முன்னுரை
யாழ்ப்பாணத் தமிழ் தனித்துவமான மொழியியல்புகள்
சிலவற்றையுடையதொன்றாக அறிஞர்களாலே கருதப்பட்டுள்ளது. சுப்பிரமணிய சாஸ்திரி (1934:
54) சென்ற நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலே தமிழ்மொழி ஆய்விலே சிறப்புடையவராகக்
கருதப்பட்டார். அவர் பொதுவாக இலங்கைத் தமிழ் பற்றியும் சிறப்பாக யாழ்ப்பாணத்தமிழ்
பற்றியும் கருத்துக்கூறும்போது, “பல வகைகளில், சொற்கள் எழுதப்படுவது போலவே
அவர்களால் உச்சரிக்கப்படுகின்றன” என்று குறிப்பட்டுள்ளார். ஹோணல் (1918: 23,
குயிப்பர் (Kuiper) என்பாருடைய கட்டுரையிலே (1962) குறிப்பிட்டபடி) என்னும் மேலைத்
தேயத்தவர் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
|
“நீண்ட காலமாக வடக்கிலங்கையிலே தனித்து
வாழ்ந்துவரும் தமிழர் தம்முடைய தமிழகச் சகோதரர்கள் நீண்ட காலமாக மறந்த பல தமிழ்
வழக்கங்களைத் தக்கவைத்துள்ளனர். அதனுடன், செந்தமிழை நிகர்த்த மொழியினைப் பேச்சு
வழக்கிலே பயன்படுத்துகின்றனர்.”
|
யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடு, மொழி, ஏதோ வகையில் சில
தனித்துவங்களைக் கொண்டிருப்பதற்கான காரணம் இலங்கை தீவாக அமைந்திருப்பதும்
யாழ்ப்பாணம் குடா நாடாக அமைந்திருப்பதுமே எனக் கொள்ளக்கூடியதாய் உள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ் தனியான ஒரு மொழியோ என்றும் ஐயப்படுகின்றனர். மு. சண்முகம்பிள்ளை
(1967) கூறுவதை நோக்கவும்:
|
“சாதாரணமாக யாழ்ப்பாணத் தமிழைக் கேட்டதும்
மாணவர்கள் 'இதென்ன மலையாளமா? என்று கேட்கின்றனர். ...மலையாளம் தமிழிலிருந்து வேறாய
மொழி என்றால், யாழ்ப்பாணத் தமிழையும் வேறு மொழி என்று கூறலாமோ என்ற ஐயமே
எழுகின்றது.”
|
இவ்வாறு தனித்துவம் வாய்ந்த யாழ்ப்பாணத் தமிழிலே சங்கப்
பாடல்களிற் பயின்று வந்த சொற்களும் சொற்றொடர்களும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த உண்மையினை நிறுவுதற்குச் சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய
குறுந்தொகையிலிருந்து சான்று காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
1.தொடரியங்கள்
குறுந்தொகைப் பாடல்களிலே பல இடங்களில், இன்று
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே பயன்படுத்தப்படும் தொடரிய (வாக்கிய) அமைப்புகள்
இடம்பெறுகின்றன.
-
“நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ?” (75 : 1)
-
“உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர்” (127 : 5-6)
-
“உது எம் ஊரே” (179 : 3)
-
“மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும்” (216 : 6-7)
-
“கெட்ட இடத்து உவந்த உதவி...மறந்த மன்னன் போல”(225 :
3-4)
-
“நோய்க்கு மருந்து ஆகா” (263 : 3)
-
“படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ” (266 : 3)
-
“மெல்ல மெல்ல இல்லாகுதுமே” (290 : 6)
-
“தங்கினிர் ஆயின் தவறோ” (345 : 1)
-
“சொல்லவும் ஆகாது அஃகியோனே” (346: 2)
மேற்காட்டிய தொடரியங்களும்
இலக்கிய நடையுடையன. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை அவ்வாறே யாழ்ப்பாணப் பேச்சுத்
தமிழிலே பயின்றுவருகின்றன.
-
முதலாவது தொடரியம் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே
அப்படியே இடம்பெறுகிறது.
-
இரண்டாவது, “நீ
கண்டனியே கண்ட ஆக்களைக் கேட்டனியே?” என யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்றது.
-
மூன்றாவது தொடரியம், “உது எங்கட ஊர்” என யாழ்ப்பாணப்
பேச்சுத் தமிழிலே அமைகின்றது. உது என்னும் அண்மைச் சுட்டுப்பெயர் தமிழ்
இலக்கணங்கள் குறிப்பிடும் மூன்று சுட்டுகளுள் ஒன்றாகும். தொல்காப்பியர்
குறிப்பிட்ட இச்சுட்டு தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கிலே முற்றாக வழக்கிழந்துவிட்டது.
ஈழத்திலும் யாழ்ப்பாணம், மன்னார், வன்னி ஆகிய பிரதேசங்கள் அடங்கிய வட ஈழத்திலேயே
இச்சுட்டு வழக்கிலுள்ளது. யாழ்ப்பாணத்தவர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ
அங்கெல்லாம் உது பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய குறுந்தொகைச் செய்யுள் தொடரியங்கள்
எவ்வாறு யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்றன என்பதைப் பின்வரும்
எடுத்துக்காட்டுகள் புலப்படுத்துகின்றன:
-
“உள்ள ஆக்கள் எல்லாம் கள்ளரைப்போல இருக்கு”
-
“(எங்கட வீட்டில) தங்கினீர் என்றால் தவறே?”
-
“மெல்ல மெல்ல இல்லாமல் போகும்”
-
“(தன்ர) சாப்பாட்டுக்கு மறந்திட்டாரோ?”
-
“இது நோய்க்கு மருந்து ஆகாது”
-
“நாங்கள் கெட்ட இடத்தில (நேரத்தில) செய்த உதவியை
மறக்கக்கூடாது.”
-
“சொல்லவும் முடியாமல் போயிட்டான்”
2. சொற்களும் சொற்றொடர்களும்
“வேற ஆரும் இல்ல அவன்தான் இதைச் செய்தவன்” என்னும்
இயல்பான யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே அமைகின்ற தொடரிலே இடம்பெறும் “ஆரும் இல்ல”
என்னும் தொடர் குறுந்தொகை 25 ஆம் செய்யுளில் இடம்பெறும் “யாரும் இல்லை” என்னும்
தொடருடன் ஒத்துள்ளது. பின்வரும் அட்டவணையில் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே
அமைகின்ற தொடர்களும் அவை இடம்பெறும் குறுந்தொகைச் செய்யுளடிகளும் தரப்பட்டுள்ளன:
| யாழ்ப்பாணப்
பேச்சுத் தமிழ் |
குறுந்தொகைச்
செய்யுளடிகள் |
| 1. இந்தச்
சாப்பாடு எனக்கும் ஆகாது.
|
1. எனக்கும் ஆகாது. (27:3)
|
| 2. ஒரே அலமலக்காய் இருக்கு.
|
2 அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே (43:6)
|
| 3. மரம் பாறிப்போய்விட்டது
|
3. காலொடு பாறி (51:2)
|
| 4. அழுகல் தண்ணி
|
4. அழுகற் சில் நீர் (56:2)
|
| 5. இன்னாள் இது செய்தவள்
|
5. இன்னள் செய்தது இது (173: 5)
|
| 6. வேற ஊர் ஆக்கள்
|
6. வேறு ஊர் வேந்து (242:4-5)
|
| 7. கரும்புப் பாத்தி
|
7. கரும்பு நடு பாத்தி (262:7)
|
| 8. எங்களப்பற்றி உசாவிக்கொண்டு போகினம். |
8. உசாவுநர்ப் பெறினே. (269:2)
|
| 9. பனங் கருக்கு
|
9. கருக்கு (281:1)
|
| 10. சோத்துக்கு சம்பல் பிசைந்தாள். |
10. குழை பிசைந்தனையேம். (289:3)
|
| 11. மம்மர் (இருள்கின்ற) நேரம்
|
11. வானமும் மம்மர்த்து ஆகி. (310:2-3)
|
| 12. பூ எல்லாம் உதிர்ந்து போச்சு
|
12. மலர் உதிர்த்து (312:5)
|
| 13. குமரி வாழை
|
13. குமரி வாகை (347:2)
|
| 14. நீ அதுக்கு உடம்படுவியோ? |
14. நீ உடம்படுதலின் (383:1) |
|
|
சங்கப்பாடல்களில் பயன்பட்ட பல சொற்கள் எவ்வித மாற்றமும்
இன்றி யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே இடம்பெறுகின்றன. அவற்றுள் சில
வகைமாதிரிக்காகப் பின்வரும் அட்டவணையில் நிரைப்படுத்தப்பட்டுள்ளன:
| யாழ்ப்பாணப்
பேச்சுத் தமிழ் |
குறுந்தொகைச்
செய்யுளடிகள் |
| கோலி (பனை ஓலையால் பிளா கோலுதல்)
|
உட்கைச் சிறுகுடை கோலி (60:3)
|
| பெண்டிலை |
ஊரன் பெண்டினை ஆயின் (91: 3)
|
| தப்பல் (இளையது)
|
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற (121 :1)
|
| மாடு குழறிக்கொண்டு கிடக்கு
|
குன்றக் கூகை குழறினும் (153 :1)
|
| நுங்கு |
நுங்கு (293:3)
|
| பூ கொய்துகொண்டு வா
|
கொய்யும் (311 :6)
|
| தங்கையார் |
தங்கை (335 :6) |
3. விளக்கம்
இதுவரை நாம் நோக்கிய சான்றுகளைப் போன்று இன்னும் பல
சான்றுகளை ஏனைய சங்கத் தொகை நூல்களை ஆராயுமிடத்து முன்வைக்க முடியும். இவற்றினை
அடிப்படையாகக் கொண்டு சங்க காலத்திலே பேசப்பட்ட தமிழ் மொழியே வட இலங்கையிலும்
பேசப்படுகிறது எனக் கூறமுடியுமா என்பது ஆராயற்பாலது. இலங்கைப் பல்கலைக் கழகத்
தமிழ்த்துறைப் பேராசிரியரும் தலைவருமாயிருந்த பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை
(1958:219-20) இது தொடர்பாகப் பின்வரும் கருத்தினை முன்வைத்துள்ளார்:
|
“கிறிஸ்துவ ஊழிக்குச் சற்று முன்னர்
இலங்கையின் பழங்குடி மக்களாகிய நாகர்களுடன் இணைந்து தமிழ்க்குடிகள் வாழ்ந்தன.
இக்காலகட்டத்தில் மதுரையில் அமைந்திருந்த தமிழ்ச் சங்கத்தில் இந்நாட்டுப்
புலவர்களும் மதிப்புப் பெற்றனர். சங்கத்தமிழ்ப் பாடல்தொகுதியில் ஈழத்துப்
பூதந்தேவனாருடைய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. தொடக்க காலத்தில் இலங்கை ஈழம் என்றே
அழைக்கப்பட்டது ... அச்சங்க காலத்தில் பேசப் பட்ட மொழி வழக்கின் தொடர்ச்சியே
இன்றும் வட இலங்கையில் பயின்றுவரும் பேச்சு வழக்கு என்று கூறுவது முற்றிலும்
பிழையாகாது.”
|
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் கூற்று ஒரு வகையில்
பொருத்தமானது என்பதற்குக் குறுந்தொகையிலிருந்து காட்டப்பட்ட சான்றுகளும்
அவற்றுக்கு நிகராக நாம் இன்று வழங்கும் யாழ்ப்பாணத் தமிழ் எடுத்துக்காட்டுகளும்
சான்றுகளாகின்றன. இத்தகைய சங்ககால மொழி வழக்கு ஏன் வட இலங்கையில் மட்டும்
தொடர்ந்து வழக்கிலுள்ளது; மட்டக்களப்பில் அது ஏன் முழுமையாக இடம்பெறவில்லை என்னும்
வினா தொக்கிநிற்கின்றது. மட்டக்களப்புத் தமிழ் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை விட சில
தனித்துவமான பண்புகளையுடையது (கமில் சுவெலெபில் 1966, சுசீந்திரராஜா 1973,
சண்முகதாஸ் 1971, 1983) என்று நாம் அறிவோம். தொடக்க காலத்தில் அதுவும் சங்கத்தமிழ்
வழக்குடையதாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் பிற்காலத்தில் பிற செல்வாக்குகளினால்
மாற்றமடைந்திருக்கவேண்டும் என்று கருத இடமுண்டு.
உசாத்துணை
-
சண்முகம்பிள்ளை, மு. (1967) இக்காலத் தமிழ்,
தமிழ்நாடு சியோன் பிரிண்டர்ஸ், மதுரை.
-
Kanapthi Pillai, K., (1958) “The Jaffna Dialect:A
Phonological Study”. Indian Linguistics 10, Turn Jubilee
Volume, 1958: 219-27.
-
Kuiper, F.B.J., (1962) “Note on Old Tamil and Jaffna
Tamil”, Indo-Iranian Journal 5:1, pp.52-64.
-
Sanmugadas, A. (1979) “Some Aspects of the Tamil
Spoken in Sri Lanka”, Proceedings of the 4th International Coferen- ce /
Seminar of Tamil Studies,
-
(Ed. Vithiyananthan, S.), Thirumakal Press,
Chunnakam, Jaffna (1983) “Separation of Sri Lanka Tamil from the
Continental Tamil”, Tamil Civilization, Vol.1 No.2, Tamil
University, Tanjavur, pp. 75- 82.
-
Subramanya Sastri, P.S.(1934) A History of
Grammatical Theories in Tamil, Madras.
-
Suseendirarajah, S., (1973) “A Study of Pronouns in
Batticaloa Tamil”, Anthropological Linguistics 15.
-
Zvelebil, K. (1966) “Some Features of Ceylon Tamil”,
Indo- Iranian Journal 9:2, pp. 113-38.