தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புரட்சியில் பகுத்தறிவு
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
ராஜன், ப.கு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
Telephone : 914424332424
விலை : 545.00
புத்தகப் பிரிவு : பகுத்தறிவு
பக்கங்கள் : 872
ISBN : 9789381908150
கட்டுமானம் : கெட்டி அட்டை
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளர் தோழர்.நாகராஜன் இந்தப் புத்தகத்திற்கு ஒரு அணிந்துரை எழுதுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். எனக்கு என்ன தகுதியிருக்கிறதென்று என்னை அணிந்துரை எழுதுவதற்கு பதிப்பாளர் கேட்டுக்கொண்டார் என்பது எனக்குப் புரியவில்லை. ஒன்று புத்தக ஆசிரியரின் அறிவு மட்டத்திற்கு  இணையாகவேனும் நான் இருக்க வேண்டும் அல்லது அதிகளவு வெகுஜனப் பணிகள் செய்து அதன் அனுபவத்தின் ஊடாக இந்த புத்தகத்தை பார்க்கும் தகுதி இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இல்லாத இடத்தில் தகுதியான யாருமே கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுகிறேன்.  நான் எனது வாய்ப்பை முன்னுரையாக எழுதுவதற்கு பயண்படுத்தியுள்ளேன். இந்த புத்தகத்தை முதலில் வாசித்தவன் என்ற முறையில் பிரபல்யப்படுத்தி கொண்டாட வேண்டிய ஒரு புத்தகம் எந்த சந்தடியுமில்லாமல் வருவது சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.

மார்க்சிய புத்தகங்களின் வட்டாரத்தில் இது போன்ற ஒரு புத்தகம் பல ஆண்டுகளாக முழு அளவில் நிறைவேறாது இருந்த பெரும் பணி. அந்தப் பணியை தோழர் ராஜன் செய்திருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. இன்னும் 25 வருடங்களில் அது முழுமைத் தன்மையை இழந்து மீண்டும் முழுமை பெறுவதற்காக முயற்சிகளைக் கோரும் நிலை வரலாம். அப்படி ஒரு தேவை இருக்கிறது என்பதை இப்புத்தகம் உணர்த்தினால் அதுவே இப்புத்தகத்தின் வெற்றியாக என்னால் கருத முடியும்.
 
இதுபோன்ற முயற்சிகளை யாருமே செய்யவில்லையா என்றால் இல்லை என்று முழுமையாக கூறமுடியாது. ஆங்காங்கே சிற்சில தொகுதிகளில் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. ஒரு முழுமையான பணியாக இதுவரை செய்யப்படவில்லை. தத்துவம் மற்றும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிப் போக்கையும் அந்த வளர்ச்சிப் போக்கானது இயக்கவியல் விதிகளுக்கு உட்பட்டு எப்படி இருக்கிறது என்பதையும் நடப்புகால விஞ்ஞான வளர்ச்சி கொண்டு விளக்குவதன் தேவை அதிகரித்திருக்கிறது. இதை உரியவகையில் செய்ய வேண்டுமென்றால் தத்துவம், விஞ்ஞானம் மற்றும் இயக்கவியல் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும்.
 
அப்படிப்பட்ட புரிதலுக்குள் வருவதற்கு கடந்த 15 ஆண்டுகாலம் தோழர் ராஜன் போராடியிருப்பது எனக்குத் தெரியும். ஒரு பத்தாண்டுகாலம் கம்யூனிஸ்ட்டாக செயல்பட்ட ஒருவருக்கு தத்துவம் மற்றும் இயக்கவியல் பற்றிய சரியான புரிதல் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் விஞ்ஞானத்தின் மிக முக்கியமான பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கை உள்வாங்குவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஏனென்றால் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி போக்கென்பது மிகவும்சிக்கலானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது.
 
தோழர் ராஜன் ஒரு மின்சாரப் பொறியாளர். அவருடைய கல்வியும் அவர் செய்து கொண்டிருக்கும் வேலையும் அடிப்படை விஞ்ஞானத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அவர் அடிப்படை விஞ்ஞானத்தின் ஒவ்வொரு பிரிவையும் இளநிலை பட்டப்படிப்பில் தெரிந்து கொள்ளும் முயற்சியிலிருந்து துவங்கி ஒவ்வொரு பிரிவிலும் தற்போது ஏற்பட்டுவரும் வளர்ச்சிப் போக்கை தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்த நிலையை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் அதை சரியாகவே தோழர் ராஜன் செய்திருக்கிறார்.
 
இப்புத்தகம் 25 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. முதல் அத்தியாயம் ஒரு சிறிய பகுதிதான் . ஏன் இந்த புத்தகத்தை எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை விவரிக்கிறது. இரண்டாவது அத்தியாயம் அனைத்துவகையான அறிவுவளர்ச்சியின் மூலப் பிரிவான இயற்பியலின் வளர்ச்சியை பண்டை காலம் முதல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை கோடிட்டு காட்டுகிறது. அதற்கு அடுத்து வரும் ஐந்து அத்தியாயங்கள் பண்டைகாலம் முதல் தற்போது வரை ஏற்பட்ட தத்துவ வளர்ச்சிப் போக்கை விவரிக்கிறன. அவை கிரேக்க தத்துவத்தில் துவங்கி தற்கால மார்க்சியம் வரை விரிவடைகின்றன. அடுத்த ஐந்து இயற்பியலில் ஏற்பட்ட மாற்றங்களை அலசுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய சார்பியல் தத்துவத்திலிருந்து தற்போது ஆய்வு செய்யப்படும் இழைக் கோட்பாடு வரை அவற்றின் நோக்கு செல்கிறது. அடுத்த இரண்டு அத்தியாயங்கள் இயற்பிலின் விஷேசப் பிரிவுகளுகளான அண்டவியல் மற்றும் நிலவியலுக்குள் சென்று விவாதிக்கிறன. இப்புத்தகத்தை தொடர்ச்சியாக வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் இயற்பியல் மாற்றங்களை உள்வாங்கி, அதன் அடிப்படைகள் உயிரியல் மாற்றங்களாக வளர்வதை விவரிக்கும் பகுதிகளுக்குள் செல்லலாம். அடுத்த எட்டு அத்தியாயங்கள் உயிரிலையும் அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறன. இறுதியாக அறிவியலின் தத்துவத்தைப் பற்றியும் தற்கால ஆன்மீகம் பற்றியும் விவாதித்து புத்தகம் நிறைவடைகிறது.
 
இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் ஒரு தாவிப் பாய்ந்து வளர்ந்தது என்றால் மிகையாகாது. அப்படி ஒரு தாவிப்பாயும் முன்னேற்றத்திற்கான தேவை ஏன் ஏற்பட்டது, அப்படிப்பட்ட முன்னேற்றத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை வளர்ச்சி என்ன என்ற கேள்வி எழுகிறது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்க்கமிட்டீஸ் காலத்தில் துவங்கி சில அடிப்படை கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டது. தாலமி காலத்தில் சற்று மந்த நிலையில் வளர்ச்சியடைந்தாலும் வளர்ச்சியின் இழை அறுந்து போகாமல் காப்பாற்றப்பட்டது. அதன்பிறகு அரபு நாட்டு அறிஞர்களான அல்-க்வாரிஸ்மி, அல்- ஜாபர் போன்றோர்கள் போட்ட அடித்தளமான கணிதவியல் பெரிய அளவில் பயன்படுத்தப்படாமலும் வளர்த்தெடுக்கப்படாமலும் இருந்தது. இது 17ம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப் பட்டு ஐசக் நியூட்டன் போன்றவர்களால் துரித வளர்ச்சி கண்டது. ஐசக் நியூட்டனுக்கு முன்பே கோபர்னிக்கஸ், கெப்ளர், கலிலியோ ஆகியோர்கள் தங்கள் ஆய்வுகளை வானவியலில் செய்திருந்தாலும் அடிப்படை விஞ்ஞான விதிகளை வரையறுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். 17ம் நூற்றாண்டில் துவங்கிய வேகப்பயணம் ராபர்ட் பாயில், தாமஸ் யங், வோல்ட்டா, மைக்கேல் பாரடே வழியாக பயணித்து மேக்ஸ்வெல்லின் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாடுகளில்மூலம் முடுக்கம் பெற்று இருபதாம் நூற்றாண்டின் தாவிப்பாய்ச்சலுக்கு தயாராகிய கதையை எளியமுறையில் இரண்டாம் அத்தியாயத்தில் கையாள்கிறார்.
 
அறிவியல் போன்றே தத்துவமும் ஒரு வளர்ச்சிப்பாதையில் பயணித்திருக்கிறது. அதை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கின்றன. தத்துவத்தின் வளர்ச்சியின் துவக்கத்தை கிரேக்க நாட்டில் பார்க்கலாம். ஏன் தத்துவத்தின் வளர்ச்சியும் அறிவியலின் வளர்ச்சியும் ஐரோப்பாவில் மையங்கொண்டிருந்தது என்பதற்கான கேள்விக்கான விடையை மானுடம் விவசாயத்தை துவங்கிய இடமானது வளமுக்கோணம் என்று அழைக்கப்படும் தற்போதைய வட ஈராக்,பாலஸ்தீனப் பகுதியிலிருந்து பரவிய விவசாயம் பூமியின் கிடைமட்டத்தில் மெல்ல பரவி பிறகு செங்குத்தாக பரவ ஆரம்பித்தால் முதலில் விவசாய உற்பத்தியும், உபரியும் உணவுக்கான உடல் உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர் முதலில் ஐரோப்பாவில் தோன்றியது வியப்பில்லை. கிரேக்க தத்துவ ஞானத்தின் முதன்மையானவர் என்று கருதப்படும் சாக்ரட்டீஸ் தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த தத்துவ ஞானிகளைப் பற்றியும், அதைப் பின்பற்றி சாக்ரட்டீஸ்-பிளாட்டோ-அரிஸ்ட்டாட்டில்ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் அவர்களின் தத்துவ சாரம் பற்றியும் அதன் இறுதி கட்டமான நவபிளாட்டினம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க தத்துவ ஞான வளர்ச்சியில் கருத்து முதல்வாதக் கூறுகள் இருந்தாலும் முற்றிலுமாக இல்லாத விஷயம் ஆண்டவன் உலகைப் படைத்தான் என்பது. இது மாற்றப்பட்டது மத்திய காலத்தில் வாழ்ந்த அகஸ்டின் என்ற கிறிஸ்துவ தத்துவ ஆசிரியர் மூலமாக. இதே விஷயம்தான் திரும்பத் திரும்ப பேசப்பட்டு தத்துவ வளர்ச்சியின் ஒரு இருண்டகாலத்திற்குள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் ஐரோப்பா இருந்தது. நடுவில் ஸ்காலஸ்டியம் போன்ற கோட்பாடுகள் வந்தன ஆனால் அது அகஸ்டினிடமிருந்து பெரிதும் மாறுபட்டது கிடையாது.
 
மத்தியகாலம் முடிந்து மறுமலர்ச்சிகாலம் துவங்கிய பிறகு தத்துவ வளர்ச்சியில் ஏற்றம் பெற்ற காலமாகும். தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தை தத்துவ வளர்ச்சியில் மறுமலர்ச்சி காலமாக குறிப்பிடுகிறார்கள். மறுமலர்ச்சியின் முதல் கட்டத்தில் தோன்றிய தத்துவங்கள் கரணியவாதமும் (ஸிணீtவீஷீஸீணீறீவீsனீ) அனுபவவாதமும் (ணினீஜீலீவீக்ஷீவீநீவீsனீ) ஆகும். இதன் மூல கர்த்தா டெஸ்கார்ட்டஸ் ஆவர். அவருக்குப் பின் ஸ்பின்னோசா அவருக்குப் பின் லிப்னிஸ் ஆகியோர் கரணிய வாதத்திதை வளர்தெடுத்தனர். எனினும் கரணியவாதம் என்றால் டெஸ்கார்ட்ஸ் பெயர்தான் முன்னுக்கு வருகிறது. ஜியோமிதியில் பயன்படுத்தப்படும் கார்ட்டீஸன் அச்சுகள் என்பதும் சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறிக்கும் கார்ட்டீஸன் பிளவு என்று தற்போது பயன்படுத்தப்படும் சொற்களுக்கு உரிமையாளர் டெஸ்கார்ட்டஸ்தான்.
 
தத்துவத்தையும் இறையியலையும் பிரித்த வேலையை கார்ட்டஸ் செய்தார். இதுவே கார்டீஸன் பிளவு என்றழைக்கப்படுகிறது. மத்திய காலத்தில் கரணியவாத்திற்கு இணையாக வளர்ந்து வந்த இன்னொரு தத்துவப்பள்ளி என்பது அனுபவவாதமாகும். இப்பள்ளியிம் மும்மூர்த்திகள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் லாக், ஜான் பெர்க்லி, டேவிட் ஹியூம் அகியோரே. இவர்களுக்கு முன் வாழ்ந்த பிரான்ஸிஸ் பேகண், தாமஸ் ஹாப்ஸ் ஆகியோரின் அடிச்சுவட்டை பின்றிய மும்மூர்த்திகள். இதன் தொடர்ச்சியாக 20ம் நூற்றாண்டில் எர்னஸ்ட் மாக், பியர் துஹேம் மோர்ட்டிஸ் ஸ்லிக், ஹான்ஸ் ரிய்செய்ன்பாக், ருடால்ஃப் கர்ணாப் ஆகியோர் இப்பள்ளியை வளர்த்தெடுக்கின்றனர்.  மறுமலர்ச்சிகால முடிவில் தோன்றிய அறிவொளிக்காலத்தில் வால்டர், ரூசோ ஆகிய தத்துவ ஞானிகள் தோன்றினார்கள். அறிவொளிக் காலம் என்பது தொழிற்புரட்சி முதலாளித்துவமாக மாறிக்கொண்டிருந்த காலமாகும். வால்டரும் ரூசோவும் இரட்டையர்கள் போல் பேசப்பட்டாலும் இருவம் இருவேறு தளத்தில் இயங்கினர் இவர்களை யட்டி பணியாற்றியவர்களும் உண்டு. அறிவொளிக் காலம் முடிந்து நவீன காலம் துவங்கியது.
 
நவீனகாலத்தின் முதன்மை தத்துவ கர்த்தாவாக இம்மானுவல் காண்ட் விளங்குகிறார். தூய கரணியத்தின் மீதான விமர்சனம் என்ற நூலின் மூலம் அவருடைய தத்துவப் பணிகள் துவங்குகிறது. காண்டின் தத்துவப் பணிகளில் மையப்புள்ளியாக கூற வேண்டியது இயற்கையில் நிகழ்வுகள் சில விதிகளுக் உட்பட்டு நிகழ்கின்றன என்பதுதான். மானுடம் தன்னுடைய அறிவை பயன்படுத்தி எதனை அறியமுடியும் என்ற வகையிலும் அவர் சில விஷயங்களை அனுமானித்திருக்கிறார். இவருடைய தத்துவத்தின் தாக்கம் என்பது அவர் வாழ்ந்த நாட்டையும் காலத்தையும் கடந்து இருந்தது. தத்துவ வளர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கான தேவையையும் இவர் விட்டுச் சென்றார். காண்டின் தத்துவத்தால் கவரப்பட்டவர் ஜெர்மனியில் வாழ்ந்த ஹெகல் என்ற தத்துவ ஞானி. இயற்கை நிகழ்வுகள் விதிகளுக்குட்பட்டவை என்ற காண்டின் தத்துவத்தை முன்வைத்து அந்த விதிகள் என்ன என்று அடையாளம் காணப் புறப்பட்டவர். கோட்பாடு, எதிர்கோட்பாடு, தொகுப்பாக்கம் என்ற ஆய்வு முறையை காண்டிலிருந்து பெற்று செழுமை செய்தவர். காண்ட்டும், ஹெகலும் கருத்துமுதல்வாதப் பாதையில் பயணித்தவர்கள்தான் எனினும், அவர்கள் அடித்தளமிட்ட இயக்கவியல் என்பது நவீன முரணியக்க பொருள்முதல்வாதத்தின் உருவாக்கத்திற்கு முக்கிய தேவையாய் இருந்தது. 
 
ஹெகலின் சீடராக பணியைத் துவங்கிய ஃபாயர்பாக் ஹெகலின் விமர்சகராக மாறி பொருள்முதல்வாதிகயாக தன்ன அடையாளப்படுத்திக் கொண்டவர். இளம் ஹெகலியனாக களத்தில் நுழைந்த கார்ல் மார்க்ஸ் ஃபாயர்பாக் கருத்துக்களை உள்வாங்கி முரணியக்க பொருள்முதல்வாதத்தை தோற்றுவித்தார். ஹெகலுக்குப்பின் தத்துவார்த்த தளத்தில் நடைபெற்றவை பெருமளவுக்கு எல்லோராலும் அறியப்பட்டவையே. அத்துணை விஷயங்களையும் ஐந்து அத்தியாயத்தில் அடைப்பது என்பது எளிதான காரியமல்ல. அத்துணைத் தத்துவப் பள்ளிகளையும் அதன் போக்குகளையும் முன்வைத்து அதனை விமர்சன பூர்வமாக அணுகி வாசிப்பு நடையில் தொய்வு இல்லாமல் கொடுப்பதில் ஆசிரியரின் பணி வியக்கத்தக்கது.
 
புகழ்பெற்ற சார்பியல் தத்துவம் மூலமாக அறியப்பட்ட இயற்பியல் மேதை ஐன்ஸ்டீன் 1905ம் ஆண்டு வெளியிட்ட மூன்று அறிவியல் கட்டுரைகள் மூலம் இருபதாம் நூற்றாண்டு இயற்பியல் தனது அதிவேக பயணத்தை துவங்கியது. கலிலியோவின் சார்பியல் கோட்பாடுகள் ஒளியின் விஷயத்தில் தோல்வியடைந்ததையும், ஒளி கண்ணுக்குப் புலப்படாத ஈதர் என்ற ஊடகம் மூலமாக பரவுகிறது என்ற கருத்தினடிப்படையில் ஈதரின் தன்மைய ஆராயப் புகுந்த மைக்கேல்சன்-மார்லே ஆய்வானது ஈதர் என்பது கிடையாது என்று முடிவாகிப் போன சூழலில் உண்டான நெருக்கடியைப் போக்கும் விதமாக ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு அமைந்தது. ஒளியின் வேகம் மாறாதது; காலம் என்பது சார்பற்றது அல்ல அது நிர்ணயிக்கும் தளத்தைப் பொருத்து; பொருளின் நிறையும் அளவும் வேகத்திற்கு தகுந்தாற்போல் மாறக் கூடியது ஆகியவையே இதன் அடிப்படை. இதனையட்டி பொருளும் ஆற்றலும் வெவ்வேறு வடிவங்களே என்பதும் பொருளுக்கும் ஆற்றலுக்கும் உள்ள உறவை பற்றியும் விளக்கினார். 200 ஆண்டுகள் செல்வாக்குடன் விளங்கிய நியூட்டனின் புயியீர்ப்புக் கோட்பாடானது மேக்ஸ்வெல் கண்டுபிடித்த மின்காந்த கோட்பாடுகளினடிப்படையில் உரசிப்பார்த்த பொழுது ஆட்டம் கண்டிருந்தது.
 
இதற்கான தீர்வாக ஐன்ஸ்டின் பொதுச் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். ஐன்ஸ்டீனின் பணிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக இருந்தது. எனினும் இயற்கையின் பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இரட்டைத்தன்வீயை கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவான முன்வைக்கப்பட்ட வாதங்களுக்கு நிராகரித்து ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
 
இயற்கையின் பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இரட்டைத் தன்மை பற்றிய பிரச்சனையில் சிலஅடிப்படை இயல்பியல் விதிகள் செயல்படுவதில்லை. இதையட்டி எழுந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாக குவாண்டம் இயங்கியல் இருந்தது. குவாண்டம் இயங்கியலின் மூலகர்த்தாவாக மாக்ஸ் பிளாக் மற்றும் ஐன்ஸ்டீன் இருந்தாலும் அது அவர்களையும் தாண்டி அது வளர்ந்தது. நீல்ஸ் போர், ஜோசப் டிபிராக்ளி, ஷ்ரோடிஞ்சர், ஹைசன்பெர்க், மாக்ஸ் போர்ன், பாஸ்குல் ஜோர்டான், பால் டிராக், பவுலி, டேவிட் போம், டைஜட்ட்டர ஜே, டியூரெக் ஆகிய விஞ்ஞானிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நியூட்டனின் இயங்கியல் என்பது பொருட்கள் நகரும் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது செயல்பட மறுப்பதைப் போல, ஐன்ஸ்டீனின் இயங்கியல் பொருளின் அளவு குறையும் பொழுது செயல்பட மறுக்கிறது. மிகச் சிறிய அளவுகள் மற்றும் தூரங்கள் விஷயத்தில் நடைபெறும் ஊடாடல் என்பதை யட்டி பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு ஹைசன் பெர்க்கின் நிச்சயமற்ற கோட்பாட்டை முன்வைத்து கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவான வாதங்கள் முன்வந்தன. இதில் ஹைசன்பெர்க்கே இதை முன் வைத்தார். ஆனால் இந்தக் கோட்பாட்டையும் குவாண்டம்டட் இயங்கியலையும் முரணியக்க பொருள்முதவா அடிப்படையில் சிறப்பாக விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
 
ஜே.ஜே தாம்ஸன் என்ற விஞ்ஞானி 1897ம் ஆண்டு மின்னணுவை கண்டுபிடித்தவுடன் நவீன இயற்பியலின் மற்றொரு பிரிவான துகள் இயற்பியலின் பயணம் துவங்கியது. மேலும் பகுக்க முடியாத பொருள்தான் அணு என்ற டால்டனின் அணுக் கோட்பாடு உடைக்கப்பட்டு அணுக்களுக்குள் துகள்கள் இருக்கின்றன என்றும் அவற்றில் துகள்கள் என்பனவே அணுவை கட்டமைக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. துகள்களையும் பகுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று அவற்றின் உள்ளே வேறு சிறுதுகள் உள்ளனவா என்று ஆராயப்பட்டதில் இறுதியில் மூன்று அடிப்படைத் துகள்களில் அது முடிந்தது.
 
மின்னணு மற்றும் யு குவார்க் மற்றும் டி குவார்க் ஆகியவையே. துகட்களின் இயங்கியலை ஆராயப் புகுந்தால் அது குவாண்டம் இயங்கியலின் விதிகளுக்குட்பட்டுதான் இயங்கமுடியும். துகள்களுக்கு இடையிலான விசையை குவாண்டம் இயங்கியல் கொண்டுதான் விளக்க முடியும். துகள்களின் தன்மையில் அவற்றின் மின்னேற்றம் மாறுபட்டால் அவை எதிர்த்துகள் என்று அழைக்கப்படுகிறது. எதிர்த்துகள்களால் கட்டமைக்கப்பட்ட பொருட்கள் எதிர்பருப்பொருளாகிறது. துகள்களுக்கிடையிலான விசையையும் சேர்த்து உலகில் இயங்கும் விசைகள் நான்குவகைகாக பிரிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு விசையும் ஒவ்வொரு அளவு மட்டத்தில் செயல்பட் அளவு நிலை மாற்றம் பண்புநிலை மாற்றதில் முடியும் என்ற இயக்கவியல் விதியை உறுதி செய்கின்றன. எப்படி அடிப்படைத் துகள்கள் இணைந்து அணுத்துகள்கள் உருவாகின்றன என்ற கேள்விக்கு விடையளிப்பதற்கு ஒரு நீண்டபயணத்தை துகள் இயல்பியல் நடத்தியுள்ளது. அது சமச்சீர்மை, சமச்சீர் உடைவு போன்ற விஷயங்களில் ஆரம்பித்து திட்டமாதிரியில் வந்து முடிந்தது. இவை அனைத்தையும் சரியான முறையில் தெளிவுபட துகள் இயற்பியல் என்ற அத்தியாயத்தில் எழுதியுள்ளார்.
 
திட்டமாதிரியையும் தாண்டி துகள் இயற்பியலானது கனமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. துகள் இயற்பியலின் நீண்ட நெடிய ஆராய்ச்சியில் மேலும் சில வினாக்கள் உதித்தன. இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத அறிவியல் விதிகள் உள்ளனவா? கால-வெளி துகிலுக்கு நான்குக்கு மேற்பட்ட பரிமாணங்கள் உள்ளனவா? ஏல்லா விசைகளும் ஒன்றாகுமா? கரும் பொருள் என்பது என்ன? அது எதனால் ஆனது? நியூட்ரினோக்கள் குறித்த விளக்கம் என்ன? எதிர்த்துகள் என்னவாயின போன்று ஏராளமான வினாக்கள் முன் வந்துள்ளன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நியூட்டனின் இயங்கியல்,  ஐன்ஸ்டினின் இயங்கியல், குவாண்டம் இயங்கியல் போதுமான விடையளிக்க முன்வராத நிலையில் இவற்றிற்கு விடைகாணும் முயற்சியாக இழைக் கோட்பாடு முன்வந்துள்ளது. இழைக் கோட்பாட்டின் தோற்றம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் அதன் பங்களிப்பார்கள் பற்றியும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் விபரமாக கையாள்வதே இழைக் கோட்பாடு என்ற அத்தியாயமாகும்.
 
ஒரு திசையில் துகள்வரை சென்ற இயற்பியிலின் பயணமானது இன்னொரு திசையில் அண்டவியலைப் பற்றிய ஆய்வில் இறங்கியது. இந்த அண்டம் தோன்றிய விதம் பற்றி இரு வேறு கோட்பாடுகள் முன்னுக்கு வந்துள்ளன. ஒன்று நிலை அகிலக் கோட்பாடு மற்றொன்று பெருவெடிப்பு கோட்பாடு. விரிவடைந்து வரும் அகிலத்தை முன்வைத்து உருவானதுதான் பெருவெடிப்பு கோட்பாடு. பெருவெடிப்பு என்பது ஒருமத்திலிருந்து ஏற்பட்டது. ஒருமத்தை விளக்குவது அவ்வளவு எளிதல்ல. இந்த அண்டம் முழுவதும் ஒரு காலத்தில் ஒரு புள்ளியில் குவிந்திருக்கும் பொழுது, காலம் வெளி எதுவுமற்ற நிலையிலிருந்திருக்கிறது. பெருவெடிப்பு கோட்பாடானது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் பெருவெடிப்பு கோட்பாட்டால் விளக்க முடியாத சில பகுதிகள் இருக்கின்றன. அகிலத்தின் வளைவு எப்படியிருக்கிறது. எப்படி இருந்திருந்தால் இன்றுள்ள நிலைமையை அடைய முடியும், ஆதி துகள்கள் எப்படி உருவாயின போன்ற கேள்விகளுக்கு திருப்தியான விளக்கத்தை பெருவெடிப்பு கோட்பாடு வழங்கமுடியவில்லை. பெருவெடிப்பு கோட்பாட்டில் சிறிய மாற்றம் செய்து அகில வீச்சு என்ற கோட்பாட்டால் ஆலன் கத் மற்றும் ஸ்த்ரோபின்ஸ்கி ஆகியோரால் விளக்கப்பட்டது. அகில வீச்சு கோட்பாடானது பெரும்பாலான இயற்பியல் நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் இதில் இருந்த சில குறைபாடுகளை நீக்கி சுய மறுபெருக்க அகில வீச்சுக் கோட்பாடு என்ற பெயரில் ஆண்ரே லிண்டே வெளியிட்டார். 
 
கருங்குழிகளைப் பற்றிய கோட்பாடுகளும் அதையட்டி ஸ்டீபன் ஹாக்கின்ஸின் பங்களிப்பு பற்றியும், விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி பற்றியும் அவைகளின் வாழ்வு சுழற்சி பற்றியும் விளக்கமாக அண்டவியல் என்ற அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார்.
 
இயற்கையின் விதிகளின் ஊடாக நிகழ்ந்த நிகழ்வாக உருவாகிய இந்த பூமிப்பந்தின் தோற்றம் பற்றியும் அதன்இயல்பியல் பண்புகள் குறித்தும் நிலவியல் என்ற அத்தியாயம் கூறுகிறது. சூரியன் தோன்றி சுமார் 100 கோடி ஆண்டுகளில் வேறு ஒரு நட்சத்திரம் தனது வாழ்வை முடித்துக் கொண்டு சூப்பர் நோவாவின் மூலம் வெடித்து சிதறிய பொருட்கள் சூரியனின் ஈர்ப்பு புலத்திற்குள் அகப்பட்டு சுற்றிக் கொண்டிருப்பவையே சூரிய குடும்ப கிரகங்களும் அதன் துணைக் கோள்களும். முதன்மை கிரகங்கள் மேல் வேறொரு பெரிய வீசியெறிப்பட்ட பொருள் மோதியதில் உண்டான சிதைவில் உருவானயே துணைக் கோள்கள். ஆரம்ப கட்டத்தில் சூரியனின் ஈர்ப்பு புலத்தில் சுற்ற ஆரம்பித்த பூமியின் மேல் உள்ள வாயுக்கள் சூரியப் புயல் காரணமாக விரட்டியடிக்கப்பட்டு இறுதியில் அடர்த்தி மிகுந்த பொருட்களால் பூமி உருவானது. இப்படி சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் பூமி சுழல ஆரம்பித்து 50 கோடி ஆண்டுகளில் குளிர்ச்சியடைந்து அதன் மேலோட்டுப் பகுதி திடமானது. பிறகு கண்டமுன்வடிவுகள் உருவானது.
 
 கண்டமுன்வடிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக பாக்டீரியாக்கள், பாறைகளில் உயிர்ப்பொருட்கள், உயிர்ப் பொருட்களின் ஒளிச் சேர்க்கையால் ஆக்ஸிஜன் உருவாதல் ஆகியவை ஏற்பட்டு மேலும் குளிர்ச்சியடைந்து இறுகி கண்டங்கள் உருவாயிற்று கண்டங்களில் மாற்றம் ஏற்பட்டு பாறைகள் பல்வேறு வகைகள் உருவாயின. மேலோட்டிற்கும் உள்பகுதிக்கும் இடையே நடந்த ஊடடால்கள் மேலோடுகள் சில்லுகளாக பிளவுபடுவதம் அவற்றை சமதளமாக்கும் முயற்சி ஒருபுறமும் ஏற்றத்தாழ்வாக மாற்றும் முயற்சி மற்றொரு புறமும் நடந்ததன் விளைவாக மலைகளும் மலைமடிப்புகளும் உருவாயின. பிறகு நடைபெற்ற மாற்றங்களும் மேலோட்டின் வடிவமைப்பும் கண்டங்களின் பெயர்ச்சியும் விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இவையெல்லாவற்றையும் ஆராயும் முறைகளும் கணக்கிடும் முறைகளும் அவற்றின் பின்புலமாக இருக்கும் அறிவியல் விதிகளும் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரின் மூலப் பொருள் என்ன? அது எப்படி தோன்றியது. அதற்கான புறச்சூழல்கள் என்ன அப்படிப்பட்ட புறச்சூழல்கள் எற்படும் வாய்ப்புகள் என்ன என்பதை விவரிப்பதே உயிரின் தோற்றம் என்ற அத்தியாயமாகும். உயிரின் தோற்றத்திற்கு தேவையான முக்கிய வேதிப் பொருளான அமினோ அமிலங்கள் அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றிலிருந்து உருவாயின. இவற்றை சோதனைக் சாலையில் நிரூபித்தவர் ஸ்டான்லி மில்லர். உயிர் உருவாக்கத்தின் அடிப்படை பொருட்களான டிஎன்ஏ, ஆர்என்ஏ மற்றும் புரோட்டின். ஆனால் இந்த மூன்றின் உருவாக்கத்திற்கு தேவைப்படும் மூலப் பொருள் அமினோ அமிலங்கள். புரோட்டின் உருவாதற்கான திட்டம் டிஎன்ஏயில் உள்ளது. திட்டத்தை பயன்படுத்தி ஒரு வினையூக்கியின் மூலமாக அமினோ அமிலங்கள் புரோட்டின்களாக மாறவேண்டும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது. லெஸ்லி ஓர்ஜெல், ஜெரால்டு ஜாய்ஸ் போன்ற விஞ்ஞானிகள் இந்தப் போக்கை விளக்குகின்றனர். இந்த விஷயங்களின் முன்னோடியாக ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஓப்பரின் 1936ம் ஆண்டு உயிரின் மூலம் என்ற நூல் மூலமாக வெளியிட்டார். இப்படி உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் உருவாவதால் உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் உள்ள வித்தியாசங்களை ஏழு  அம்சங்களில் வரையறுக்கிறார் கிரிஸ் மெக்கே என்ற விஞ்ஞானி. அந்த ஏழு அம்சங்களையும் உயிரை வரையரை செய்யும் இதர விஞ்ஞானிகளின் கருத்துக்களையும் இதில் சேர்த்துள்ளார். 
 
ஆர்என்ஏ என்பது ஒரு தன்னுருவாக்கி குணாம்சமுடையது. இதுதான் ஒரு உயிரின் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு அடிப்படை அதன் குணாம்சங்கள் பற்றியும் ஆர்என்ஏ உலகம் என்ற கோட்பாடு அறிமுகப்படுத்துகிறது. ஆர்என்ஏ உலகக் கோட்பாட்டை சோதனைச் சாலையில் ஆய்வு மூலமாக நிறுவிய விஞ்ஞானிகளான ஜாக் ஜோஸ்டக், ஜேம்ஸ் ஃபெரிஸ் ஆகியோரின் பணிகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் ஆர்என்ஏவின் அடிப்படை கட்டமைப்பான நியுக்ளியோடைட்டுகள் எவ்வாறு உருவாயின என்ற அடிப்படை கேள்வி தொக்கி நிற்கிறது. இது சம்பந்தமாக மேலும் சில கேள்விகள் உள்ளன என்பதையும் அதற்கான விடைகள் விரைவில் கண்டுபிடிக்கப்படும என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
 
பரிணாமம் என்ற வெளிச்சத்தில் பார்த்தாலன்றி உயிரியலில் எதற்கும் அர்த்தமில்லை என்ற செய்தியுடன் துவங்கும பரிணாமம் என்ற அதிகாரம். ஒரு மில்லி மைக்ரான் அளவுள்ள ஒரு சிறிய வைரஸ் முதல் 30 மீட்டர் அளவுள்ள திமிங்கிலம் வரை உள்ள 20 லட்சம்உயிரினங்கள் எப்படி உருவானது என்பதை புரிந்து கொள்வதெப்படி? இப்படி விரவியுள்ள உயிரினங்களை பரிணாம நோக்கில் வகைப்படுத்தி பைலோஜெனிக் மரம் வரையப்பட்டுள்ளது. இந்த பைலோஜெனிக் மரதின் ஒரு சிறுபுள்ளிதான் மானுடம்.
 
பைலோஜெனிக் மரத்தின் நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. பைலோஜெனிக் மரத்தை கட்டமைத்த வழிமுறைகளும் அம்மரத்தின் கிளைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் விளக்கப்படுகிறது. நமக்கு ஆச்சரியமளிக்கும் பல விஷயங்கள் பைலோஜெனிக் மரத்திலிருந்து கிடைக்கும். பறவைகளும் வெளவாலும் நேரடி பங்காளிகள் கிடையாது. இதேபோல் சுறாவும் மீன்களும் நேரடி பங்காளிகள் கிடையாது. அருகருகில் இருக்கும் கிளைகள் ஒரேதண்டிலிருந்து பிரிந்து வந்திருந்தால் அவை ஒரே கிளேடு உயிரினம் எனலாம். பைலோஜெனிக் மரத்தில் இடம் பெறும் உயிரினங்களின் கால நிர்ணயத்தை, கதிர்வீச்சு காலக் கணிப்பு, பாறை அடுக்கு ஆய்வு, மூலக்கூற்று கடிகாரம் ஆகிய வழிமுறைகளில கணிக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். 
 
பரிணாம தத்துவத்தின் மூல கர்த்தாவான டார்வினின் ஐந்தாண்டு காலபீகிள் பயணம் உயிரினம் சம்பந்தமான அவருடைய கருத்தோட்டத்தை எவ்வாறு செதுக்கியது என்பதையும் அது எப்படி உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்திற்கான விஷயங்களாக பரிணமித்தது என்பதையும் சுவைபட விளக்கியுள்ளார். டார்வினுக்கு முன்பே உயிரியலில் இந்த திசையில் பயணித்தவர்கள் ஒருசிலரின் பங்களிப்பையும் ஆசிரியர் நமது கவனத்துக்கு கொண்டு வந்து விடுகிறார். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் ஹார்வி ரத்த ஓட்டம் மூடு சுற்று என்று கண்டுபிடித்ததையும் நிக்கோலஸ் ஸ்டேனோவின் தொல்லுயிரியல் என்ற புதிய அறிவியல் புலத்தை உருவாக்கி வளர்தெடுத்ததையும் பரிணாம கோட்பாடு உருவாக தொல்லுயிரியலின் பங்கு பற்றியும் கூறுகிறார். தனிமங்களை வகைப்படுத்திய மெண்டலீவ் போன்று உயிரினங்களை வகைப்படுத்திய கரேலஸ் லின்னயேஸ் 250 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர். ஓவ்வொரு உயரிரையும், இனம், பேரினம், குடும்பம், வரிசை, பைலா, ராஜியம் என்று ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்தியதை விளக்குகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பஃபோன் என்ற அறிஞர் அன்று நிலவி வந்த படைப்பு கோட்பாட்டை நிராகரித்து ஒருவகையான பரிணாம முன்வடிவை முன்மொழிந்திருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு அறிஞர் ஜார்ஜ் குவியர் அருகிப்போன உயிரினங்களைப் பற்றி முதன் முதலில் பேசி, அனைத்து உயிரினங்களும் என்றென்றும் மாறாமல் இறைவனால் படைக்கப்பட்டு நிலைத்திருக்கிறது என்ற கருத்தை நிராகரித்தவர். டார்வினுக்கு முன்பே பரிணாமக் கோட்பாட்டை பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லாமார்க் என்ற விஞ்ஞானி அறிந்திருந்தார். ஒரு உயிர் மற்றொரு உயிராக மாற்றம் பெறுகிறது என்பதை கண்டுபிடித்திருத்தார். மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வறுமையிலும் தனிமையிலும் உழன்று மரணமடைந்தார். வான்பேயர் என்ற உயிரியல் அறிஞர் அன்றைய தினம் வளர்ச்சியடைந்திருந்த பரிணமாக் கோட்பாடுகளை சில அர்த்தமுள்ள கேள்விகளுக்குள்ளாக்கினார். இவரது கேள்விகளுடன் உரசிப்பார்தே டார்வின் தனது கருத்தை வெளியிட்டார். வில்லியம் ஸ்மித் என்ற அறிஞர் தொல்லுயிரிகளின் அடிப்படையில் நிலவியல் வரைபடத்தை தயாரித்தவர். இந்த வரைபடங்களின் உதவியோடு உயிரினங்களின் வரலாற்றை எழுதுவது சாத்தியமானது. உயிரியலுக்கு பங்களித்த அடுத்த நிலவியலாளர் சார்லஸ் லயல். இவரது சீர்மாற்றம் என்ற கோட்பாடு டார்வினுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. 
 
பரம்பரை பண்புகளின் பின்னால் இருக்கும் இயங்கு சக்தியை கண்டறிந்த மேதை கிரிகர் மெண்ட்லின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கிறார். இறுதியாக டார்வினின் வாழ்கை வரலாற்றோடு அவரது பீகிள் பயணம் பற்றிய அரிய விவரங்களை தொகுத்தளித்து பரிணாமக் கோட்பாடு வளர்ந்த விதத்தை இந்த அத்தியாயத்தில்விளக்குகிறார். 
 
பரிணாமம் என்பவீயும் இயற்கைத் தெரிவு என்பதையும் மரபணு மொழியில் விளக்கப்படுவதை பரிணாம நிகழ்வுப் போக்கு என்ற அத்தியாயத்தில் கையாள்கிறார். ஒரு உயிரினத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான மரபணுக்கள் இருப்பதை கண்டுபிடித்து அவை எப்படி ஒரே உயிரினமாக வகைப்படுத்தப்படுகிறது என்பதை விளக்கியும் இயற்கை தெரிவையும் மரபணுவியலையும் இணைத்த தியோடிசியஸ் டோப்ஜான்ஸ்கியின் பங்களிப்பை சிலாகிப்பதோடு துவங்குகிறது இந்த அத்தியாயம்.
 
மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் பரிமாணம மாற்றமாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் பரிணாம மாற்றத்திகு அடிப்படை மரபணுக்களில் ஏற்படும் மாற்றம். மரபணுக்களில் மாற்றங்கள் அக புறக் காரணங்களால் ஏற்படுகின்றது. கருவளர்ச்சி-ஆன்டோஜெனி. கருவளர்ச்சி விதத்தை கற்பது பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது. அது வளரும் ஒவ்வொரு கட்டத்திலும் அது தற்போது பைலோஜெனிக் மரத்தில் இருக்கும் இடத்திற்கு அதன் அடித்தண்டிலிருந்த மூதாதையரின் தோற்றத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து தற்போதுள்ள நிலையை அடைகிறது. மரபணு திசைவிலகல், இடம் மாறும் மரப ணுக்கள் ஆகிய கருத்தோட்டங்கள் பற்றியும் கோடிட்டுக் காட்டுகிறார். பரிணாம மாற்றம் எனபது யதார்த்தம் இயற்கை தெரிவு என்பது அதனை விளக்கும் கோட்பாடு. இயற்கை தெரிவு கோட்பாட்டை டார்வின் மற்றும் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் அகியோர் முன் மொழிந்தனர். இறுதியாக இந்த அத்தியாயத்தில் டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் நூல் உருவான கதையை சுவாரஸியமாக விளக்குகிறார்.
 
டார்வினுக்குப் பிறகு இயற்கைத் தெரிவு கோட்பாடு எவ்வாறு வளர்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்குவதே இயற்கைதெரிவு என்ற அத்தியாயம். எர்னஸ்ட் மேயரின் இயற்கைத் தெரிவிற்கான 5 கவனிப்புகளை விளக்கி அத்தியாயம் துவங்குகிறது. உயிரினத் தொகுதிகளில் கால ஓட்டத்தில் நடக்கும் மாற்றங்களை இயற்கை தெரிவு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதையும் இயற்கைதெரிவு என்பது ஒரு விபத்தும் அல்ல அல்லது ஒழுங்குக்கு உட்பட்டு இயங்கும் விதியுமல்ல இரண்டும் கலந்தது என்பதை விளக்குகிறார். இயற்கைத் தெரிவை டார்வின் அறிவித்த பொழுது இருந்ததைவிட இன்று நிரூபிப்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. தப்பிப் பிழைப்பதற்கு வாழும் உயிரினங்கள் மாற்றமடைவது இயற்கைத் தெரிவின் அங்கமாக பார்க்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஒரு உயிரினம் பிழைத்திருப்பதற்கான போராட்டத்தில் ஏற்படும் மாற்றம் மரபணுக்களில் பிரதிபலிப்பதால் இயற்கைத் தெரிவு மரபணுக்களை தீர்மானிக்கின்றன என்ற ஒரு கருத்தும், மரபணுவே முதன்வீயானது. உயிரினம் என்பது மரபணுக்களின் காப்புப் பொறி என்பதால் இயற்கைத் தெரிவால் மரபணு பார்வையிலான பரிணாமம் என்ற ஒரு கருத்தும் மோதுவதை இந்த அத்தியத்தில் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் ஆசிரியர். குழுத் தெரிவு, உறவு வட்டத் தெரிவு ஆகிய கருத்தோட்டங்களையும் ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு உயிரினம் தெரிவு செய்யப்படுவதற்கும் அருகி ஒழிவதற்கும் அடிப்படையானது தனி உயிர்கள்தான் என்று மேயர் கூறியதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார். மரபணு நோக்கிலான இயற்கைத் தெரிவு என்ற ஆய்வானது ரொனால்டு பிஷ்ஷர், ஜே.பி. ஹால்டானே, சேவர் ரைட் ஆகியோரால் வளர்தெடுக்கப்ட்டது. மரபணுதான் இயற்கைத் தெரிவின் முதன்மையான வேட்பாளர் என்பதை வலியுறுத்தும் ஜிசி வில்லியம்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ். இதில் முக்கியமானது ரிச்சர்ட் டாக்கின்ஸின் சுயநல மரபணு என்ற நவீன டார்வினியத்தை திரித்து சமூக ஏற்றத் தாழ்வையும், முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவது எவ்வளவு தவறானது என்பதை ஆசிரியர் விளக்குகிறார். பரிணாமவியலின் முக்கிய கோட்பாடான தகவமைவு பற்றி டார்வினின் பங்களிப்பை அறிமுகப்படுத்தி அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.
 
நவீனத் தொகுப்பாக்கம் என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்துவதோடு பரிணாமவியலின் தத்துவம் என்ற அத்தியாயம் துவங்குகிறது. மரபணு ரீதியான மாறுபாடு என்பதற்கும், இயற்கை தெரிவு நிகழ்வுக்கும் உள்ள உறவு இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகின்றது.டார்வினிய கோட்பாடுகள் என்பது அதற்கு முன்பிருந்த பரிணாமக் கோட்பாடுகளில் ஏற்பட்ட தாவிப்பாய்ச்சல் முன்னேற்றமாகும். தூய மாதிரி என்ற பிளாட்டோனிய நோக்கில் இருந்த முந்தைய பரிணாமக் கோட்பாடுகளில் உடைப்பை ஏற்படுத்தியது டார்வினியம் என்பது ஆசிரியரின் வாதம். எனினும் டார்வினியத்தால் விளக்க முடியாததை நவீனத் தொகுப்பாக்கம் எவ்வாறு விளக்குகிறது என்று நயம்பட கூறியுள்ளார். புத்தினவாக்கம் எவ்வாறு நிகழ்கிறது, புத்தினவாக்க நிகழ்வில் மரபணுக்களில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன என்பன போன்ற கேள்விகளுக்கு இனிமேல்தான் விஞ்ஞானம் விடை கண்டுபிடிக்க வேண்டும். அளவு நிலைமாற்றம் பண்புநிலை மாற்றத்தில் முடியும் என்ற இயங்கியல் வெளிச்சம் கொண்டு விளக்க வேண்டியுள்ளது. நீண்டகால அளவில் பெரும் புவிப்பரப்பில் தொடரும் நுண்பரிணாமமே பெரும் பரிணாமம் என்று நவீனத் தொகுப்பாக்கம் கூறினாலும், இரண்டு பரிணாமங்களுக்கும் இருவேறு இயங்குவிதிகள் உள்ளன என்பது ரிச்சர்ட் லெவின் ரிச்சர்ட் லெவோண்டின் ஆகியோரது வாதம். மற்றொரு புறத்தில் தகவமைவிற்கு அதிக அழுத்தம் கொடுத்து டார்வினியத்தை திரிக்கும் குறுக்கல்வாதமும் நிகழ்ந்து வருவதை ஆசிரியர் சுட்டிக் காண்பிக்கின்றார். பரிணாம மாற்றத்திற்கான மூன்று முன்நிபந்தனைகளை விளக்கும் ஆசிரியர் மரபணு நோக்கில் பரிணாமத்தை பார்பவர்கள் குறுக்கல்வாதிகள் என்று ஸ்டீபன் கோல்டு கூறுவதை வாசகர்கள் கவனத்திற்கு ஆசிரியர் கொணர்கிறார். இயங்கியல் விதிகள் உயிரியலில் எப்படி அமலாகின்றன, அவை எப்படி உயிரினங்களின் தோற்றத்திற்கும் பரிணாமத்திற்கும் செயல்படுகின்றன என்ற விளக்கத்துடன் அத்தியாயம் நிறைவு பெறுகிறது.
 
உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வியுடன் துவங்கி உயிரியல் அடுக்குகளை வகைப்படுத்துவதுடன் மரபணுவியல் அத்தியாயம் துவங்குகிறது. உயிரியலில் இருபதாம் நூற்றாண்டின் புரட்சி என மரபணுவியலைக் கூறலாம். மரபணு எனும் பெருங் கருத்தாக்கதை  உடைத்து உள்ளே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு விஞ்ஞான பாடப்புத்தகத்தில் விவரிப்பது போன்று எளிய முறையில் செல், அதன் அங்கங்கள் அதன் இயக்கம் அதில் இடம் பெறும் ஆகுபொருட்கள் ஆகியவற்றை விளக்கியிருக்கிறார். பரம்பரைப் பண்புகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன. தாய் மற்றும் தகப்பனின் பண்புகளில் எவையெவை எந்த அடிப்படையில் வாரிசுக்கு வருகிறது என்பதையும் விளக்குகிறார். செல் கருவை கண்டறிந்து விளக்கிய ஜெர்மன் அறிஞர் ஸ்வான் செல்லுக்குள்ளே இருக்கும கருவும் அதையட்டி குரேமோசோம்களும் எவ்வாறு அமைகிறது என்பது குறித்து அளித்த  விளக்கத்தை வாசகர் கவனத்திற்கு கொண்டு வருகிறார். மரபணு ஆய்வில் ஈடுபட்டவர்கள் பற்றியும் அவர்களின் பங்களிப்பு பற்றியும் மரபணுவியலின் வளர்ச்சியைப் பற்றியும் சாதாரண வாசகனுக்குப் புரியும் நடையில் விளக்கியுள்ளார். மரபணுவியலின் வளர்ச்சியால், நோய்தடுப்பு ஆராய்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும், மரபணுமாற்ற உயிர்வகைகள் எவ்வாறு உண்டாக்கப்படுகின்றது என்பதையும் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்ட விஞ்ஞானிகளும் அவர்களின் பணியும் விளக்கியுள்ளார். நீண்டகாலமாக நடைபெற்ற ஆய்வான மனிதனின் மரபணுக்களிடம் உள்ள சங்கேதக் குறிகளை அடையாளம் காணும் மரபணுத் தொகுப்பு, பற்றி கோடிட்டுக் காட்டி. குளோனிங் முறையில் உயிரினத்தை உருவாக்குவது பற்றியும் ஸ்டெம்செல் ஆய்வு பற்றியும் அறிமுகப்படுத்தி இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.
 
மகத்தான பரிணாம மாற்றமான மானுடத் தோற்றத்தை விவாதிக்கும் அத்தியாயம் மானுட பரிணாமம். பல நூற்றாண்டுகளாக எந்தவொரு விஞ்ஞான கண்டுபிடிப்பையும் அறிவிப்பதற்கு முன்பு மத நிறுவனங்கள் அதை ஏற்றுக் கொள்ளுமா என்ற பயம் இருத்தது. அதன் அடிப்படையையே மாற்றிய மனித பரிணாமத்தை அறிவிப்பது என்பது சாதாரண காரியமல்ல. எனினும், இதை நீண்டகாலம் தள்ளிப் போட முடியாதல்லவா  - ஆம் 1871ம் ஆண்டு டார்வின் எழுதிய மனிதனின் தோற்றம் என்ற நூல் வந்தது. புத்தினவாக்கத்தின் பகுதியாக பாலூட்டிகள் கிளைபிரிந்ததை புரிந்து கொள்ளாமல் மானுடப் பரிணாமத்தை புரிந்து கொள்ள முடியாது. பாலூட்டிகளின் பரிணாம மாற்றத்தில் மூளையின் வளர்ச்சி முக்கியமானது. பாலூட்டிகளின் ஒரு வரிசையான முதனிகளே உடற்கூறு, மூளை, உடலியக்கம், நடத்தை என ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட மாற்றமே மானுடம் தோன்றுவதற்கு அடிக்கோலிட்டன. முதனிகளின் மூதாதையர் சோராக்ஸ் என்ற பேரினத்தின் ஒரு இனம். இன்று வாழக்கூடிய குரங்குகள், மந்திகள் மற்றும் மானுடத்தின் பொதுவான மூதாதை சுமார் 5 கோடி வருடத்திற்கு முன்பு வாழ்ந்த இனத்தின் தொல்லுயிரெச்சம் கிடைத்துள்ளது. சுமார் 50-80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருகால் நடையுடைய ஹோமினிகள் தோன்றின. இதில் ஆப்பிரிக்க மந்திகள் ஆசிய மந்திகளைக் காட்டிலும் மானுடத்திற்கு நெருக்கமானவையாகும்.  புதைபடிமச் சான்றுகளை வைத்து அடையாளங் காணப்படும் மானுட-மந்தி மூதாதைகள்  எஜிப்தொபிதேகஸ், புரோகான்சல், சிவபிதேகஸ், ஆஸ்திரோலாபிதேகஸ் ஆகிய இனங்களாக மாற்றங்கள் பெற்று சுமார் 42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி 10 லட்சம் ஆண்டுகள் முன்பு வரை நடந்த மாற்றத்தின் இறுதியில் ஹோமோ பேரினம் நிலை கொண்டது. அது ஹோமோ ஹாபிளினிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோ நியாண்டார்தாலினிஸ், ஹோமோ சேப்பியன் என்ற நவீன மனிதனாக சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் முன்பு தோன்றியதை விவரிக்கிறார். இப்படி மந்தியினத்திலிருந்து உருவான ஏராளமான இனங்களைப் பற்றியும் அவைகள் தோன்றி வாழ்ந்த ஆண்டுகள் பற்றியும் அவற்றின் உடற்கூறுகள் பற்றியும் விளக்கியுள்ளார். மானுட இனத்தின் உடற்கூறியல். கால்கள், கரங்கள்,  தலை ஆகிய முக்கிய அங்கங்கள், நடத்தை,  உணவு அகியவற்றில் என்னென்ன மாற்றம் ஏற்பட்டத என்பதையும் விளக்கியுள்ளார். கருவிகள், நெருப்பை கையாள்தல், இனப்பெருக்கம், சமூகம், குடும்பம் என மானுடத்தின் விசேட பண்புகளை ஒவ்வொன்றாக விவரித்துள்ளார். மானுடப் பரிணாமத்தை 350 கோடி ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்த மாற்றத்தின் ஒரு சிறிய அத்தியாயமாக பார்க்கிறார் ஆசிரியர். மானுடத்தின் மிகச் சிக்கலான உறுப்பாகிய மூளையானது 20 லட்சம் ஆண்டுகளில் அடைந்த பெருமளவு மாற்றமானது மானுடப் பரிணாமத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. இதர உயிரினங்களின் பரிணாமத்தில் அந்த உயிரினத்தின் எல்லா உறுப்புகளில் எற்பட்ட மாற்றங்களை சமமாக அணுகுவபோல் மானுடனின் மூளைப் பரிணாமத்தை அணுகமுடியாது என்பதால் அதை சற்று விரிவாகவே விளக்கி அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். 
 
உலகிலேயே மிகவும் சிக்கலான பொறி மனித மூளை என்பதால் இதை விவாதிப்பதற்கென்று எழுதப்பட்டதுதான் மானுட மூளை என்ற அத்தியாயம். மானுட மூளையை ஒரு மருத்துவ மாணவருக்கு விளக்குவது போல் மூளையின் கட்டமைப்பற்றி எளிய நடையில்விளக்கி எழுதியுள்ளார். மூளையின் அளவு மாறுபாடும் அதன்விளைவாக அந்த உயிரினத்திற்கு ஏற்படும் பண்புமாறுபாடும் எவ்வாறு இருக்கின்றன என்பதை சில இனங்களோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். மானுட மூளையை பற்றி ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான ரோஜர் ஸ்பெரி, டேவிட் ஹப்பல், தார்ஸ்ட்டன் வீசல் ஆகியோரின் ஆய்வுகள் பற்றி விளக்கியுள்ளார். உள்ளம், மனது, நெஞ்சம் ஆகியவை மானுட மூளையின் சிறப்பான பண்புதான். மனது பொருளடிப்படையிலானது என்று சந்தேகதிற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டாலும் இதை வெறும் பொருளாக குறுக்கி கையாள்வது குறுக்கல்வாதம் என்கிறார் ஆசிரியர். மூளையின் செயல்பாடு எவ்வாறு உள்ளம் என்பதை உருவாக்குகிறது என்பது 21ம் நூற்றாண்டின் தலையாய வினா என்கிறார் ஆசிரியர். நான் எனது என்ற காத்திர உணர்வு ஏன் உருவாகின்றது. அது ஆற்றும் பணிகள் என்ன. மூளையில் நியூரல் நிகழ்வுகளிலிருந்து காத்திர உணர்வு எழுவது எப்படி போன்ற வினாக்களுகான விடையை ஆய்வு செய்த விஞ்ஞானிகளின் கருத்துக்களை தொகுத்தளித்துள்ளார். உணர்வுக்கும் பொருளுக்கும் உள்ள உறவுகள் பற்றி தீவிர வாதப் பிரதிவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் நடைபெற்றுவருகிறது. அவற்றில் சிலவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதை அவசியம் என்று ஆசிரியர் கருதுகிறார். உளச்சிக்கல்களை, உளவியல் ரீதியாக விளக்கங்களும் தத்துவ ரீதியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மூளையியல் துறையில் அறிதலியலில் நிபுணத்துவம் பெற்ற ராமசச்ந்திரன் அவற்றை மூளைக் கட்டமைக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமாக விளக்கமளிப்பதை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். மனித மூளை பரிணாமத்தில் மூளையின் முக்கிய உள்உறுப்பான கண்ணாடி நியூரான்களின் பங்கு பற்றி அறிமுகம் செய்வதேடு அத்தியாயத்தை நிறைவு செய்கிறார்.
 
அறிவியல் என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? அதன் முறைபாடுகள் என்ன? போன்ற கேள்விகளை பன்னெடுங்காலமாக விவாதித்து வருவது அறிவியலின் தத்துவம். இருபதாம் நூற்றாண்டில் அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விவாதிப்பதே அறிவியலின் தத்துவம் என்ற அத்தியாயம். நவீன அறிவியலின் நான்கு விதிகள் என 1. நவீன அறிவியலின் மதிப்பீடுகள் நோக்கம் 2. அறிவியல் கண்டுபிடிப்புகள், முன்னேற்றம் ஆகிவற்றிற்கான விதிமுறைகள் 3. அறிவியல் விமர்சனம் கோட்பாடுகள் ஏற்கவும் நிராகரிக்கவும் கையாளும் நெறிமுறைகள். 4. அறிவியல் விளக்கம் அறிவியலின் இறுதி விளைபொருள் ஆகியவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இதன் அடிப்படையில் உருவாகி வளர்ந்த சில கோட்பாடுகளான தர்க்கவியல் நேரடிவாதம், நவீன சாத்தியவாதம், பெயரளவுவாதம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறார். தர்க்கவியல் நேரடிவாதத்தை வளர்த்தெடுத்த விஞ்ஞானிகளான எர்னஸ்ட் மாக், பியர் துஹேம் ஆகியவர்களின் கருத்தோட்டத்தையும் அவர்களின் பங்களிப்பையும் கூறியுள்ளார். தர்க்கவியல் நேரடிவாதத்தின் உபபிரிவாகிய தர்க்கவியல் கட்டுமானவாதத்தை முன்மொழிந்த ருடால்ஃப் கர்ணாப் அவர்களின் பணிகள் பற்றிய அறிமுகம் செய்து வைக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் பகுப்பாய்வு தத்துவத்தின் மையமான ஆளுமையாக கருதப்படுபவர் என்று ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்படும் லுத்விக் விட்ஜென்ஸ்டைன்அவ்ர்களின் வாழ்வும் பணியும் பங்களிப்பும் பற்றி சற்று விரிவாகவே கூறியுள்ளார். இவர்களைத் தவிர அறிவியலின் தத்துவத்திற்கு முக்கிய பங்களித்த மேதைகளான குயின், கார்ல் பாப்பர், தாமஸ் கூன், பால் பெயர்பென் ஆகியோரின் பணிகள் பற்றி ஆழமாக விவாதிக்கிறார். அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் அடிப்படையாகவும் எந்தவொரு கோட்பாட்டையும் கணிதவியல் ரீதியாக விளக்கினாலே முழுமைபெறமுடியும் என்ற நிலையிலும தனி அந்தஸ்து வகிக்கும் கணிதவியலின் தத்துவத்தையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். கணிதவியலின் தத்துவத்திற்குள்ளே அடங்கியிருக்கும் போக்குகளான பெயரளவுவாதம், தர்க்கவாதம், உள்ளுணர்வு வாதம், கணிதவியல் எதார்த்த வாதம் மற்றும் முறைபாட்டுவாதம் ஆகியவற்றையும் விளக்குகிறார். கணிதவியலின் தத்துவத்தில் குறிப்பிடத்தக்க பங்களித்த குர்ட்கோடல் அவர்களைப் பற்றியும் அவரின் பணிகள் பற்றியும் இந்த அத்தியாயத்தில் விவாதிக்கிறார். பல்கலைக் கழக தத்துவ அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வளர்ந்து வரும் அறிவியல் எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தி விவாதிக்கின்றார். அது எப்படி மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையை வலுப்படுத்துகின்றது என்பதை விளக்கி அத்தியாயத்தை நிறைவு செய்கிறார் .
 
இவ்வளவு பெரும் பரப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்திய ஆசிரியர் இந்திய தத்துவயியலினையும் அதன் மைய இழைகளாக கருதப்படும் தத்துவ போக்குகளையும் ஆன்மிகம் - ஒளிவட்டங்களும் டெட்ரா பேக்குகளும் என்ற இறுதி அத்தியாயத்தில் விவாதிக்கிறார். ஆன்மீகம் என்ற சொல் தமிழனுக்கு அன்னியமானது என்ற கருத்துடன் துவங்கும் இந்த அத்தியாயத்தில் மக்களிடத்தில் உள்ள பயம் நம்பிக்கை வாயிலாக எப்படி ஆன்மிகம் குடிகொண்டுள்ளது என்பதை விளக்குகிறார். இந்திய தத்துவயியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் பிராமணிய இந்துமத்தின் தத்துவ வேர்கள் பற்றியும் அதில் பெரும்பங்கு வகிக்கும் அத்வைதம் பற்றியும் மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் வாதிட்டு இவை கருத்துமுதல்வாதத்தின் இந்திய வடிவம் என்பதை நிறுவுகிறார்.ஆதி சங்கரின் வாழ்க்கை பற்றியும் அவருடைய ஞானவியல் கோட்பாடு பற்றியும், இருப்பமைவு கோட்பாடு பற்றியும், படைப்பு கோட்பாடு பற்றியும் அவர் கூறும் விடுதலை பற்றியும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். எனினும் அதவைதமும் வேதாந்த தத்துவங்கள் மட்டுமே இந்திய தத்துவயியலின் அடிப்படை என்று கூறமுடியாது. அத்வைதத்திற்கு மாற்றாக நிலவிய மற்ற தத்தவப் போக்குகளையும் அறிமுகம் செய்து அவை எப்படி வேதாந்த தத்துவங்களோடு போராடின என்பதை விளக்குகிறார். சங்கரருக்குப் பிறகு வந்த சந்நியாசிகளில் குறிப்பிடத்தகுந்தளவுக்கு தனக்கென்று ஒரு தத்துவப்பள்ளியை உருவாக்கியவர்கள் யாருமில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டில் புகழ்ந்து பேசப்பட்ட விவேகானந்தர், அரவிந்தர் மற்றும் நாராயணகுரு ஆகியோரின் தத்தவங்களை முரணியக்க பொருள்முதல்வாத நோக்கில் உரசிப்பார்த்து அவற்றின் உட்கிடக்கையானது வேதாந்ததில் ஒளிந்திருப்பதை வெளிச்சத்திற்கு கொணர்கிறார் ஆசிரியர். கம்யூட்டர் வந்தாலும் அதைப் பயன்படுத்தி ஜாதகம் பார்க்கும் உலகில் நவீன அறிவியலின் துணைகொண்டு ஆன்மீகக் கருத்துக்களை நியாயப்படுத்தும் போக்கினை சற்று ஆழமாக நாம் ஆராயவேண்டியதிருக்கிறது. இந்தப் போக்கின் பிரதிநிதியாக நாம் ஃபிரிஜோ காப்ராவைக் கொள்ளலாம். ஃபிரிஜோ காப்ராவின் எழுத்துக்ளை அறிமுகப்படுத்தி விமர்சிப்பதின் மூலம் இது புதிய மொந்தையில்  பழைய கள் என்பதைவிட டெட்ராப் பேக்குகளில் அடைத்து வைக்கபட்டிருக்கும் பழைய புளித்த கள் என்பதை அடையாளம் காட்டும் பணியை ஆசிரியர் திறம்படச் செய்து இந்த அத்தியாயத்தை நிறைவு செய்கிறார். 
 
ஏங்கெல்ஸின் இயற்கையின் இயக்கவியல் என்ற புத்தகமானது மின்காந்தவியலின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதோடு முடிகிறது. அன்றைக்கு மேக்ஸ்வெல்லின் கண்டுபிடிப்புகள் பலசிக்கலான கேள்விகளுக்கு விடையளித்தது. அதன்பிறகு எற்பட்ட வளர்ச்சிகளானவை, இயக்கவியலின் அனைத்து விதிகளையும் உறுதி செய்வதாகவே அமைந்ததது என்பதை இப்புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் ஒவ்வொரும் உணர்வர் என்பது எனது கணிப்பு. ஒவ்வொரு அமைப்பு முறைக்கும் உள்ள இயக்கவிதிகள் மற்றொன்றில் ஏன் செல்லுபடியாகவில்லை என்பதை அளவுநிலை மாற்றம் பண்புநிலை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும என்ற விதியானது விளக்குகிறது. நியூட்டனின் இயந்திரவியலானது ஒளியின் வேத்தில் பயணிக்கும் போது பிழையாவதால் ஐன்ஸ்டினின் விதிகள் அமலாகின்றது. அதே ஒளிவேகதில் பயணிக்கும் சிறு துகள்கள் விஷயத்தில் குவாண்டம் இயங்கியல் அமலாவதும், அணுக்கருக்குள் இயங்கும் விதிகள், மூலக்கூறுகள் சேர்ககையில் செயல்படாமல் அதற்கென்று தனி இயங்கு விதியும் மூலக்கூறுகளின் இயங்குவிதிகள், உயிரியல் மூலக்கூறுகளில் செயல்படாததும் என்று வெவ்வேறு விதிகள் இருப்பதை அளவுநிலைமாற்றம் பண்பு நிலை மாற்றம் என்ற இயக்கவியல் விதி கொண்டு விளக்குவதன் மூலம் இருபதாம் நூற்றாண்டின் அனைத்து விஞ்ஞான முன்னேற்றமும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடான முரணியக்க இயக்கவியல் அடிப்படைகளை உறுதிசெய்கிறது. இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானத்தின் வரலாற்றை இந்த புத்தகம் கூறுவதால் இது வெறும் விஞ்ஞானத்தின் வரலாறாக குறுக்கிப் பார்க்க கூடாது.  இந்த விஷயங்களை இருபதாம் நூற்றாண்டின்அனைத்து முக்கியமான போக்குகளையும் கவனத்திலெடுத்து அதன் அடிப்படைகளை விளக்கி அவற்றை மார்க்சிய வெளிச்சத்தில் வகைப்படுத்தி மார்க்சிய பார்வையில் விமர்சிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இப்படி ஒரு பெரிய பணியைச் செய்த தோழர் ராஜனின் உழைப்பு போற்றத் தக்கது. இந்தியாவின் இடதுசாரி இயக்கங்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் தங்களுடைய பணியை மேலும் முன்னெடுத்துச் செல்ல மிகவும் உதவிகரமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. தனது வழக்கமான எள்ளல் நடையுடன், விஞ்ஞானச் சொற்களுக்கு தமிழ்வார்த்தைகளை பிரயோகித்து அதே நேரத்தில் வாசகனின் வாசிப்பு வேகம் தடைபடாமல் விஷயங்களைக் கொடுத்திருக்கிறார். இது தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு நல்வரவு என்றால் மிகையாகாது. 
 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan