புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 47, 48 )
களவியல் உரையின் நடை
அ. தாமோதரன்
தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு) - ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம், ஜெர்மனி

இறையனார் களவியலின் பெயர், அதனை இயற்றிய ஆசிரியரின் பெயர், அதன் காலம், அந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம், அந்நூலுக்குத் தோன்றிய உரை, அது வாய்மொழி வடிவில் உலவி, எழுத்து வடிவம் பெற்ற காலம், அது நடந்துவந்த முறை என்பன போன்ற செய்திகள் எல்லாம் ஐயத்துக்கு உரியன. இலக்கிய வரலாற்றில் இவை எல்லாம் முடிவற்ற விவாதத்தைத் தோற்றுவித்துவிட்டன. ஆயினும் களவியலின் உரையாசிரியர் நக்கீரர், அவர் சங்ககால நக்கீரரின் வேறுபட்டவர், காலத்தால் அவர் மிகவும் பிற்பட்டவர், நமக்குக் கிடைத்துள்ள உரைகளுள் களவியல் உரையே பழமையானது, இலக்கண உரையின் அமைப்புக்கும் உரைநெறிகளின் உருவாக்கத்துக்கும் அவ்வுரையே அளவுகோல் என்பன போன்ற செய்திகள் அனைத்தும் முடிந்த முடிபுகள்; ஐயத்துக்கும் விவாதத்துக்கும் அப்பாற்பட்ட உண்மைகள்.

கற்பனை வளமும் எதுகைமோனையும் இணைந்த அந்த உரையின் மொழிநடை, நக்கீரர், சொல்லுக்குப் பொருளும் இலக்கண விளக்கமும் வரைந்துள்ள முறை, அழகான உவமைகளையும் நயம் மிக்க மேற்கோள் பாடல்களையும் பயன்படுத்தி அவர் நூற்பாவின் கருத்தை விளக்கும் திறம், கற்பவரின் நினைவைத் தூண்டும் அந்தாதி வடிவ வாக்கிய அமைப்பு, கற்பித்தலின் அடிப்படைக்கு ஏற்ற வினாவிடை முறை முதலிய அனைத்தும் இவ்வுரையின் தனித்தன்மைகள். இலக்கணத்துக்கு இலக்கியச் சுவையூட்டும் இந்த உரையினால் இந்நூல் பெருமை பெற்றது என்பது ஆய்வுலகின் ஒருமித்த கருத்து.

நடையியலுக்கு இவ்வுரை வழங்கும் தரவுகளைப் பற்றியும் இவ்வுரையின் பல்வேறு சிறப்பியல்புகள்பற்றியும் ஆய்வாளர்கள் பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் சபாபதி நாவலர் (1883), மறைமலை அடிகள் (1930), செல்வநாயகம் (1957), சுப்பிரமணிய ஐயர் (1959), அரவிந்தன் (1968), அருணாசலம் (1975), பரமசிவானந்தம் (1976), சுந்தரம் (1978), சொக்கலிங்கம் (1985), சண்முகம் (1994) முதலியோர் குறிப்பிடத் தக்கோர் எனலாம்.

களவியல் நூலின் சிறப்புக்குக் காரணம் நக்கீரரின் உரை. அவரது உரையின் சிறப்புக்கு முதற்காரணம் அதன் நடை. நடையியல் தமிழில் வேரூன்றி வளராத காரணத்தால் களவியல் உரையின் நடையழகுபற்றி விரிவான நூல் எழுத யாரும் இதுவரை முன்வரவில்லை. தமிழியலில் ஈடுபாடு கொண்டுள்ள இளந்தலைமுறையினர்க்கு இந்தக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். நக்கீரர் நடையின் சிறப்பியல்புகள் மிகப் பல; தனியே ஆராயத் தக்கன. அவற்றுள் ஒரு கூறு மட்டும் இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்படுகிறது.

களவியல் உரையில் என்பது என்னும் சொல்லை நக்கீரர் கையாண்டுள்ள முறை கணித்தற்கு உரியது. கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத் திரட்டல், அகலம் கூறல் என்று உரை நான்கு வகைப்படும் என்பார் (இறை. கள. 1 உரை,* பக். 19) நக்கீரர். இவை கருத்துரை, பதவுரை, பொழிப்புரை விருத்தியுரை (அகலவுரை) என்னும் கலைச்சொற்களால் வழங்கப்படும் இவற்றுள், பொருள் விளங்கும் வகையில் நூற்பாவைத் தெளிவாகப் பிரித்துப் பதப்பொருள் கூறுவது பதவுரை எனப்படும். காட்டாக, வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே (இறை. கள. 39) என்னும் நூற்பாவை, “வேந்து என்பது அரசு; வினை என்பது செய்கை; இயற்கை என்பது தன்மை; பார்ப்பார்க்கும் உரித்தே என்பது பார்ப்பார்க்கும் கிழமை உடைத்து என்றவாறு,” என நக்கீரர் பதம் பிரித்து உரை கூறுவார். இவ்வாறு மூலபாடத்தில் உள்ள சொற்களையும் தொடர்களையும் பொருளியைபு நோக்கிப் பிரித்து, அச்சொற்களுக்கும் தொடர்களுக்கும் இடையே என்பது என்னும் சொல்லை ஒரு வாய்பாடுபோலச் சேர்த்துப் பதவுரை கூறுவது நக்கீரரின் உரைமுறை. இந்த முறை இளம்பூரணர் உரையிலும் (தொல். களவு. 5) காணப்படுகிறது. அதோடு, என்றது (தொல். களவு. 2), ஆவது (தொல். களவு. 10) போன்ற பிற சொற்களையும் பதவுரை கூறுவதற்கு இளம்பூரணர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் மூலபாடத்துக்குப் பதவுரை கூறி விளக்கும் உரைவகைக்கு நக்கீரர் என்பது என்னும் ஒரே சொல்லை நூல் முழுதும் பயன்படுத்தியுள்ளார். இந்தச் சீர்மையும் ஒழுங்கும் நக்கீரரின் நடைச்சிறப்புகள்.

ஒரு சொல்லின் பொருளை அகராதி முறையில் இதற்கு இது என்றவாறு விளக்கும் போது சொல்லுக்கும் பொருளுக்கும் நடுவே என்பது என்னும் சொல்லைப் பயன்படுத்துவது பழைய முறை, அகவல் என்பது ஆசிரியமே, (தொல். செய்யுள். 80), பாட்டி என்பது பன்றியு நாயும் (தொல். மரபு. 66) என்று தொல்காப்பியத்திலும் மைம்மை என்பது மலட்டின் கிளவி, வேணவா என்பது வேட்கைப் பெருக்கம் என்று திவாகரத்திலும் (144, 1433) போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை என்று கலித்தொகையிலும் (133:7) அருஞ்சொற் பொருள் விளக்கம் கூறப்படுவதை நாம் நன்றாக அறிவோம். இந்தத் தொல்மரபைப் பின்பற்றி வன்புறை என்பது வற்புறுத்துவது (இறை. கள. 2 உரை, பக். 54), மிகுதல் என்பது பெருகுதல் (இறை. கள. 16 உரை, பக். 116), ஆறு என்பது வழி, கிளவி என்பது சொல் (இறை. கள. 30, பக். 65), பரம் என்பது புறம் (இறை. கள. 35, பக். 180) என்று நக்கீரர் சொற்பொருள் கூறுவதை அவர் உரையில் எங்கும் காணலாம். தொல்காப்பியம் திவாகரம் போன்ற நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த நூல்நெறியை உரைநெறியாகத் தழுவிக்கொண்ட பெருமை நக்கீரருக்கு உரியது.

என்பது என்னும் இச்சொல்லை முற்றிலும் வேறுபட்டதொரு முறையிலும் நக்கீரர் பயன்படுத்தியுள்ளார். அந்தச் சொல்லாட்சியைப் புரிந்துகொள்ளப் பின்வரும் வாக்கியங்கள் ஓரளவு உதவும்.

இந்நூல் என் நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று என்பது (இறை. கள. 1 உரை, பக். 7). இந்நூல் ... கேட்டார் யாரோ எனின் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பது (இறை. கள. 1 உரை, பக். 8). மற்றும் இது போல்வன களவு ஆகா; நன்மை பயக்கும் என்பது. (இறை. கள 1 உரை, பக். 13). அஃது ஒருதலையா நிகழ்வது அன்று என்பது (இறை. கள. 11 உரை, பக். 20). இருவகையானும் உவமிக்க அமையும் என்பது (இறை. கள. 2, உரை பக். 50).

மேலே எடுத்துக்காட்டில் வாக்கியங்கள் அனைத்திலும் என்பது என்ற சொல் பயனிலையை அடுத்து வருகிறது. இவ்வாக்கியங்களோடு பின்வரும் வாக்கியங்களையும் ஒப்பிட்டு நோக்கலாம்.

இவள் இறந்துபடும் போலும் (இறை. கள. 2 உரை, பக். 52). இவள் ... என் தன்மையளேபோலும் (இறை. கள. 2 உரை, பக். 54). எம்பெருமான் என்னைக் காண்டற்கும் கேட்டற்கும் ஆற்றியுளனாம்போலும் (இறை. கள. 2, உரை பக். 55). இவளை யான் எய்தினேன். எய்தியது உண்டேல் கனவே போலும் (இறை. கள. 2 உரை, பக். 55)

இந்த வாக்கியங்களின் பயனிலைகளோடு வரும் போலும் என்னும் இடைச்சொல் (நன். 441) ஐயப்பாட்டைக் குறித்து வருவது. இதுபோலவே என்பது என்ற சொல்லும் ஒரு இடைச்சொல் என்று கூறலாம். நச்சினார்க்கினியர் (தொல். இடை. 32) இதனை அசைநிலை இடைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளார்.

களவியல் உரையில் நக்கீரர் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ள இடங்களைக் கூர்ந்து நோக்கினால் இது அசைநிலை இடைச்சொல் அல்ல; துணிவுப் பொருளைக் குறித்து வரும் இடைச்சொல் என்று விளங்கக் கூடும். “பிரிவில் அசைநிலை எனவே தனித்து நின்று அசைநிலை ஆகா” என்று சேனாவரையர் (தொல். இடை. 32) கூறும் கருத்துரை இங்கு ஒப்பிடத் தக்கது. இலக்கண உரைகளிலும் பிற்கால உரைநடை நூல்களிலும் காணப்படும் என்பதாம் என்னும் வழக்காறும் இங்கு நினைவுகூரத் தக்கது. உண்மை எதுவாக இருந்தாலும் என்பது என்ற சொல்லைப் பயனிலையோடு இணைத்து நக்கீரர் பயன்படுத்துவது அவரது சொந்த நடை. வேறு எந்த உரையாசிரியரும் இந்த நடையைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஒப்பீட்டு நோக்கில் பழைய உரைகளை ஆராய்ந்தால் இச்சொல் இன்னும் விளக்கம் பெறும் என்று உறுதியாகக் கூறலாம்.

(* 1. களவியல் உரை மேற்கோள்களுக்கு நமச்சிவாய முதலியார் பதிப்பு (1943 பயன்படுத்தப்பட்டுள்ளது.)

துணைபுரிந்த நூல்கள்

  • அரவிந்தன், மு. வை., உரையாசிரியர்கள், சிதம்பரம்: மணிவாசகர் நூலகம், 1968.
  • அருணாசலம், மு., தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ப் புலவர் வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம்: காந்தி வித்தியாலயம், 1972.
  • நமச்சிவாய முதலியார், கா. (ப-ர்.), இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், சென்னை: சி. ஆர். என். & சன்ஸ், 1943.
  • சண்முகம், செ. வை., இலக்கண உருவாக்கம், சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1994.
  • சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிகை, சென்னை: சாது அச்சுக்கூடம், 1927. முதற்பதிப்பு, 1889.
  • சுந்தரம், இராம., சொல் புதிது சுவை புதிது, சென்னை: தமிழ் நூலகம், 1978.
  • சுப்பிரமணிய ஐயர், ஏ. வி., தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, சென்னை: அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், 1959.
  • செல்வநாயகம், வி., தமிழ் உரைநடை வரலாறு, சென்னை: குமரன் புத்தக நிலையம், 2000. முதற்பதிப்பு, 1957.
  • பரமசிவானந்தம், அ. மு., தமிழ் உரைநடை, சென்னை: தமிழ்க்கலைப் பதிப்பகம், 1976.
  • மறைமலை அடிகள், மணிவாசகர் வரலாறும் காலமும், சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், 1957. முதற்பதிப்பு, 1930.
  • மோகன், இரா. & சொக்கலிங்கம், நெல்லை ந., உரைமரபுகள், சென்னை: மணிவாசகர் பதிப்பு, 1985.
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen