தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழகத்தில் பாரதம் : வரலாறு - கதையாடல்
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : முதற் பதிப்பு
ஆசிரியர் :
சீனிவாசன், இரா
பதிப்பகம் : மாற்று வெளியீடு
Telephone : 919382853646
விலை : 130.00
புத்தகப் பிரிவு : தொகுப்பு
பக்கங்கள் : 224
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

பாரதத்தைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட வரலாறு: சில குறிப்புகள் - வீ. அரசு ( பொதுப்பதிப்பாசிரியர் )

காவிய மரபு, நிகழ்த்து மரபு, வழிபாட்டு மரபு எனும் பல்நிலைகளில் பாரதம் தமிழ்ச் சமூகத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதை அறிகிறோம். இத்தன்மையின் பல்வேறு கோணங்கள் குறித்த உரையாடல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். இந்த நோக்கில் தான் இத்தொகுப்பு உருப்பெற்றுள்ளது.
 
சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய பிரதிகளை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம் புதிய பாங்கில் உள்வாங்கிக்கொண்டது. இதன் விளைவாக இனம், மொழி, வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான மாயைகளும் தொன்மங்களும் புரிதல்களும் உருப்பெற்றிருப்பதைக் காண்கிறோம். இதில் எதைக் கொள்வது? எதை விடுப்பது என்பதைப் பற்றி விரிவான உரையாடல் தேவை. இராமாயணம், பாரதம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் உள்வாங்கப்பட்ட விதம் மேற்குறித்த உள்வாங்கப்பட்டதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. முன்பு குறித்தவை ஆதி மரபென்றால், இவை பின்னர் உருவானவை. முன் மரபின் தொடர்ச்சி அறுந்து, இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் மறுகட்டமைக்கும் பணி தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் கலக இயக்கங்கள் இராமாயண,-பாரதப் பிரதிகளை எதிர் நிலையில் அணுகியதை நாம் அறிவோம்.
 
மேற்குறித்த வகையில் இலக்கிய ஆக்கங்கள்வழிக் கட்டப்படும் பிரதிகளுக்கும் சமூக இயக்கங்களுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. இத்தொடர்பின் பல்வேறு பரிமாணங்கள் குறித்த உரையாடல் தமிழ்ச்சமூக வரலாற்றின் உரையாடலாக அமைகிறது. இந்தப் பின்புலத்தில் Ôபாரதப் பிரதியைÕ இத்தொகுப்பில் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளோம். இவ்வுரையாடல்வழிக் கீழ்க்காணும் கருத்தாக் கங்கள் பற்றிய விவாதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 
காலம் காலமாகப் புழக்கத்தில் இருந்த கதை மரபு எவ்வகையில் காவியமாக்கப்பட்டது? பிறமொழித் தழுவலாக அமைந்ததா? அல்லது கதை உள்வாங்கப்பட்டுத் தமிழில் புதிய படைப்பாக உருவாக்கப்பட்டதா? இவ்வகையில் வேறுபட்ட உரையாட லுக்கான வெளி இத்தொகுப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது. இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
 
தமிழில் உருவான வசனகாவிய மரபு, எவ்வகையில் நிகழ்த்து மரபுக்கு உதவியது? புனைகதை மரபுக்கு வசனமே மூலமாக அமைந்தது. ஆனால் காவிய - கவிதை மரபில் உள்ள பிரதிகள் வசன மரபாக ஏன் வடிவம் பெறவேண்டும்? தமிழ் அரங்க மரபிற்கும் வசன மரபிற்கும் ஏற்பட்ட உறவுகளில் பாரதக் கதையின் இடம் எத்தகையது? முதலிய பல வினாக்களை இத்தொகுப்பு முன்னெடுத் துள்ளது. காவிய மரபு - அரங்க மரபு - வசன மரபு எனும் தொடர்பு களை இதன்மூலம் புரிந்துகொள்ள இயலும்.
 
நிகழ்த்து மரபின் பல்வேறு பரிமாணங்களில் பாரதக்கதை தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. காவிய, வசன மரபுகளைப் புறந்தள்ளி தனக்கென புதிய மரபை பாரதக் கதை தமிழக நிகழ்த்து மரபில் கொண்டிருக்கிறது எனலாம். இதனால் மேல் -கீழ், கீழ் - மேல், குறுக்கு - நெடுக்கு எனும் சமூக ஊடாட்டங்கள் பாரதக் கதைவழி நிகழ்ந்துள்ள சுவையான வரலாற்றைத் தெளிவாகக் கண்டுகொள்ள முடிகிறது.
 
தொண்டை மண்டலம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகப் பகுதிகளில் வழிபாட்டு மரபாக பாரதம், இன்றும் உயிரோட்டத்தோடு செயல்படுவதைக் காண்கிறோம். காலந் தோறும் வழிபாட்டு மரபுகளின் மடைமாற்றத்தில் பாரதக் கதை ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிய முடிகிறது. வட இந்தியக் கதை மரபு தென்னிந்திய மரபாக உருப்பெற்ற வரலாறு சுவையானது. வடக்கு - தெற்கு எனும் முரண்கள் இதற்குள் அழிந்து போவதைக் காண்கிறோம். தன்வயப்படுத்திக் கொள்ளும் நிகழ்வும் நடந்தேறி யுள்ளது. சமூக வரலாற்று மாணவர்களுக்கு இவை மிகவும் சுவையானவை. இதைப் போன்ற பல்வேறு செய்திகளை இத்தொகுப்பின்வழி அறியமுடியும்.
 
வைதிக மரபில் உருவான இந்து மதம், ‘நாட்டார் இந்து மதமாக’ உருப்பெற்றிருப்பதாகக் கருதும் ஆய்வுகள் பின் காலனியக் கால ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பெற்றுவருகின்றன. இவர்கள் வைதிக மரபையும் நாட்டார் மரபையும் வெறும் இயங்கு நிலை களாகப் பார்க்கிறார்கள். இதனுள் செயல்படும் தர்க்கபூர்வ அரசியலைப் பற்றி கவலைப்படுவதில்லை; அதனை அவர்கள் புரிந்து கொள்வதும் எளிதன்று. பண்பாட்டு படிமங்களை, அப்பண்பாடு சாராதவர்கள் எவ்வகையில் உணர முடியும்? இந்தப் பின்புலத்தில் ஹில்தபெய்தலின் ஆய்வை அழகரசன் எதிர்கொண்டுள்ள முறை சுவையானது. இத்தொகுப்பில் இவ்வகையான வேறு பல ஆக்கங்களையும் இணைத்திருக்க வேண்டும்.
 
வட இந்தியச் சூழலில் பாரதம் தொடர்பாக நடைபெறும் புலமைச் செயல்பாடுகளையும் தென்னிந்தியப் பகுதியில் நடைபெறுவன வற்றையும் ஒப்பிட்டுக் காணும் தேவையுண்டு. அவ்வாறு நோக்குவதற்கு உதவும் குறிப்புகள் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன.
 
தமிழ்வழி உருப்பெறும் ஆக்கங்களை இங்குள்ள ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எப்போதும் அங்கீகரிப்ப தில்லை. நேரடியான சமசுகிருத மரபையே தங்கள் மரபாகக் கருதும் அதிகாரப் போலித்தனமும் அவர்களிடத்தில் உண்டு. தங்களைப் பாரதக் கதை மரபினராகவே மனதில் கட்டிக்கொள் பவர்கள் இவர்கள். இருபதாம் நூற்றாண்டில் சமசுகிருதத் திலிருந்து நேரடியாகப் பாரதத்தை மொழியாக்கம் செய்தவர்களை மேற்குறித்தக் கண்ணோட்டத்திலும் வாசிக்கலாம். ஏனெனில் தமிழ் ஆக்கங்களாக வடிவம்பெற்ற பாரதக் கதை தொடர்பானவை குறித்து எவ்விதப் பதிவையும் இவர்களின் முன்னோர்கள் செய்வதில்லை. இவர்கள் பாரதத்தை எதிர்கொண்ட முறையை பேரா. ச. வையாபுரிப்பிள்ளை பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்.
 
வீர சரிதங்கள் பற்றிய செய்யுட்கள் பொதுமக்களிடையே பரவி, அவர்களால் நன்கு மதித்துப் பாராட்டப்பெற்று வருதலை அறிந்த இவ்வகுப்பினர் (அந்தண வகுப்பினர்) இதிஹாஸத்தையும் தங்கள் கருத்துப்படி திருத்தி அமைக்க முயன்றனர். உண்மையிலே முற்றும் லௌகிகச் சார்பாயுள்ள இதிஹாஸக் கதையைச் சமயச் சார்பான கதைச் செய்யுளாக அமைத்து, தங்களுடைய தெய்வம் பற்றிய கொள்கைகளையும் சமயக் கிரியைகள் பற்றிய கொள்கைகளையும் இப்பேரிதி ஹாசத்தில் நிரப்பிவிட்டனர். இங்ஙனமாக, தெய்வங்கள் பற்றிய வரலாறுகளும் பல புராதன வரலாறுகளும் அந்தண மரபினர் போற்றி வந்த தத்துவங்களும் நீதிகளும் மகாபாரதத்தில் காணப்படுகின்றன. (ச. வையாபுரிப்பிள்ளை, இலக்கிய உதயம், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி: 4: 168_169, 1991)
 
மேற்குறித்த கண்ணோட்டம் தான் இவர்களை மூலத்தைத் தேடுவதில் அக்கறைகொள்ளச் செய்கிறது. மூலத்தை மொழி பெயர்ப்பதை ஈடுபாடு சார்ந்த புலமைச் செயல்பாடாகக் கருதும் அதே வேளையில், அதற்குள் செயல்படும் உள் அரசியலையும் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் பின்புலத்தில் கும்பகோணம் குழுவினரின் மகாபாரத மொழியாக்கம் குறித்த விவரங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (நவீன இலக்கியத்தில் செயல்பட்ட கும்பகோணம் குழுவையும் சமசுகிருதவழி செயல்பட்ட கும்பகோணம் குழுவையும் பல கூறுகளில் இணைத்துப் பார்க்கலாம். இது தொடர்பாக வேறொரு தருணத்தில் எழுத வாய்ப்பு உள்ளது.)
 
மிக விரிந்து பரந்த பொருண்மை ஒன்றின் அடிப்படைகளை, தமிழ்ச் சூழலை முதன்மைப்படுத்தி இத்தொகுப்பை பதிப்பித்துள் ளார் இரா. சீனிவாசன். இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பாரதத்தோடு வாழ்பவர். இவரின் அவ்வகையான ஈடுபாடு கருதியே இப்பொருண்மையில் ஒரு தொகுப்பைக் கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். புதிய வடிவில், முறையியலில், நவீனத் தொழில்நுட்பம் சார்ந்து ‘நல்லாப்பிள்ளை பாரதம்’ எனும் பிரதியை இவர் பதிப்பித்துள்ளார். நல்லாப்பிள்ளை பாரதம் என்று பேச்சுவழக்கில் மட்டுமே இருந்ததை ‘நூல்வழக்காக’ இவர் உருவாக்கித் தந்துள்ளார். இதற்காக இவரது ஆத்மார்த்த உழைப்பிற்குத் தமிழ்ச் சமூகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. (விரிவுக்குப் பார்க்க: இரா. சீனிவாசன், நல்லாப்பிள்ளை பாரதம் பதிப்பு, முதல் தொகுதியில் உள்ள வாராது வந்த மாமணி’ எனும் அணிந்துரை) தமிழ்ச் சூழலில் நவீன பாரத ஆய்வுப் புலமையாளராக சீனிவாசன்  உருப்பெற்றுள்ளார். இதனை வெளிப்படுத்துவதாக இப்பதிப்பு அமைந்துள்ளது. இப்பணியை நிறைவேற்றிய அவருக்கு எனது அன்பான பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வரிசையை வெளியிடும் தோழர் சிவ. செந்தில்நாதன் அவர்களுக்கும் நூல் உருவாக்கத்தில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அண்மைக் காலங்களில் எனது கையெழுத்தைப் புரிந்துகொண்டு நேர்த்தியாகக் கணிப் பொறியில் உள்ளீடு செய்யும் ஆய்வாளர் அ. மோகனா அவர்களுக்கு நன்றி.
 
======
 
பதிப்புரை -  இரா. சீனிவாசன் (  இணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை மாநிலக்கல்லூரி, சென்னை )
 
தமிழிலக்கியத்தின் முக்கியமான பகுதிகள் பற்றி இதுவரை வெளிவந்துள்ள நல்ல ஆய்வுகளைத் தொகுத்துத் தனித்தனியாக வெளியிட்டால் அப்பொருள் பற்றிப் பரவலாக அறிந்துகொள்ள ஏதுவாக அமையும். மேலும் அப்பொருள் பற்றிய சிறந்த ஆய்வுரைகளை ஒரே இடத்தில் காணமுடியும். இந்த நோக்கங் களை அடைவதை இலக்காகக்கொண்டு பேராசிரியர் வீ. அரசு அவர்கள் தாம் பொதுப்பதிப்பாசிரியராக இருந்து ‘மாற்று வரிசை’ என்ற கட்டுரைத் தொகுதிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே தெருக்கூத்து, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள், சுவரோவியங்கள், பக்தி முதலிய பொருள்கள் பற்றிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் பாரதம் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பணியை அவர் எனக்கு அளித்தார்.
 
கதையளவில் புகழ்பெற்றது பாரதம். தமிழில் பாரதக் கதை தொடர்பான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் பாரத நூல்கள் பற்றியோ தமிழ்நாட்டில் பாரதக் கதையைத் திருவிழாவாகக் கொண்டாடும் திரௌபதியம்மன் விழா பற்றியோ பேரளவுக்கு ஆய்வுகள் வெளிவரவில்லை. பிரசங்கம், கூத்து முதலிய பலவகையான நிகழ்த்துகலை வடிவங்களிலும் பாரதக்கதை மக்களிடம் பரவியுள்ளது. இதைவிட முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது இத்தகைய பல துறைகளிலும் எழுத்து வடிவம் பெற்றுள்ள பிரதிகள் ஏராளமாக உள்ளன என்பதாகும். எனினும், பாரதம் பற்றிய ஆய்வு நூல்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. இது மிக முக்கியமான விவாதத்திற்குரிய பொருளாக அமைகிறது. 
 
இங்கே ஒப்பீட்டிற்காக இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டும் சம அளவிலான மதிப்பீட்டைப் பெற்றவை என்பதாலும் இரண்டும் இதிகாசங்கள் என்பதாலும் ஒப்பீட்டிற்கு இராமாயணமே ஏற்றது. தமிழில் இராமாயணக் கதையைக் கூறும் முக்கியமான இலக்கியத் தகுதி பெற்றது கம்பர் இயற்றிய இராமாயண நூல் ஒன்றே. ஆனால் எத்தனை விதங்களில் இராமாயணம் பற்றிய ஆய்வுகளும் விமரிசனங்களும் விளக்கங் களும் உரைகளும் வந்துள்ளன-? ‘கம்பன் ஆய்வடங்கல்’ என்று கம்பராமாயணம் குறித்த நூல்கள் பற்றிப் பெரிய நூற்பட்டியலே வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இத்துடன் பாரதத்தை ஒப்பிட்டு நோக்கும்போது நமக்குக் கிடைக்கும் காட்சி என்ன? பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப்பிள்ளை ஆகிய மூன்று பெருங்கவிஞர்கள் பாரத நூல்களை இயற்றியுள்ளனர். இவற்றுடன், அரங்கநாதக் கவிராயர் இயற்றிய பாரதம், கச்சாலையர் இயற்றிய மகாபாரதச் சுருக்கம், செய்யிது முகம்மது அண்ணாவியார் இயற்றிய சாந்தாதி அசுவமகம் முதலிய பெருநூல்களும் உள்ளன. சண்முகக்கவிராயர் இயற்றிய இரண்டாயிரம் பக்கங்களில் விரிந்துகிடக்கும் வசன காவியமும் உள்ளது. இவற்றிற்கெல்லாம் மணிமுடி வைத்ததுபோல் பாரதியார் இயற்றிய பாஞ்சாலி சபதம் என்ற காவியமும் உள்ளது. இவ்வளவு நூல்களிருந்த போதும் இவற்றைக் குறித்த ஆய்வுகள் மிகவும் குறைவாகவே வந்துள்ளமை வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. விதிவிலக்காக பாஞ்சாலி சபதம் பற்றி மட்டும் சில ஆய்வுகள் வந்துள்ளன. அவையும் பாரதக் கதையின் சமகாலப் பொருத்தப்பாடு பற்றியும் பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து நோக்கியவை யாகவுமே உள்ளன. கம்பராமாயணத்திற்கு எழுந்துள்ள மிக நுட்பமான ஆய்வுகளைப்போல் பாரத நூல்கள் குறித்து ஏன் ஆய்வுகள் தோன்றவில்லை என்ற வினா எழுகின்றது. 
 
பாரதம் குறித்த ஆய்வுரைகளின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவது எவ்வளவு சிரமமானதென்பதை எல்லோரும் அறியலாம். ‘மாற்று’ வரிசையில் ஏற்கெனவே இத்தகைய கட்டுரைத் தொகுப்புகளை உருவாக்கியவர்கள் எளிதாக அப்பணிகளைச் செய்துமுடித்துவிட்டனர். பெரும்பாலும் ஏற்கெனவே வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்தளித்தாலே அந்தந்தப் பொருள் தொடர்பான பரவலான தகவல்களைப் பெறப் போதுமானதாக இருந்தது. அதாவது ஒரு கட்டுரைத் தொகுப்பை எளிதாக உருவாக்கும் அளவிற்கு அந்தப் பொருள்கள் குறித்த கட்டுரைகள் ஏற்கெனவே வெளிவந்திருந்தன. ஆகவே தொகுப்பாளர்களின் பணி எளிதாக அமைந்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பாரதத்தின் நிலை வேறாக உள்ளது. பாரதம் குறித்த சீரிய கட்டுரைகள் ஒரு தொகுப்புக்குப் போதுமான அளவுக்குக்கூட இன்னும் வெளிவரவில்லை.
 
இந்தப் பணியை ஏற்றுக்கொண்டதும் ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளைத் தொகுப்பது ஒருபுறமாகவும் தொகுப்பில் அவசியம் இடம்பெறவேண்டியவை குறித்த கட்டுரைகளைத் தகுந்தவர்களைக் கொண்டு எழுதுவித்துச் சேர்ப்பது ஒருபுற மாகவும் அமைய வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. அந்தத் திட்டம் பின்வருமாறு:
 
தமிழ்நாட்டில் சமஸ்கிருத பாரதம் மிகவும் அதிகமாக வளர்ந்தது. (இத்தொகுப்பிலுள்ள பேரா. அ.அ.மணவாளன் அவர்களின் கட்டுரையில் இத்தகவல் விரிவாகத் தரப்பட்டுள்ளது) தமிழ்மொழியில் உள்ள பாரதம்பற்றிப் பார்க்கும் அதேவேளையில் சமஸ்கிருத பாரதத்திற்குத் தமிழ்நாட்டின் பங்களிப்புக் குறித்தும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. தென்புல வழக்குப் பாடம் என்று அழைக்கப்படும் சுமார் 99,000 சுலோகங்கள் கொண்ட கிரந்த வரிவடிவிலான மகாபாரதத்தை அச்சில் பதிப்பித்த கும்பகோணம் மத்வவிலாச புத்தகசாலைத் தலைவர் கிருஷ்ணாசாரியர் வெளியிட்ட, ‘கும்பகோணம் பதிப்பு’ என்று பெயர் பெற்ற நூல் குறித்தும் தக்கவர்களைக்கொண்டு விவரமாக எழுதவேண்டும் என்றும் எண்ணினேன்.
 
தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ளது போலவே தென் பகுதியிலும் ஓரிரு இடங்களில் திரௌபதியம்மன் வழிபாடு உள்ளது. இராமநாதபுரம், திண்டுக்கல் முதலிய ஊர்களில் நடைபெறும் விழாக்கள் குறித்து எழுத வேண்டியது அவசியம். தமிழகத்திற்கு வெளியில் பாரதம் தொடர்பான நிகழ்வுகள் இலங்கையில் சிறப்பாக நடைபெறுகின்றன. இலங்கையில் பாரதம் தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம்பெறுவதும் அவசியம்.
 
தமிழ்நாட்டில் பாரதம் என்றவுடன் நினைவுக்கு வருவது தெருக்கூத்து. தெருக்கூத்தைத் தவிர்த்துவிட்டு பாரதம் பற்றிப் பேசமுடியாது என்ற அளவுக்குப் பாரதம் தெருக்கூத்துடன் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டுள்ளது. எனவே தெருக்கூத்துப் பற்றிய கட்டுரைகள் விரிவான அளவில் இடம்பெறவேண்டியதும் அவசியம்.
 
தமிழ்நாட்டில் பாரதக் கதையை அதிகமாகவும் முழுமை யாகவும் மக்களிடம் பரப்பியது பிரசங்கம் என்ற நிகழ்த்துகலை வடிவம்தான். பிரசங்கம் பற்றி ஆய்வுரைகள் எதுவும் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. ஆகவே அதைக் குறித்தும் ஒரு கட்டுரை இந்தத் தொகுப்பில் இடம்பெற வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் பாரதம் திரௌபதி அம்மன் விழாவாகவே அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத நிலை பாரதத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே அதைப்பற்றி விளக்கும் கட்டுரையையும் சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். திரௌபதி அம்மன் வழிபாடு குறித்து ஹில்தபெய்தல் என்ற மேல்நாட்டு ஆய்வாளர் களஆய்வு செய்து நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது ஆய்வுகள் குறித்த மதிப்பீடு இந்தத் தொகுதியில் இடம்பெறவேண்டியது அவசியமானது. 
 
இவ்வாறு மிக விரிவாகத் திட்டமிட்டும் இறுதியில் கிடைத்தவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, பாரதத்தின் எல்லா அம்சங்களையும் காட்டும் அளவில் கட்டுரைகள் இல்லாதது உணரப்பட்டது. இருப்பினும் இப்போது கிடைத்த இந்த அளவிலான கட்டுரைகளையேனும் தொகுத்து வெளியிடுவது தமிழ்நாட்டில் பாரதம் குறித்து அறிந்துகொள்ள ஓரளவுக்குப் பயன்படும் என்று கருதி இந்தக் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப் படுகின்றது.
 
இவற்றில், ‘சண்முகக் கவிராயரின் பாரத வசனகாவியம்’, ‘திரௌபதியம்மன் விழாவும் பாரதப் பிரசங்கமும்’  ‘திரௌபதியம்மன் விழாவில் வளமைச் சடங்குகள்’,  ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ‘திரௌபதி வழிபாடு விரிவடையும் அர்த்தக்களம்: ஹில்த்பெய்தலின் நூல்மீதான விவாதக் குறிப்புகள்’ என்ற அழகரசன் அவர்களின் கட்டுரையும் ‘திரௌபதி விழா: சமயம் - மரபுவழிப்பட்ட நிருவாகமுறை’, என்ற ஏழுமலை அவர்களின் கட்டுரையும் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை என்றாலும் இவை புதிய பனுவல் இதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.
 

இந்தக் கட்டுரைத் தொகுப்பு இரண்டுவகையில் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன்.

  1. தமிழ்நாட்டில் பாரதம் இலக்கியமாகவும் வழிபாடாகவும் உள்ளதையும் அதன் வீச்சு தமிழ்ச் சமூகத்தில் எந்த அளவுக்கு வலிமையானது என்பதையும் அறியலாம். மேலும் ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டைப் பற்றி நோக்கும்போது அதில் திரௌபதி வழிபாட்டின் அம்சங்கள் அவசியம் இடம்பெறவேண்டியவை என்பதை உணரலாம். 
  2. இவ்வளவு முக்கியமான வழிபாடாக இருந்தபோதும் பாரதம் குறித்தோ, திரௌபதி அம்மன் வழிபாடு குறித்தோ போதிய ஆய்வுகள் வெளிவரவில்லை என்பதையும் சீரிய ஆய்வுகள் வெளிவரவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தொகுப்பு எடுத்துரைக்கும் என்று நம்புகின்றேன். 
தமிழ்ச் சமூகத்தில் பாரதம் பற்றிய சீரிய ஆய்வுகள் வெளிவராததற்கு பல காரணங்கள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பழந்தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி ஆரிய, திராவிட இரட்டை எதிர்வை உருவாக்கி விட்டது. அதனால் பாரதம், இராமாயணம் ஆகியவை குறித்த பார்வை வேறு கண்ணோட்டத்தில் எழுந்தது. கம்பன் கழகம் முதலிய அமைப்புகளும் கம்பன் கவிச்சுவையில் ஊறிய சுவைஞர்களும் கம்பராமாயணத்தைக் காப்பாற்றிவிட்டனர். ஆனால் பாரதத்திற்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டின் நிலையோடு வட இந்திய நிலையை ஒப்பிடும்போது அங்கு வேறுவிதமான காட்சிகள் தெரிகின்றன. பூனாவிலுள்ள பண்டார்க்கர் கீழையியல் நிறுவனம் சுமார் நாற்பத்தியேழு ஆண்டுகள் தொடர்ந்து பல அறிஞர்களைக் கொண்டு மகாபாரத மூலபாட ஆய்வுப் பதிப்பை வெளியிட்டது. இந்தப் பதிப்புக்காக அந்த நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கான பண உதவி கிடைத்தது. மகாபாரத்தை உள்ளவாறே தமிழில் மொழிபெயர்க்க முற்பட்ட ம.வீ. இராமானுஜாசாரியர் தனது சொந்தப் பணத்தை இழந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கடுமையாகப் போராடினார். பல அறிஞர்களின் உதவியுடன் இந்தப் பணி நிறைவேறியது. என்றாலும், அதற்காக அவர் பட்ட சிரமங்களுக்கு அளவே இல்லை. மொழிபெயர்த்துத் தரும் அறிஞர்கள், அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணம், உதவியாளர்கள், புத்தகத்தை அச்சிடும் செலவு, அச்சிட்ட புத்தகங்களை விற்றல் முதலிய எல்லா வகைளிலும் அவருக்குப் பல பிரச்சினைகள் எழுந்தன. இத்தனையையும் மீறி அவர் இந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்துமுடித்தார். மேலும் வட இந்தியாவில்
டி.டி கோசாம்பி, அம்பேத்கர், ஐராவதி கார்வே முதலியவர்கள் பாரதம் குறித்து சிறந்த ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆய்வுகள் தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் தோன்றும் என்று நம்புகின்றேன். அவ்வாறு பாரதம் குறித்துச் சிறந்த ஆய்வுகள் வெளிவருவதற்கு இந்த நூல் எள்ளளவு தூண்டுதலாக இருந்தாலும் அதுவே இந்தத் தொகுப்பால் ஏற்படும் பயன்.
 
நன்றியுரை
 
இத்தகையதொரு கட்டுரைத் தொகுப்பை மேற்கொள்ளும் பணியை எனக்கு அளித்த என்னுடைய பேராசிரியர் வீ. அரசு அவர்களுக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும். தனது கட்டுரையை இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்த பேராசிரியர் அ.அ. மணவாளன் அவர்களுக்கு எனது நன்றி உரியது.
 
இத்தொகுப்பில் உள்ள சூக்தாங்கர், பர்ணல், தேஷ்பாண்டே ஆகியோரது கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து உதவிய க. லதா (உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை, ஸ்டெல்லாமேரி கல்லூரி) அவர்களுக்கு எனது நன்றி உரியது. சிவாதிக்ய ரத்நாவளி உள்ளிட்ட பல புத்தகங்களை நான் கேட்டதும் மின்னஞ்சல் வழியாகவே அனுப்பி உதவிய புதுச்சேரி திரு சங்கரநாராயணன் அவர்களுக்கு நன்றி. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளைக் கணினியில் உள்ளீடு செய்துகொடுத்து உதவிய செல்வி இந்திராகாந்தி அவர்களுக்கு நன்றி. கட்டுரைகளை உள்ளிடுதல் அச்சுப் பிழைகளைத் திருத்துதல் முதலிய பணிகளில் உதவிய என் மாணவர்கள் த. குணாநிதி, சே. சீனிவாசன், மு. ஏழுமலை ஆகியோருக்கு எனது நன்றி உரியது. இந்தத் தொகுப்பு உருவாவதற்குப் பலவகையிலும் உதவியவர் நண்பர் ரா. அழகரசன். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்லாமல் எனது எல்லாவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் அவர் அளித்துவரும் ஆதரவு மிகப்பெரியது. அவருக்கு எனது நன்றி. எனது பணிகளுக்கு எப்போதும் உதவிவரும் என்னுடன் பணியாற்றும் முனைவர் சுப. நடராசன் அவர்களுக்கும், முனைவர் ப. தாமரைக்கண்ணன் அவர்களுக்கும் நன்றி.
 
‘மாற்று’ வரிசையில் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வெளியிட்டுவரும் சிவ. செந்தில்நாதன் இந்தப் புத்தகத் தயாரிப்புப் பணியில் ஏற்பட்ட கால தாமதத்தையும் பொருட்படுத்தாமல் நல்ல முறையில் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி உரியது.
 
இரா. சீனிவாசன்,
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை 
மாநிலக்கல்லூரி, சென்னை
 
உள்ளடக்கம்
  • பொதுப்பதிப்பாசிரியர் உரை - வீ. அரசு
  • பதிப்புரை -  இரா. சீனிவாசன்

பாரத நூல்கள்

  1. மகாபாரதக் காப்பிய மரபிற்குத் தமிழிலக்கியத்தின் நன்கொடை -  அ.அ. மணவாளன்
  2. சாந்தாதி அசுவமகம் -  இரா. சீனிவாசன்
  3. சண்முகக்கவிராயரின் பாரத வசனகாவியம் - இரா. சீனிவாசன்

நிகழ்த்து கலைகள் 

  1. பாரதக் கதையும் நிகழ்த்து மரபும் - வீ. அரசு
  2. திரௌபதியம்மன் விழாவும் பாரதப் பிரசங்கமும் - இரா. சீனிவாசன்

ஆய்வுகள்

  1. திரௌபதி வழிபாடு விரிவடையும் அர்த்தக்களம்: ஹில்த்பெய்தலின் நூல்மீதான விவாதக் குறிப்புகள் - ரா. அழகரசன்
  2. திரௌபதி விழா: சமயம் - மரபுவழிப்பட்ட நிருவாகமுறை - மு. ஏழுமலை
  3. திரௌபதியம்மன் விழாவில் வளமைச் சடங்குகள் -  இரா. சீனிவாசன், மு. ஏழுமலை
  4. வில்லிபாரதத்தின் முதல்நூல் வேறு ஆதாரங்கள் - ச.கு. கணபதி ஐயர்
  5. வில்லிபாரதத்தில் வினோதத் திருத்தங்கள் - கி. வேங்கடசாமி ரெட்டியார்
  6. சிவாதிக்யரத்நாவளி - சுந்தரசிவாசாரிய சுவாமிகள்

மொழிபெயர்ப்புகள்

  1. இராமானுஜாசாரியரின் முகவுரை
  2. சூக்தாங்கரின் பதிப்புரை
  3. தொடர்ந்துவரும் மகாபாரதமரபு - தேஷ்பாண்டே
  4. ஐந்திர இலக்கண மரபுச் சிந்தனையாளர்கள்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan