பேச உதவும் செம்மொழிக்கு மட்டுமல்லாமல் புதிய பாரம்பரியத்தைப் படைக்கும் நவீன மொழிக்கும் கிடைக்க வேண்டும்.

தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen