புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
அரிமா நோக்கு
2007 ஏப்பிரல்
 (பக்கம் 49, 50, 51, 52 )
வள்ளுவர் அறிமுகப்படுத்திய சொற்கள்
பா. ரா. சுப்பிரமணியன்
மொழி அறக்கட்டளை - சென்னை

ஒரு புலவர், ஒரு நூல், புதிய சொற்கள்

சங்க காலம் என்ற நீண்ட காலப் பகுதியில் பல புலவர்கள், பல்வேறு காலங்களில், சேரநாட்டுப் பகுதி உள்ளிட்ட பரந்த தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுள் சிலர் ஓரிரு பாடல்கள் பாடியவர்கள்; சிலர் பல பாடல்களையோ ஓர் நீண்ட பாடலையோ பாடியவர்கள். சங்க இலக்கியத்திற்கு உரிய பாடல்பொருள்களின் பொதுமைப் பண்பின் காரணமாக எழுந்த பொதுச் சொற்களில் ஒரு புதிய சொல் அறிமுகமாவதைக் கண்டறிவதும் கடினம்; கண்டறிந்தாலும் இந்தக் காலத்தில் இந்தப் புலவரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறுவதும் கடினம். ‘வீரர்’ போன்று ஒரு புலவரையும் (நக்கீரர்), ஓர் இடத்தையும் (மதுரை), ஓரளவு காலத்தையும் (கி.பி. 3 ஆம் நூற்றாண்டு) அடையாளப்படுத்திக் காட்டக் கூடிய சொற்கள் குறைவு.

இதற்கு மாறாக, சங்க காலத்தை ஒட்டி எழுந்த, ஓர் ஆசிரியரால் இயற்றப்பட்ட, ஒரு நூலில் இடம் பெற்றிருக்கும் சொற்களில், புதிய சொற்களின் வரவை எளிதாகக் கண்டு கொள்ளலாம். சங்க இலக்கியச் சொற் களஞ்சியத்தின் தொடர்ச்சியையும் தம் கருத்தாக்கங்களுக்கு வேண்டிய புது வரவுகளையும் அந்நூலில் காண இயலும். தமிழ்மொழியின் சொற்கோவை எவ்வாறு விரிவடைகிறது என்பதையும் காண முடியும். இந்தக் கோணத்தில் வள்ளுவரின் குறள் மிகுந்த கவனிப்பிற்கு உரியதாகிறது. வள்ளுவர் தமிழ்மொழிக்குப் புதிதாக அளித்த சொற்கள் எவை? அவற்றுள் எவையெல்லாம் இன்றைய மொழியிலும் நிலைகொண்டுள்ளன? இவற்றை அறியும் ஒரு முயற்சியாகவே இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளுக்கு அமைந்த சொல்லடைவுகள்

 வள்ளுவர் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்த சொற்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் திருக்குறளில் உள்ள சொற்களைச் சங்க இலக்கியச் சொற்களோடு ஒப்பிட வேண்டும். சங்க இலக்கியங்களில் இடம்பெறாமல், குறள்பாக்களில் மட்டும் இடம்பெற்றிருக்கும் சொற்கள் வள்ளுவர் வழியாகத் தமிழுக்கு அறிமுகமாகின்றன எனக் கொள்ளலாம். இந்த ஒப்பீட்டைச் செய்யச் சங்க இலக்கியச் சொற்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் ஒரு சொல்லடைவும், அது போன்றே திருக்குறள் சொற்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லடைவும் தேவை. சங்க இலக்கியம் என்பதில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய 18 நூல்கள் அடங்கும்; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள் ஒன்று என மரபாகக் கூறினாலும் திருக்குறள் ஏனைய 17 நூல்களுக்கும் முற்பட்டது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களோடு குறளின் சொற்களை ஒப்பிடத் தேவை இல்லை.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இரண்டிலும் உள்ள சொற்களுக்குக் கணினி வழியாகச் சொல்லடைவு உருவாக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. (A word Index of Old Tamil Cankam Literature by Thomas Lehmann and Thomas Malten, Franz Steiner Verlag Stuttgart, 1992); பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலுள்ள அனைத்துச் சொல் வடிவங்களையும், அவற்றின் அனைத்து வரவுகளையும் அடக்கிய அந்த அடைவில் சொல் வடிவங்களுக்குப் பொருள் தரப்படாதது அதன் பயனைக் குறைத்துவிடுகிறது; ஆனாலும் சங்க இலக்கிய நூல்களில் உள்ள சொற்களைக் கண்டறிய உதவுகிறது. திருக்குறளுக்கு இன்று கிடைக்கக் கூடிய சொல்லடைவுகளுள் சிறப்பானது சாமி. வேலாயுதம் பிள்ளை உருவாக்கிய ‘திருக்குறட் சொல்லடைவு’ தான் (மொழியரசிப் பதிப்பகம், சென்னை, 1952). சொற்களுக்குப் பொருள், இலக்கணக்குறிப்பு, சொல்மூலம் முதலியவை தரப்பட்டிருக்கும் இந்தச் சொல்லடைவு ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியது.

சங்க இலக்கியச் சொல்லடைவில் பொருள் தரப்படாததால் சங்க இலக்கியச் சொற்களுடன் திருக்குறள் சொற்களைப் பொருளோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பணி கடினமாகிவிடுகிறது. திருக்குறளில் இருக்கும் சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்று அறியும் சொல் அளவு ஒப்பீட்டை ஓரளவு எளிதாகச் செய்யலாம்; பொருள் அளவில் ஒப்பிடுவது கடினமான பணி. திருக்குறளில் இடம்பெற்றுள்ள சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை என்றால் அவை திருக்குறளுக்கு மட்டுமே உரிய சொல்லாகின்றன. அவை வள்ளுவர் தமிழுக்கு அறிமுகம் செய்துவைக்கும் சொற்கள் ஆகின்றன. இந்த முறையில் வள்ளுவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சொற்களை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. முதன்முதலாக வள்ளுவர் வழியாகத் தமிழுக்கு வந்த சொற்கள் எத்தனை? எவ்வாறானவை?

சொற்களின் எண்ணிக்கையும் பட்டியலும்

சங்க இலக்கியங்களில் காணப்படாத திருக்குறள் சொற்களை, ஒரு வசதிக்காக, இரு வகையாகக் காணலாம். வினைச்சொற்கள், வினைச்சொற்கள் அல்லாதவை எனப் பிரித்துப்பார்ப்பது வள்ளுவர் அறிமுகம்செய்த வினைச்சொற்களின்மேல் தனிக் கவனம் செலுத்தத் துணைபுரிகிறது. பின்வரும் 17 வினைச்சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லாதவை:

  1. அவ்வித்தல் (167, 169)
  2. இவறுதல் (432, 437, 1002, 1003)
  3. உஞற்றுதல் (604, 607, 620)
  4. ஐயப்படுதல் (702, 958)
  5. சிமிழ்த்தல் (274)
  6. சிறக்கணித்தல் (1095)
  7. சினைத்தல் (1203)
  8. தற்காத்தல் (56) 
  9. தறுதல் (1023)
  10. துருவுதல் (929)
  11. நயப்பித்தல் (1189, 1190)
  12. நுதுத்தல் (1148)
  13. பீழித்தல் (843, 1217)
  14. பொச்சாத்தல் (199, 246, 533, 537)
  15. மேற்செல்(லு)தல் (335, 784)
  16. வெயர்த்தல் (1320)
  17. வேர்த்தல் (487)

மேற்கூறிய 17 வினைச்சொற்களுள் ஐயப்படுதல், தற்காத்தல், துருவுதல், மேற்செல்(லு)தல், வெயர்த்தல், வேர்த்தல் ஆகிய 6 வினைச்சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. கடைசி இரு வினைச்சொற்களும் சொல்வடிவத் தொடர்புடையவை (வியர் > விர் > வேர்). வள்ளுவர் ‘நுதல் வியர்ப்ப’ என்றும் ‘உள் வேர்ப்பர்’ என்றும் ஒரு வினையடியை இரு வேறு வடிவங்களில் பயன்படுத்தியிருக்கிறார். சினைத்தல் என்னும் வினையைத் ‘தும்மல்’ என்னும் பெயர்ச்சொல்லுடன் இணைத்திருக்கிறார். ‘தும்மல் சினைப்பது போன்று’ என்பதில் ‘சினை’ ‘உண்டாதல்’ என்னும் பொருள் உடையது. இன்றைய தமிழில் ‘வா’ என்னும் வினைதான் ‘தும்மல்’ (தும்மல் வந்தது) என்பதுடன் சேரக் காண்கிறோம். ‘தும்மல் சினைத்தல்’ வள்ளுவரின் சொற்சேர்க்கை.

வள்ளுவர் அறிமுகப்படுத்திய 17 வினைகளில் 8 வினைகள் பிற திராவிட மொழிகளிலும் இருப்பதை Dravidian Etymological Dictionary (Revised) வழியாக அறிய முடிகிறது. வை: உஞற்று (DEDR 584), சிமிழ் (2542), சினை (2592), தறு (3142), துருவு (3347), நயப்பி (3602), பொச்சா (4475), வெயர்/வேர் (5486). திருக்குறளில் ‘அ’ வை முதலாகக் கொண்ட வினைச்சொற்கள் 49. அவற்றுள் ‘அவ்வி’ என்னும் வினை மட்டுமே சங்க இலக்கியத்தில் இல்லை. ஏனைய 48 வினைகளும் (அஃகு, அகல், அகழ், அகற்று, அசை, அஞ்சு போன்றவை) சங்க இலக்கியத்தில் உள்ளன. முந்திய இலக்கியங்களின் மொழி அறுபடாமல் குறளில் தொடர்வதை அவை காட்டுவதாகக் கொள்ளலாம்.

பிற சொற்கள்

வினைச்சொற்கள் நீங்கலாக உள்ள பிற சொற்களைப் பார்க்கலாம். பெயர்ச்சொற்கள் உள்ளிட்ட 84 சொற்கள், சங்க இலக்கியத்தில் காணப்பெறாதவை, குறளில் வந்துள்ளன. இன்று மிகவும் புழக்கத்தில் உள்ள சில சொற்கள் வள்ளுவர் நமக்கு வழங்கியவை.

இருட்டு (913), குடும்பம் (1029), தோல்வி (986), நாகரிகம் (580), பிற்பகல் (319), மந்திரி (639) ஆகியவை வள்ளுவர் தந்தவை. (கண்ணின்) கருமணி (1123), கள்ளம் (1184, 1275), கொள்கலம் (1029), சிற்றின்பம் (173), திண்மை (54, 743, 988), மாறுபாடு (945) ஆகியவையும் அவரால் நமக்குக் கிடைத்தவை. எங்ஙனம் (251), எஞ்ஞான்று (44 மேலும் 17 இடங்களில்), பொள்ளென (487), மேன்மேல் (368) போன்ற வினையடைகளையும் அவரிடமிருந்து நாம் பெற்றிருக்கிறோம்.

ஆசாரம் (1075), சூது (931), தானம் (19, 295), பகவன் (1), பாக்கியம் (1141), பாவம் (146), பாவி (168, 1042), பூசனை (18) ஆகியவையும் வள்ளுவர் அறிமுகப்படுத்திய சொற்கள். அவர் வழங்கிய ‘விக்குள்’ (335) இன்று ‘விக்கல்’ என்னும் வடிவில் வழங்குகிறது.

ஓரிரு சொற்கள் வட்டார மொழிகளில் வழங்கக் காண்கிறோம். அங்கணம் (720), ஊருணி (215), (கொல்லன்) பட்டடை (821) (இது இன்று பட்டரை என்றே மிகுதியாக அறியப்படுவது) ஆகிய சொற்கள் தென் மாவட்ட மொழிகளில் வழங்கிவருபவை.

வள்ளுவர் அறிமுகப்படுத்தி, இன்றும் வழக்கில் உள்ள மற்றொரு சொல் ‘தூக்கம்’ (668); ஆனால் அந்தச் சொல்லை ‘சோர்வு’ என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறார்; ‘உறக்கம்’ என்ற பொருளில் அவர் வழங்கவில்லை. இது போன்றே ‘தாழ்ச்சி’ (671) என்ற சொல்லையும் ‘கால நீட்டிப்பு’ என்னும் பொருளில் வழங்கியிருக்கிறார்.

அவர் அறிமுகப்படுத்திய இரு சொற்கள் இக்கால ஆட்சித் தமிழ்க் கலைச்சொற்களில் இடம்பெற்றுவிட்டன. அவை ‘அமைச்சு’ (381), ‘ஆயம்’ (933). ‘அனிச்சம்’ என்பது சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப் பாட்டிலும் (62), கலித்தொகையிலும் (911) வழங்கியிருக்கும் சொல்; ஆயினும், வள்ளுவர் இந்தச் சொல் குறிப்பிடும் பூ மென்மைத் தன்மை உடையது என நான்கு குறள்களில் (90, 1111, 1115, 1120) குறிப்பிடுகிறார். குறிஞ்சிப் பாட்டிலும் கலித்தொகையிலும் அனிச்சம், பூ என்ற அளவிலேயே குறிப்பிடப்பட்டது. அதற்கு மென்மைத் தன்மை வழங்கி அந்தப் பூவைச் சிறப்பித்திருக்கிறார், வள்ளுவர்.

இதுவரை இக்காலத் தமிழிலும் பெருமளவு வழக்கில் உள்ள, வள்ளுவர் அறிமுகப்படுத்திய, சொற்களைப் பார்த்தோம். இனி வள்ளுவர் தொடங்கிவைத்த, இக்காலத் தமிழில் வழங்காத சில சொற்களைக் காணலாம். அவம் (262, 266 ‘பயனற்றது’), அளறு (255, 835, 919 ‘நரகம்’), ஒட்டார் (679, 826 ‘பகைவர்’), ஒட்பம் (402, 425 ‘அறிவுடமை’), ஒப்பாரி (1071 ‘நிகர்த்தல்’), ஒருவந்தம் (563, 593 ‘உறுதி’), கஃசு (1037 ‘கால் பலம்’), கவிகை (389 ‘அரசனது குடை’), குடங்கர் (890 ‘குடிசை’), சலம் (660, 956 ‘வஞ்சனை’), தவ்வை (167 ‘மூத்தவள்’, ‘மூதேவி’), தா (853 ‘கேடு’), துப்புரவு (263, 378, 1050 ‘உணவு’), துலை (986 ‘ஒப்பு’), நத்தம் (235 ‘ஆக்கம்’), படாம் (1087 ‘யானை முக அணி’), பதடி (196 ‘பதர்’), பீழை (658, 839, 843 ‘துன்பம்’), மாடு (400 ‘செல்வம்’), மிறை (847 ‘வருத்தம்’), வரன் (24 ‘மிக்கது’), விழுப்பம் (21, 131 ‘சிறப்பு’), வெளியார் (714 ‘அறிவிலாதவர்’), வேபாக்கு (1128 ‘வெப்பமுறுதல்’) முதலிய சொற்கள் குறிப்பிடத்தக்கவை. ‘தவ்வை’யை ‘அவ்வை’ என்பதுடன் இணைத்துக் காண வேண்டும். அது பிற திராவிட மொழிகளிலும் வழங்கும் சொல் (DEDR 273).

பெண்ணைக் குறிப்பிட 7 அன்மொழித் தொகைச் சொற்களை வள்ளுவர் வழங்கியிருக்கிறார். அணியிழை (1102), ஆய்தொடி (911), இலங்கிழை (1262), ஒண்டொடி (1101), ஒண்ணுதல் (1240), ஒளியிழை (1329), மாணிழை (1114) இவை ஏழும் பெண்ணைக் குறிப்பிடும் சொற்களாகச் சங்க இலக்கியத்தில் வரக் காணோம். சங்க இலக்கியத்தில் வழங்கும் ‘கணவன்’ என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தாமல் ‘தற்கொண்டான்’ (51) என்ற சொல்லைத்தான் வழங்கியிருக்கிறார்.

 ‘கொல்’ என்னும் வினை சங்க இலக்கியத்தில் வழங்கிய சொல்தான். ஆனால் அந்த வினையடியிலிருந்து உருவான ‘கோறல்’ (254, 321) வள்ளுவரால் முதன்முதல் அறிமுகமாகிறது. (‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று’ எனப் பின்னர் சிலப்பதிகாரத்திலும் காண்கிறோம்.)

படு என்னும் வினையின் (முதனிலை நீண்ட) தொழிற்பெயராகிய ‘பாடு’ என்பது இணைந்த சொற்கள் சிலவற்றை வள்ளுவர் அறிமுகம் செய்திருக்கிறார். ஊறுபாடு (945), ஐயப்பாடு (587), திறப்பாடு (640), தொடர்ப்பாடு (345), மாறுபாடு (945) ஆகிய 5 சொற்களும் வள்ளுவரால் தமிழுக்குக் கிடைத்தவை. சங்க இலக்கியத்தில் இல்லாத, ஆனால் தொல்காப்பியத்தில் உள்ள சொற்களுள் பின்வரும் 10 சொற்கள் வள்ளுவர் பயன்படுத்தியவை; அவை சங்க இலக்கியத்தில் இல்லை; ஆனால் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

அடிமை (குறள் 608; தொல். சொல். கிளவி. 57), உலகியல் (குறள் 572; தொல். பொருள். அகத். 56), ஓத்து (குறள் 134; தொல். பொருள். அகத். 33), சாக்காடு (குறள் 235; தொல். பொருள். கள. 9), பகுதி (குறள் 111; தொல். பொருள். புறத். 25), பொச்சாப்பு (குறள் 285, 532, 534; தொல். பொருள். மெய்ப்.1 2;26), பொருட்டு (குறள் 81, 212, 256, 725, 784, 1017; தொல். பொருள். மரபி. 104), மடிமை (குறள் 608; தொல். பொருள். மெய்ப். 26), மானம் (குறள் 384, 432, 766, 969, 970, 1020; தொல். பொருள். அகத். 44), மேன்மை (குறள் 137; தொல். பொருள். அகத். 44).

‘அடிமை’ என்னும் சொல் மட்டுமே தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் வருகிறது. ஏனைய 9 சொற்களும் பொருளதிகாரத்தில் உள்ளவை. முதலாவதாகத் தொல்காப்பியத்திலும் இரண்டாவதாகத் திருக்குறளிலும் வந்திருக்கும் இந்தச் சொற்கள் சங்க இலக்கியங்களைத் தாண்டி வந்துள்ளன. சில சொற்கள் திருக்குறளின் அதிகாரத் தலைப்புகளில் மட்டுமே உள்ளன; குறள் பாக்களில் அவை இடம்பெறவில்லை. அவை: நுணுக்கம் (அதிகாரம் 132: புலவி நுணுக்கம்), படர் (அதி.117: படர் மெலிந்து இரங்கல்; 120: தனிப்படர் மிகுதி), மெலி (அதி. 117: படர் மெலிந்து இரங்கல்), வாழ்த்து (அதி. 1: கடவுள் வாழ்த்து).

அதிகாரத் தலைப்புகளில் உள்ள சொற்களை வள்ளுவரின் சொற்களாகக் கொள்வது சரிதானா என்னும் ஐயத்தால் அவை குறித்து மேலும் இங்குக் கூறவில்லை. மை விகுதியை இறுதியில் உடைய சொற்கள் அஞ்சாமை, அடங்காமை, இகழாமை போன்ற எதிர்மறைத் தொழிற்பெயர்கள் பலவற்றை (ஏறத்தாழ 40) வள்ளுவர் அறிமுகம் செய்துள்ளார். அவற்றுள் சில பலமுறை வந்துள்ளன. எடுத்துக்காட்டாக: செய்யாமை 9 முறை. அவர் எடுத்துக்கொண்ட அற, ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு அவை தேவையான சொற்கள்.

புதுவரவு 2.5 விழுக்காடு

சங்க இலக்கியச் சொற்களோடு ஒப்பிட்டதனால் திருக்குறளில் இடம்பெற்றுள புதிய சொற்களை அறிய முடிந்தது. ஒரு நூறு சொற்கள் தமிழுக்கு வள்ளுவர் அளித்தவை. அவற்றில் சில சொற்கள் மொழியில் நிலைகொண்டு இன்றளவும் வழக்கில் வழங்கிவருகின்றன. வேறுசில இலக்கியங்களில் இடம்பெற்றன. திருக்குறளில் 4300 சொல் வடிவங்கள் இருப்பதாகச் சாமி. வேலாயுதம் பிள்ளை தம் சொல்லடைவில் குறித்துள்ளார். அவற்றை அகராதி முறைப்படி, அடிச்சொல் முறைப்படி, அமைத்தால் 3500◌4000 சொற்கள் இருப்பதாகக் கொள்ளலாம். வள்ளுவர் புதிதாக அறிமுகப்படுத்தியவை 100; இந்தப் புது வரவுகளைச் சதவிகிதப்படி கூறினால் 2.8 ◌ 2.5. ஏனைய சொற்கள் அனைத்தும் சங்க இலக்கியச் சொற்களின் பொருளிலேயே வழங்குகின்றனவா என்பது வேறுவகையான ஆய்விற்கு உரியது.

முடிவுரை

சங்க இலக்கியத்தில் ஒரே ஒரு முறை வந்திருக்கும் சொற்களை வள்ளுவர் குறளில் பயன்படுத்தி வழக்கிற்குக் கொண்டுவருகிறார். "பேடி" என்னும் சொல் அகநானூற்றில் "பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப" (2062) என வந்துள்ளது. வள்ளுவர் இந்தச் சொல்லை இருமுறை ("பேடி கை வாளாண்மை போல" (614), "பகையகத்துப் பேடி கை ஒள்வாள்" (727) என்று பயன்படுத்தியுள்ளார். அகநானூற்றில் ஒரு முறை வந்துள்ள "ஆசை" ("செலவு நன்று என்னும் ஆசை" (199: 1516) என்ற சொல்லையும் வள்ளுவர் ("அவம் செய்வார் ஆசை உட்பட்டு" (266) என வழங்கியிருக்கிறார். அதே வேளையில் அகநானூற்றில் ஒருமுறை வந்துள்ள "வீரர்" என்ற சொல்லைப் படைச்செருக்கு, படை மாட்சி முதலிய அதிகாரங்களிலும்கூட எடுத்தாளவில்லை. சங்க இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்ட "மறவர்" என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார். ("உறின் உயிர் அஞ்சா மறவர்" (778). "ஆசை", "வீரர்" இரண்டுமே வடமொழிச் சொற்கள். "ஆசை" என்னும் சொல்லை எடுத்தாள்கிற வள்ளுவர் "வீரர்" என்ற சொல்லை விடுத்துப் பழைய சொல்லாகிய "மறவர்" என்பதையே எடுத்தாள்கிறார். வடமொழிச் சொற்கள் தமிழில் எவ்வாறு பரவியிருக்கக்கூடும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு சொல் வழக்கிற்கு வர அன்று என்ன ஊடகங்கள் அல்லது வழிகள் இருந்தன? இது ஒரு கேள்வி. மற்றொரு கேள்வியும் எழுகிறது. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் சங்க இலக்கியங்களைத் தாண்டித் திருக்குறளில் இடம்பெற்றிருப்பது போல, அகநானூற்றில் அறிமுகமான "வீரர்" என்னும் சொல் திருக்குறளைத் தாண்டிச் சிலப்பதிகாரத்திற்குச் சென்றிருக்கிறது. பழைய சொற்கள் தொடர்கின்றன. புதிய சொற்கள் இடையில் விடுபட்டுத் தொடர்கின்றன. தமிழின் ஒரு கால கட்டத்தில் அறிமுகமான சொற்கள், தொடர்ந்து வரும் அடுத்த கால கட்டத்தில் வழக்கிற்கு வந்துவிடும் என்னும் எதிர்பார்ப்பு சரியா, தவறா? அல்லது பெரும்பான்மையும் சரி, சிறுபான்மை தவறிவிடுவதுண்டு என்பதா? இவற்றைக் கண்டறிய மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

[குறிப்பு: இக்கட்டுரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் 18.9.2006 இல் நிகழ்த்திய டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவின் சுருக்கம்].

தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி - Site is best viewed with Internet Explorer & 1024*768 Screen